Skip to main content

எச்.ராஜாவின் பேச்சு பாஜகவுக்கே அவமானம்: நாளை கண்டன ஆர்ப்பாட்டம்: சுப.வீரபாண்டியன் பேட்டி

Published on 06/03/2018 | Edited on 06/03/2018


 

h.raja facebook


எச்.ராஜாவின் பேச்சு பாஜகவுக்கே அவமானம் என்றும், நாளை எச்.ராஜாவையும் பாஜகவையும் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடசர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்படும் பொழுது பாரத் மாதா கீ ஜெய் எனவும் பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். 
 

லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில்,
 

லெனின் யார்
அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு
கம்யூனிசத்தின்கும் இந்தியாவிற்கும என்ன தொடர்பு
லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபூராவில்
இன்று திரிபூராவில் லெனின் சிலை
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை

என குறிப்பிட்டுள்ளார்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன்,
 

நாட்டின் வன்முறையை தூண்டும் எச்.ராஜாவையும், பாஜகவையும் கண்டித்து நாளை காலை 11 மணிக்கு பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சி எல்லைகளை கடந்து அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைக்கிறோம் என்றார். 
 

மேலும் பேசிய அவர், திரிபுராவில் லெனின் சிலையை சேதப்படுத்தியதற்கு திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். லெனின் உலகத் தலைவர்களில் ஒருவர். மாபெரும் சிந்தனையாளர். அவருடைய சிலையை உடைப்பது என்பதே ஒரு அவமானம். லெனினுக்கும் இந்தியாவிக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரத்தை இவர்கள் யாரும் இனி பயன்படுத்த மாட்டார்களா. இதுபோன்ற கருத்துக்கள் அடிப்படை நாகரீகம் இல்லாதவை. வன்முறையை தூண்டக் கூடியவை. 
 

பெரியார் சிலையையும் உடைப்போம் என்கிறார் எச். ராஜா. நாளை ஆட்சி வந்தால் என வீராதி வீரர்கள் காத்திருக்க வேண்டிய தேவை என்ன. பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்றால் இப்போதே உடைத்து பார்க்கட்டும். தமிழ்நாட்டில் அது என்னவாகும் என்பதை உடைத்ததற்கு பிறகு அவர்கள் அறிந்து கொள்வார்கள். இதுபோன்ற வன்முறைப் பேச்சை ஒரு கட்சியின் தேசிய செயலாளர் பேசுகிறார் என்றால் அந்த கட்சியும் அதனை பார்த்துக்கொண்டிருக்கிறது என்றால், இதைவிட அந்தக் கட்சிக்கு அவமானம் என்ன இருக்க முடியும்.
 

suba veerapandian


எனவே இதனை வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியாது. யாரோ ஒருவர் தெருவில் போகிறவர் பேசின பேச்சு என்று கருத முடியாது. ஆகவே தமிழகம் முழுவதும் திரண்டு எழுந்து இதனை கண்டிக்க வேண்டும். நாளை காலையிலேயே சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு அருகே அத்தனை இன உணர்வாளர்களும், ஜனநாயகத்தை விரும்புகிறவர்களும், அமைதியை விரும்புகிறவர்களும், சமூக நீதியை, பெண் விடுதலையை போற்றுகிறவர்கள் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு காவல்துறை மறுக்குமானால் அந்த அரசு பெரியாருக்கு நியாயம் செய்கிறதா இல்லையா என்பது தெரிந்து போகும். இவ்வாறு கூறினார்.