ஆப்கானிஸ்தானின் போருக்குப் பிந்தைய சூழல், தலிபான்களின் அரசியல் நிலைப்பாடு, ஆப்கனை இயக்கும் சீனா, ஆப்கன் ஆட்சி மாற்றத்தால் இந்தியா சந்திக்கப்போகும் பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலுவை நேர்காணல் செய்தோம். அவரின் பதில்கள் பின்வருமாறு,
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாக விமான நிலையங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர். உண்மையில் ஆப்கன் இப்போது எப்படி இருக்கிறது
நிலம் இழந்த மக்கள் வெளியேறுவதை “விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடலில் பார்த்திருப்போம். இப்போது ஆப்கானிஸ்தானில் அதை நேரடியாகப் பார்க்கிறோம். விமான நிலையங்களுக்கு ஓடிவந்த மக்களை மட்டுமே நாம் பார்க்கிறோம். அவர்களாவது, விமானப் பயணம் செய்யும் அளவிற்கு பணத்துடன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள விமானநிலையம் நோக்கி வந்தவர்கள். மற்றவர்களின் நிலை மிகவும் மோசமானது.
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சிதான் நடக்கிறது. அங்கே நடைபெறுவது, இனக் குழுக்களுக்குள் நடைபெறும் சண்டை. பஷ்தூன் இனமக்கள் என்று சொல்லப்படுகிற பழங்குடியினர் 43 சதவீதம் இருக்கிறார்கள். அவர்கள் சண்டையிடுவதைப் பெருமையாகக் கருதும் போர்க்குணம் கொண்ட மக்கள். அவர்கள் பஷ்தூன்வாலியா என்று சொல்லப்படுகிற பத்தான்களின் கையில் அதிகாரம் இருக்க வேண்டும் என்று சண்டையிடுகிறார்கள். உலகமெங்கும் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் போர்கள் நடத்தப்படுகிறது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் மேலோங்கிய பாகிஸ்தானில் மசூதிகளுக்கு உள்ளேயும் குண்டுகள் வெடிக்கிறது; அது மதத்தின் பெயரால் தான் நிகழ்த்தப்படுகிறது. இது போன்ற குண்டு வெடிப்புகள் நடக்கும்போது யாரின் கைகள் மேலோங்கியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் பலியாகிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?
1970-களில் ரஷ்யாவின் கை மேலோங்கியிருந்த போது, அதை உடைப்பதற்காக அமெரிக்காதான் தலிபான்களை வளர்த்து விட்டது. ரஷ்யா துண்டு துண்டாக உடைந்த போது, அமெரிக்க வளர்த்துவிட்ட தலிபான்களே, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை தகர்த்தனர். தான் வளர்த்த பிள்ளைகளே தன் மாரில் பாய்வதை உணர்ந்த அமெரிக்கா, அவர்களை ஒடுக்க தங்களது படைகளைக் கொண்டுவந்து நிறுத்தியது. அப்போதைய, ஆப்கன் குடியரசுத் தலைவர் நஜிபுல்லாவை விளக்கு கம்பத்தில் தூக்கில் கட்டி தொங்கவிட்டனர் தலிபான்கள். இப்படி தலிபான்கள் வன்முறை ஆட்சியை 1996-லிருந்து 2001 வரை நடத்தினார்கள். அதற்குப் பிறகு நாட்டின் நேசப்படைகள் தலிபான்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து அவர்களை வெளியேற்ற அமெரிக்காவின் உதவியை நாடியது.
இதனால், அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகம். அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் ஒரு ராணுவ வீரன் இறப்பது என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும். ஒரு நாட்டில் மதத்தின் பெயரால் இனக்குழுக்களுக்கு உள்ளே நடக்கிற போரில் நமது பொருளாதாரம் பில்லியன் கணக்கில் செலவிடப்பட வேண்டியதன் அவசியம் என்ன என்பதை யோசித்து புதிய ஆட்சியாளர்களான ஜோ பைடனும் - கமலா ஹாரிசும் தங்களது ராணுவப் படையினரை திரும்பப் பெறுகின்றனர். அதன்பிறகு, தலிபான்களின் கை மேலோங்குகிறது. அதற்கு பாகிஸ்தானும் உதவுகிறது.
தலிபான்களின் ஆட்சியில் சுதந்திரம், சமத்துவம் இருக்கும். முன்புபோல இருக்க மாட்டோம் எனப் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளிக்கிறார்கள். ஆனாலும் மக்கள் கலக்கத்தில் உள்ளார்கள். தலிபான்களின் வரலாறு எப்படிப்பட்டது?
ஆப்கானிஸ்தானில் ஷரியத் லா, ஹிஜாபுண்டா இலியா, புர்காபுண்டா இலியா, ஜிகாத் என்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு எந்த இனக்குழு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். ஓரிடத்தில் குண்டு வெடித்து பலர் இறக்கிறார்கள் என்பது தரும் தாக்கத்தை விட ஒரு நபரை நடுரோட்டில் தூக்கிலிடுவது, கழுத்தை அறுப்பது போன்றவை பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தீவிரவாதத்தை தான் காண்பிக்கிறது என்பதே அவர்களின் அடிப்படை சித்தாந்தம். அப்படிப் பார்க்கையில் தலிபான்கள் இது வரை அதைத்தான் செய்கிறார்கள்.
சீனா பெளத்தத்தை பின்பற்றுகிற நாடு. அங்கே இருக்கிற இஸ்லாமியர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்துவதால், பெளத்தர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே சிக்கல் நிலவுகிறது. அப்படி இருக்கும் போது சீனா ஆப்கானிஸ்தானிற்கும் இடையேயான ஒன்றிணைவு எப்படிச் சாத்தியமாகிறது?
