நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பது என்பது மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. நீதிமன்றத்தின் மாண்புகளை அவமதிப்பது என்பது மிகப்பெரிய குற்றமாகும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் ஊர்வலம் போகவும் கூட்டம் நடத்தவும் முயன்றார் எச்.ராஜா. அதற்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. நீதிமன்ற உத்தரவைக் காட்டி போலீஸார் எச்.ராஜாவை தடுத்தபோது, நீதிமன்றமாவது மயிராவது என்று ஆவேசமாக கூறினார்.
இந்த விவகாரம் கடுமையான சர்ச்சையை உருவாக்கியது. உடனே, அந்த வீடியோ காட்சியில் பேசியது தான் இல்லை என்றும், யாரோ டப்பிங் கொடுத்திருக்கிறார்கள் என்றும் எச்.ராஜா மறுத்தார். ஆனாலும், உயர்நீதிமன்றத்தின் ஒரு அமர்வு தாமகவே முன்வந்து எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்தது. உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதைப்பற்றிக் கருத்துத் தெரிவித்த எச்.ராஜா தன்னை ஆஜராகும்படி உத்தரவிட உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று கூறினார். இதுவும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் அனுப்பிய வாங்கப்படாமல் திரும்பியது. இந்நிலையில், அக்டோபர் 22 ஆம் தேதி எச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, 22 ஆம் தேதி நேரில் ஆஜரானார் எச்.ராஜா. எட்டாவது கோர்ட் ஹாலுக்குள் வந்த எச்.ராஜா வழக்கறிஞர்கள் அருகில் போய் அமர முயன்றிருக்கிறார். அதற்கு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நீதிபதி இருக்கைக்கு முன் போய் நின்றார். அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் என்ன இருக்கிறது என்பதை நீதிபதி சத்தமாக வாசித்தார்.
‘போலீஸார் என்னை தடுத்தபோது உணர்ச்சிவயப்பட்டு தெரியாமல் பேசிவிட்டேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்” என்று அதில் எச்.ராஜா கூறியிருந்தார். இதை ஏற்று வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த வழக்கறிஞர்கள் அவரை மன்னித்திருக்கக் கூடாது என்றும், இது எதிர்காலத்தில் இந்த தவறை எளிதாக செய்வதற்கு காரணமாகிவிடும் என்றும் கூறினார்கள்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன்தான் ராஜா நீதிமன்றத்துக்கு வெளியே வர முடிந்தது.