Skip to main content

 நல்ல சாப்பாடு சாப்பிடறதுக்கு...நீங்க ஒரு ஓட்டல் திறக்கலாமே...சரவணபவன் அண்ணாச்சி சாதனை!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

"காமாட்சி பவன்' ராஜகோபால் என்றால் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாது. ‘"சரவணபவன்’ அண்ணாச்சி' என்றால் கடல் கடந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். ஜோசியம், சட்டம், நீதி எல்லாம் அவருக்கு எதிராக மாறினாலும் உழைப்பும் சாதனையும் அவர் பக்கமே உள்ளது. 05-08-1947-ஆம் ஆண்டு அப்போதைய நெல்லை மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள புன்னையடி கிராமத்தில் பிச்சை நாடார்-மணியம்மாள் தம்பதிக்கு மூத்தது பெண் குழந்தை. இரண்டாவது மகனாக பிறந்தவர் ராஜகோபால். இவருக்கு இரண்டு தம்பிகள். பனையேறியான தந்தையின் வருமானம் குடும்பத்தின் பசியாற மட்டுமே பயன்பட்டதால், ஏழாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ராஜகோபால், பிழைப்பு தேடி தனது 12-ஆவது வயதில் சென்னைக்கு வந்திறங்கினார். மண்ணடியில் இருந்த சின்ன அளவிலான டிபன் மற்றும் டீக்கடையில் டேபிள் க்ளீனராக வேலைக்குச் சேர்ந்தார்.

 

saravana bhavan



மதிய நேரம் கடை முதலாளி ஓய் வெடுக்கும் போது டீ ஆத்த கற்றுக்கொண்ட ராஜகோபால், மெல்ல மெல்ல டிபன் வகை களையும் போடக் கற்றுக்கொண்டார். 17-ஆவது வயதில், கே.கே.நகரில் நண்பர்கள் உதவியுடன் ‘"முருகன் ஸ்டோர்'’ என்ற மளிகைக் கடையை ஆரம்பித்தார். அப்போது அந்த ஏரியா ரவுடிகளை சமாளிப்பது ராஜகோபா லுக்கு பெரும்பாடாக இருந்தது. அதே சமயம், தரமான மளிகைப் பொருட்களை சுத்தமான முறையில் வழங்கியதால், முருகன் ஸ்டோருக்கு வாடிக்கையாளர்கள் பெருக ஆரம்பித்தனர். அந்த வாடிக்கையாளர்களில் சுங்க இலாகாவின் அதிகாரியான கணபதி ஐயர், ராஜகோபாலுக்கு மிக நெருக்கமானார்.

 

saravana bhavan



மளிகைக் கடைக்கு பொருட்கள் சப்ளை செய்யும் கம்பெனியின் ரெப்ரசென்டேடிவ்கள், "அண்ணாச்சி எங்கள மாதிரி ஆட்கள் மதிய நேரம் நல்ல சாப்பாடு சாப்பிடறதுக்கு தி.நகர் தான் போக வேண்டியிருக்கு. இந்த ஏரியாவுல நீங்க ஒரு ஓட்டல் திறக்கலாமே''’என அடிக்கடி கூறியிருக்கிறார்கள். ராஜகோபால் மனதுக்குள் மெல்லிய நம்பிக்கை விதை விழுந்தது. கணபதி ஐயரும் ராஜகோபாலும் தீவிர முருக பக்தர்கள் என்பதால், மாத கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். ஒருமுறை திருவழிச்சுலம் என்ற ஊரில் ஓய்வெடுத்தபோது, ஓட்டல் ஆரம்பிக்கப்போகும் தனது ஆசையை கணபதி ஐயரிடம் ராஜகோபால் சொல்ல, அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