தலிபான்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நாங்கள் சீனாவின் உதவியை நாடுவோம்; சீனா புதிய ஆப்கானிஸ்தான் உருவாக உதவி செய்யும் என்கிறார்கள். இது தீவிரவாதத்தை தாண்டிய பயங்கரவாதம். இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிப்பிற்கு பிறகு சிங்கள அரசு அடுத்தபடியாக இஸ்லாமியர்களை குறி வைத்தது. கொழும்பில் அடக்குமுறை செய்யப்பட்டு வருகிறது. பர்மாவில் ரோகிங்கியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். மாலத்தீவுகளிலும் இதைத் தான் செய்கிறது. இந்தியாவில் ஆளும் அரசும் இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. இதுபோன்ற ஒடுக்குமுறைகளின் போது இஸ்லாமியர்களுக்காக மிகப்பெரிய பொருளாதாரத்தை வைத்திருக்கிற அரேபிய நாட்டின் முஸ்லீம் மன்னர்கள் ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டும் ஆனால் ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்றால், மதத்தைத் தாண்டி பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு சீனா திட்டமிடுவார்கள். அதனால் தலிபான்களுக்கு உதவ முன்வரலாம்.
சார்க் அமைப்பில் இருக்கிற எட்டு நாடுகளில் மூன்று நாடுகள் சீனாவிற்கு ஆதரவு தருகிறது. இது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியாவிற்கு பெரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான நிலையை எடுத்து ஆட்சியில் இருக்கிறார்கள். சீனா தனக்கு ஆதரவு நாடுகளை தூண்டிவிட்டு இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்க வைத்து வேடிக்கை பார்க்கும். இந்தியா போன்ற நாட்டை மதத்தாலும் இனத்தாலும் பிரித்து வைத்து ஒரு நிரந்தர அச்சுறுத்தலை செய்ய விரும்புகிறது சீனா. இது இந்தியாவிற்கு மிகவும் நெருக்கடியான நேரம், இந்த நேரத்தில் இந்தியாவின் பாதுகாப்பைத் தான் முன்னிறுத்த வேண்டுமேயொழிய அதை விட்டுவிட்டு எந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம், அங்கே நிலவும் பிரிவினைகளைப் பயன்படுத்தி நமது ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்தை விதைக்கலாம் என நினைப்பதை விட்டுவிடவேண்டும்.
தலிபான்களின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்?
தலிபான்கள் தங்களுக்குள்ளேயே தலைமைக்காக சண்டையிடுகிற நிலைக்கு வருவார்கள். இப்போதே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியில் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்தமாக யார் தலைவர் என்ற சூழல் உருவாகும் போது ஒவ்வொருவரும் மற்ற இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவார்கள். இதுதான் விரைவில் நடைபெறப் போகிறது. இது போன்ற நிலை ஏற்பட்டால், உலகமெங்கும் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு கலக்கத்தை உண்டாக்கும். தலிபான்களோடு ஒப்பிட்டு அப்பாவி முஸ்லீம் மக்களையும் பேசிவிடுவார்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்?
படிக்கப்போன சின்னஞ்சிறு பெண் மலாலா சுடப்பட்டது ஆப்கானிஸ்தானில் தான். ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய கல்வி அறிவு, சுயப் பொருளாதாரம், தற்சார்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்துகிற ஆணாதிக்கம் நிறைந்த அரசாகத் தான் செயல்பட ஆரம்பிக்கும். பெண்களை கல்லால் அடிப்பது, பொது இடங்களில் தூக்கிலிடுவது என 50 வருடங்களுக்குப் பின்தங்கிப் போகிற சூழலுக்கு ஆப்கன் தள்ளப்படும். அது அவர்களுக்கு தான் மிகப்பெரிய ஆபத்து.
நடிகர் கமலஹாசன் ஆப்கானிஸ்தான் போரை முன்கூட்டியே தன்னுடைய விஸ்வரூபம் படத்தில் சொல்லியிருக்கிறார் என சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து?
உலக அளவில் பிரச்சனைகளைத் தேடிப் படிக்கிறவர்களுக்கு முன்னரே சில தகவல்கள் தெரிந்துவிடும். கமலஹாசன் ஆழ்ந்து படிக்கக் கூடியவர், அதனால் ஆப்கானிஸ்தான் போரை முன்னரே சொல்லியிருக்கிறார். சுனாமி பேரலையைப் பற்றி தன்னுடைய படத்தில் கமல் கூறினார் என்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னரே உலகமெங்கும் அந்த வார்த்தை பயன்பாட்டில் தான் உள்ளது. இப்படியெல்லாம் பார்த்தால் கமலைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டும். உங்களுக்கு எப்படி இந்த தகவல்கள் முன்னரே தெரியும் நீங்கள் சிஐஏ உளவாளியா என்று விளையாட்டுத்தனமாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரின் வாசிப்பு அனுபவத்தால் முன்நோக்கிய சிந்தனையை வைத்து எடுக்கப்பட்ட படம். அதனால் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க அவசியமில்லை. ஆனால் அவரின் பார்வையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவரும் ஒரு கட்சியின் தலைவர். உலகளாவிய பிரச்சனைகளை தொடர்ச்சியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறவர்கள் முன்கூட்டியே சில விஷியங்களை யூகித்துச் சொல்ல முடியும். அப்படித்தான் கமலஹாசன் அவர்களின் பார்வையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.