ராஜீவ்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனோடு இந்த வழக்கில் சிறையிலிருந்த மற்ற 6 பேரையும் விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்த நிலையில் இதுதொடர்பாகவும், ஆளுநரின் நடவடிக்கை பற்றியும் விசிக துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். தீர்ப்பு வந்த உடனேயே அதை விசிக தலைவர் வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது காலம் கடந்த விடுதலை என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பல ஆண்டுக்காலம் இந்த வழக்கை மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி இத்தனை ஆண்டுக்காலம் நீதிமன்றத்தில் கிடப்பில் கிடக்கக் காரணமாக அமைந்தது.
ராஜீவ்காந்தி கொலையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆனால் இந்த வழக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்குக் கூட அழைக்கவில்லை என்பதை நாம் கூறித்தான் ஆக வேண்டும். இவர்களை மட்டும் தான் கைது செய்தார்கள். அவர்களும் இத்தனை ஆண்டுக்காலம் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். தண்டனைக் காலத்தில் இவர்கள் தாக்கல் செய்த எந்த ஒரு கருணை மனு மீதும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக ஆளுநர்கள் கண்டும் காணாமல் இருந்த காரணத்தாலேயே இவர்கள் இத்தனை ஆண்டுக்காலம் சிறையில் கஷ்டப்பட வேண்டியிருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அதற்கான முயற்சிகளை மாநில அரசுகள் எடுத்தாலும் ஆளுநர்கள் அதனை ஏற்றுக்கொள்வதாயில்லை. ஆளுநர்கள் முடிவெடுக்கக் கால அவகாசம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் இந்த விவகாரங்களைக் கிடப்பில் போட்டு வைத்தனர். தற்போது உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது. ஆளுநர் இந்த விவகாரத்தில் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை. அவர் ஆளுநராக இருப்பதற்கே தகுதியில்லை. அரசியல் அமைப்பு படி பதவிப்பிரமாணம் செய்திருக்கும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்றார்.