Skip to main content

மாரடைப்பு; பைபாஸ் - விளக்கும் மருத்துவர் சென் பாலன்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Heart Attack.. Bypass.. - Dr. Chen Balan explains

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலை தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையிலும், அவரது திடீர் உடல் நலக்குறைவை சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர் சென் பாலனை சந்தித்து மாரடைப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அவர் நமக்கு அளித்த பேட்டி;

 

நல்ல உடல் நிலையோடு இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுமா?

 

நிச்சயமாக நெஞ்சு வலி எப்போது வேண்டுமானாலும் வரும். நல்ல ஆரோக்கியமாக இருந்தவர் அடுத்த நிமிடத்தில் அவருக்கு மாரடைப்பு வந்தது போன்ற எத்தனையோ செய்தியை நாம் படிக்கிறோம். நன்றாக இருக்கும் ஒருவருக்கு அடுத்த ஐந்தே நிமிடத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரே போகும் அளவிற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். எனக்கு மாரடைப்பு வராது என்று மக்கள் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரலாம்.

 

பைபாஸ் சிகிச்சை என்றால் என்ன?

 

ரத்தவோட்டம் இருந்தால்தான் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் வேலை செய்யும். அதே போல், மனிதனின் முக்கியமான உறுப்பான இதயத்திற்கும் ரத்தவோட்டம் தேவைப்படும். இதயத்திற்கு சப்ளை செய்யும் ரத்த குழாயில்  இரண்டு, மூன்று கிளை இருக்கும். அந்த கிளையில் அடைப்பு ஏற்பட்டால், இதயம் வேலை பார்ப்பதற்கு தேவையான ரத்தம் அதற்கு கிடைக்காது. அதை தான் நாம் மாரடைப்பு என்கிறோம்.

 

இந்த அடைப்பை இரண்டு வகையில் தீர்க்கலாம். முதல் வகையான BCI என்ற முறையில், ரத்த நாளம் வழியாக ஏதாவது ஒரு சிறிய ஊசி மாதிரியான கம்பியை செலுத்தி இதய ரத்த குழாயில் இருக்கின்ற அடைப்பை எடுத்து ரத்த ஓட்டத்தை சீர் செய்வார்கள்.

 

அடுத்ததாக பைபாஸ் சர்ஜரி என்று சொல்லலாம். அதில் ரத்தக் குழாயில் பெருமளவு சேதம் அடைந்திருப்பது அல்லது ரத்த குழாயில் கொழுப்பு படிந்து இருக்கிறது எனும்போது பைபாஸ் சிகிச்சை மேற்கொள்வோம். அந்த சிகிச்சையில், உடம்பில் உள்ள வேறு ஒரு இடத்தில் சிறிய ரத்த குழாயை எடுத்து இதயத்தில் ஏற்பட்ட ரத்த குழாயில் பைபாஸ் மூலம் ஒன்றிணைத்து ரத்தத்தை சீர் செய்வோம். இந்த முறையை தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்திருக்கிறார்கள்.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்த பிறகு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர முடியுமா?

 

இது அவருடைய  மருத்துவ நிலையை பொறுத்து தான் இருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் கூட இதயத்தில் ரத்த அழுத்தம் சீரற்று இருக்கலாம். அதே போல் ரத்தம் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கு சில மருந்துகள் பயன்படுத்துவார்கள். அந்த மருந்து சில நேரத்தில் மூளையில் கசிவு ஏற்பட்டு வலிப்பு வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. எனவே அவருடைய மருத்துவ நிலையை  பொறுத்து தான் அவருடைய ஒத்துழைப்பு இருக்கும். ஒருவேளை, இதெல்லாம் சரியாக இருந்தால் அவரால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வாய்ப்பு இருக்கிறது.  

 

செந்தில் பாலாஜிக்கு 70% ரத்த குழாய் அடைப்பு என்று மருத்துவ குழுவினர் சொல்கிறார்கள். இது எந்தளவுக்கு அபாயகரமானதாக இருக்கும்?

 

இதய அடைப்பை பொறுத்தவரையில் அபாயகரத்தை ஒரு குறிப்பிட்ட அளவுகோலில் வைத்து சொல்ல முடியாது. மேலும், ரத்த அடைப்பு பாதிப்பு அவருடைய ரத்த தேவையை பொறுத்து தான் சொல்ல முடியும். அதே மாதிரி இதய தசை உயிரோடு இருப்பதற்கான ஆக்ஸிஜன் சீராக கிடைக்கிறதா என்பதை வைத்து தான் சொல்ல வேண்டுமே தவிர வெறும் சதவீதத்தை வைத்து மட்டும் அபாயகரத்தை சொல்ல முடியாது.

 

அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் கால்களை எட்டி உதைக்கிறார். இதனை பலரும் கேள்விக்குள்ளாக்கி வருகிறார்கள். நெஞ்சுவலி ஏற்பட்ட ஒருவர் அப்படி செயல்பட முடியுமா?

 

ஒருவரை தண்ணீரில் அழுத்தும்போது, சில நொடிகளில் அவருக்கு மூச்சு திணறி ஒரு வித பயம் ஏற்பட்டு தன்னை அறியாமல் எதையோ செய்வார்கள். அதே போன்ற பயம் தான் மாரடைப்பு ஏற்படும் போதும் வரும். ஏனென்றால், மூளை தனக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது தன்னுடைய சக்தியை பயன்படுத்தி அனைத்து ஆக்ஸிஜனையும் எடுத்துக் கொள்ள நினைக்கும். இந்த சூழ்நிலையில், நோயாளிகள்  எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை யூகிக்க முடியாது.

 

மூச்சுக் காற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர் கை கால் ஆட்டுவது, உதைப்பது போன்ற அனைத்து  வாய்ப்பும் இருக்கிறது. சில நேரத்தில் இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்தக் குழாய் இறுகுவதால் மூச்சு திணறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் முதலுதவிக்காக ஒரு மாத்திரையை கொடுக்க வேண்டும். அந்த மாத்திரையை கொடுத்தால், ரத்த குழாய் உடனடியாக விரிவடைந்து இதயத்திற்கு தேவையான ரத்தம் திரும்ப கிடைக்கும். அந்த சூழ்நிலையின் போது அவர் சாதாரண நிலைக்கு வருவார்.