பெங்களூருவில் அறிமுகமாகிறது ஹெலி டாக்ஸி!
பெங்களூரு போன்ற எல்க்ட்ரானிக்ஸ் நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக்கொண்டே போகிறது.
நகரத்திலிருந்து சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்குள் மூச்சுத் திணறிவிடுகிறது. அவசரமாக விமானப் பயணத்திற்கு செல்வது கடினமான காரியமாக இருக்கிறது.
வேலை நேரங்களில் விமான நிலையத்திற்கு காரில் செல்லவே மூன்று மணிநேரம் ஆகிறது.
ஏசி காரில் விமான நிலையத்திற்கு செல்ல 1500 முதல் 2500 ரூபாய் வரை வாடகை கேட்கிறார்கள். இது வரும் காலத்தில் அதிகமாகத்தான் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கஷ்டங்களில் விரைவில் பெங்களூரு விடுதலை பெறும் என்று கூறப்படுகிறது.
நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வாடகை ஹெலிகாப்டர் சர்வீஸ் இயக்கப்பட இருக்கிறது. நாட்டில் முதன்முறையாக பெங்களூருவில்தான் இந்த சர்வீஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.
பிரேசில் நாட்டில் இதுபோன்ற வாடகை ஹெலிகாப்டர் சர்வீஸ் இயங்குகிறது. அந்த மாதிரியில்தான் பெங்களூருவில் இது அறிமுகமாகிறது. இந்த சர்வீஸை தும்பி ஏவியேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நடத்துகிறது.
வாடகைக் கட்டணத்தை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், நகரிலிருந்து விமான நிலையத்துக்கு 15 நிமிடத்தில் செல்லும் வகையில் சர்வீஸ் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல அடுக்கு மாடிக் கட்டிடங்களின் மீது ஹெலிகாப்டர் இறங்குதளங்களை அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. சுமார் 90 ஹெலிபேடுகளை அமைத்து ஹெலி டாக்சிகளை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கர்நாடக மாநில தொழில்கள் மற்றும் வர்த்தக அமைச்சர் தேஷ்பாண்டே தெரிவித்திருக்கிறார்.
இந்த ஹெலிகாப்டர்கள் 6 பேர் பயணிக்கும் வகையில் இருக்கும். சர்வீஸை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேசி வருவதாகவும் தும்பி ஏவியேசன் நிறுவனம் கூறியிருக்கிறது.
-ஆதனூர் சோழன்