 

rajagopal



கே.கே.நகரில் "காமாட்சி பவன்' என்ற ஓட்டல் நஷ்டத்தில் ஓடி, மூடும் நிலைக்கு வந்ததைக் கேள்விப்பட்டு, கைவசம் இருந்த தொகைக்கு அதை வாங்கி, கணபதி ஐயர் மற்றும் ராமானுஜம் என்கிற அரசு அதிகாரி ஆகியோரை முதல் போடாத முதலாளிகளாக சேர்த்துக்கொண்டு, முருகன் மீதிருக்கும் பக்தியால், காமாட்சி பவனை 14-12-1981-ல் "சரவணபவன்' என பெயர் மாற்றினார். தரத்தையும் சுவையையும் மட்டுமே குறிக் கோளாகக் கொண்டதால், ஆரம்பத்தில் சரவண பவனின் முதல் கிளையும் நஷ்டத்தில் தள்ளாடத் தான் செய்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிட வில்லை மூவரும். சரவணபவனின் ருசி கண்டவர்கள் பெருகியதால், அதன் கிளையும் பெருக ஆரம் பித்தது. 1983-ல் சரவணபவனின் இரண்டாவது கிளை தியாகராய நகரிலும், 84-ல் அசோக்நகரிலும், 89-ல் பாரிமுனை, அதன் பின் புரசைவாக்கம் என கிளைகள் வேர்விட ஆரம்பித்தன.

 

saravana bhavan



இந்தியாவில் 39 கிளைகளையும் உல கெங்கும் 43 கிளைகளை யும் பரப்பியிருக்கும் சரவணபவனின் சாதனை சரித்திரத்தின் அத்தனை பக்கங்களிலும் அண் ணாச்சி ராஜகோபாலின் உழைப்பு மட்டுமே நிரம்பியிருக்கிறது. சென்னை அசோக் நகர் வீட்டிலிருந்து அதிகாலை 3 மணிக்கு கிளம்பி மெரினா பீச்சிற்கு நடைபயிற்சிக்குச் செல்வார் அண்ணாச்சி. சென்னை கிளைகளின் அனைத்து மேனேஜர்களும் அங்கே ஆஜராகி யிருப்பார்கள். நடைபயிற்சியின்போதே, உணவு தயாரிக்கும் முறை, சுவை, தரம் இவை பற்றி மேனேஜர்களுடன் விவாதித்து முடித்து, காலை 6:00 மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். அனைத்துக் கிளைகளிலும் தயாரான காலை டிபன் வகைகள் 6:30-க்கு அசோக்நகர் வீட்டிற்கு வந்துவிடும். அனைத்தையும் சிறிதளவு ருசி பார்த்து, அண்ணாச்சி ஓ.கே. சொன்ன பிறகுதான், 7:30-க்கு விற்பனையை ஆரம்பிப்பார்கள். அதன்பின் மார்க்கெட்டிலிருந்து காய்கறி குடோனுக்கு வந்திறங்கும் காய்கறிகளின் தரத்தை பரிசோதித்த பின்தான் உணவு சமைக்க அனுப்புவார். அதே போல் அனைத்துக் கிளைகளின் மதிய உணவு சாம்பிள்களையும் வடபழனி கிளையில் காலை 11 மணிக்கு சாப்பிட்டுப் பார்த்து ஓ.கே. சொல்வார் அண்ணாச்சி.

திடீரென எதாவது ஒரு கிளையின் சமையல் அறைக்குள் நுழையும் அண்ணாச்சி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தலையில் முண்டாசுடன் ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பார், பாத்திரங்களை கழுவுவார். சில கிளை களுக்கு அண்ணாச்சி யின் மனைவி வள்ளி யம்மையும் திடீர் விசிட் அடித்து உணவின் தரத்தை பரிசோதிப்பாராம். நெல்லையிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் இருக்கும் ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் ஓலைக் குடிசை யில் காபிக் கடை ஒன்று இருந்தது. சுத்தமான பசும்பாலில் அபார மான சுவையுடன் இருக்குமாம் அந்தக் கடை காபி. இதை நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டதும், தனது சொந்த ஊரான புன்னையடிக்குச் செல்லும்போது, அந்த கடையின் காபியை ருசித்துவிட்டு, அதே போன்ற காபியை தனது கிளைகளிலும் வழங்கினார் அண்ணாச்சி. அந்த காபி எப்படி சுவையாக இருக்கிறது என்ற நுணுக்கத்தை, தனது நண்பர்களிடம் சொல்லி அசத்தியிருக்கிறார் ராஜகோபால்.


அதேபோல் சென்னை அண்ணா நகர் அடையார் ஆனந்தபவனின் தோசை, தனது ஓட்டலின் தோசையைவிட சுவையாக இருப்பதைக் கேள்விப்பட்டு, அந்த ஓட்டலுக்குச் சென்று, டிரைவரை அனுப்பி, காரில் இருந்தபடியே அந்த தோசையை ருசித்து சாப்பிட்டிருக்கிறார் அண்ணாச்சி. மற்ற ஓட்டல்களின் உணவுப் பண்டங்கள் சுவையாக இருப்பதைக் கேள்விப்பட்டால், அதை பாஸிடிவாக எடுத்துக்கொண்டு, அதைவிட சுவையாக தனது ஓட்டல்களில் வழங்குபவர் ராஜகோபால். அதேபோல் முதன்முதலாக அம்பாசிடர் கார் வாங்கியதும் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த நைனா என்பவரை அடிக்கடி தள்ளுவண்டி டிபன் கடைகளுக்கும் சில ஓட்டல்களுக்கும் அனுப்பி, உணவு பதார்த்தங்கள் வாங்கி ருசி பார்க்கும் பழக்கமுடையவர் அண்ணாச்சி. கடைநிலை ஊழியர்கள் மீது அதிக கரிசனம் கொண்டவர் அண்ணாச்சி. டேபிள் க்ளீன் பண்ணும் சிறுவன் ஒருவனை அசிஸ்டெண்ட் மேனேஜர் ஒருவர், ""எச்சில் இலை எடுக்குற நாயே'' என திட்டியிருக்கிறார். இதை அந்த சிறுவன் அழுதபடியே அண்ணாச்சியிடம் சொல்ல, தனது அறைக்கு அந்த அசிஸ்டெண்ட் மேனேஜரைக் கூப்பிட்டு, "பளார்' விட்டதோடு, ""நானும் டேபிள் க்ளீன் பண்ணித்தாம்பா இந்த நிலைக்கு வந்திருக்கேன். அதனால யாரையும் எளக்காரமா பார்க்காத'' என அந்த அசிஸ்டெண்ட் மேனேஜரின் தோளில் கைபோட்டு, அடித்ததற்கு சாரி கேட்டாராம் அண்ணாச்சி.

1984-ல் டீமாஸ்டராக சரவணபவனில் வேலைக்குச் சேர்ந்து, அசிஸ்டெண்ட் மேனேஜராகி, பதினாறு வருடங்கள் பணிபுரிந்த கங்காதரன் என்பவரிடம் அண்ணாச்சி ராஜகோபாலின் குணநலன்கள் குறித்துக் கேட்டோம். ஒரு கம்பெனியில 15 பேரு இருந்தாலே யூனியன், ஸ்டிரைக், அப்படி இப்படின்னு இருக்கும். ஆனா 15 ஆயிரம் பேர் வேலை பார்க்கும் சரவணபவனில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் சுமுகமா போச்சுன்னா அதுக்கு அண்ணாச்சியின் அரவணைப்பு தான் காரணம். இங்கேயே தங்கியிருக்கும் ஊழியர்களின் பெற்றோர்களுக்கு அப்போதே மாதம்தோறும் 250 ரூபாய் அனுப்புவார். தகுந்த நேரத்தில் பதவி உயர்வு, ஊக்கத் தொகை என ஊழியர்களை எப்போதும் உற்சாகத்திலேயே வைத்திருப்பார். இப்படி அவரின் பெருமைகளை சொல்லிக்கிட்டே போகலாம். மதிவழிப் பயணம் மாறியதால், அவரின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது''’என பெருமூச்சுவிட்டார் கங்காதரன்.