பரபரப்பான சூழலிலும் கலகலப்பாக அரசியல் களம் இருக்கிறது என்றால் அங்கே முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார் என்பது உறுதி. கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவிவகித்த துரைமுருகனுக்கு காவிரி விவகாரம் உள்பட தமிழக நதிநீர் பிரச்சினைகள் அனைத்தும் அத்துப்படி. பல்வேறு கேள்விகளுடன் அவரை சந்தித்தது நக்கீரன்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாநில உரிமைகளை மீறுவதாக தி.மு.க. குற்றம்சாட்டுகிறது. ஆனால், எந்த உரிமையையும் மீறவில்லை. என்னை பணிசெய்ய விடாமல் தடுத்தால், ஏழாண்டு சிறைத்தண்டனை என ஆளுநர் சொல்கிறாரே?
முதல்வர், தலைமைச்செயலாளர், ஆளுநர் என ஒவ்வொருவருக்குமான அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் என்பவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கில் சீர்கேடுகள் இருக்கும்போதோ, சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மை இழக்கும்போதோ மத்திய அரசுக்கு தெரிவிக்கும் ஏஜெண்ட் மட்டுமே. அதேபோல், அமைச்சரவை, சட்டசபை கூடுவது தொடர்பான தகவல்களை அவருக்கு தெரியப்படுத்தலாம் அவ்வளவுதான். ஆனால், கலெக்டர், தாசில்தார், வருவாய் அதிகாரிகளின் நிர்வாக விவகாரங்களில் ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் தலையிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த இடத்திலும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. அது முதல்வர், அமைச்சர்களின் வேலை. இதையெல்லாம் தட்டிக்கேட்க ஆளுங்கட்சிக்கு சொரணை இல்லை. மாநில சுயாட்சியை நிலைநாட்ட விரும்புவதால் எதிர்க்கட்சியாக நாங்கள் கேட்கிறோம்.
காவிரி நீரை மீட்டு விட்டதாக மாநிலம் முழுவதும் ஆளும்கட்சி சார்பில் வெற்றி விழா நடத்தப்படுகிறதே?
காவிரி விவகாரத்தின் கடைசி அறிக்கையை கெஜட்டில் போட்டதைத் தவிர ஒரு துரும்பைக்கூட போடாதவர் கள்தான் அ.தி.மு.க. ஆட்சி யாளர்கள். கர்நாடகத்தில் காவிரிக்கு குறுக்காக அணைகள் கட்டப்பட்டபோது அதுதொடர் பாக அம்மாநில முதல்வரும், பொதுப்பணித்துறை அமைச்சரு மான வீரேந்திர பாட்டிலை முதல்முதலாக நேரில் சந்தித்தவர் 1967-ல் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர். இருவருக்குமான தொடர் பேச்சுவார்த்தை பயனற்றுப் போனபோது, இந்த விவகாரத்தை மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு சென்றவரும் கலைஞர் தான். அப்போது மத்திய அமைச்சர் கே.எல்.ராவ் இங்கு வந்து பார்வையிட்டு, நீரின் மொத்த கொள்ளளவு குறித்த ஆய்வை நடத்தியபோது கலைஞர்தான் முதல்வர். பிறகு, அதிலும் சரியான நகர்வுகள் இல்லாததால் வழக்கு தொடர்ந்த கலைஞர், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியை தலையிடச் சொன்னார். ஆனால், அவரோ கர்நாடக தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவகாசம் கேட்டு வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி நம்பிக்கையும் அளித்தார். அப்போதும்கூட, சர்வகட்சிகளி டம் ஆலோசித்து மீண்டும் வழக்கு தொடரலாம் என்ற நிபந்தனையோடு வழக்கை வாபஸ் வாங்கினோம். அதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத்தை வி.பி.சிங்கிடம் வாதாடிப் பெற்று, அதற்கான இடைக்கால தீர்ப்பு மற்றும் இறுதித் தீர்ப்பையும் பெற்றுத் தந்தவர் கலைஞர். இவை யெல்லாம் தி.மு.க.வின் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற் கான தார்மீக உரிமையை இழந்ததுதான் அ.தி.மு.க. பெற்ற வெற்றி.
சர்க்காரியா கமிஷனுக்கு பயந்துதான் காவிரி தொடர்பான வழக்கை தி.மு.க. வாபஸ் வாங்கியதாக குற்றம்சாட்டுகிறார்களே?
காவிரி தொடர்பான வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றது. 1972ஆம் ஆண்டில்! ஆனால் 1976ஆம் ஆண்டுதான் சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. இரண்டுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? இதே குற்றச்சாட்டை ஜெயலலிதா சட்டசபையில் முன் வைத்தபோது, இப்போது அ.தி.மு.க.வில் எம்.பி.யாக இருக்கும் அப்போது காங்கிரஸ்காரர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எழுந்து அதன் தவறை விளக்கினார். அதற்கு ஜெயலலிதா, ‘மன்னிக்கவும்.. வாய்குளறி சொல்லிட்டேன். நானும் மனுஷிதானே’ என்றார். இதற்குப் பிறகும் சர்க்காரியா கமிஷனுக்கு நாங்கள் பயந்துபோனோம் என்று குற்றம் சாட்டினால் எப்படி?
சட்டசபையில் இருந்து அடிக்கடி தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக குற்றம்சாட்டப் படுகிறதே?
ஒரு கருத்தை சட்டசபையில் பதிவுசெய்கிறோம். ஆனால், அதை பேச அனுமதிக்காமல், பேசினால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டால் வெளிநடப்பு செய்கிறோம். வெளிநடப்பு செய்வது என்பது ஜனநாயகத்தின் முறை. அதேசமயம், அங்கு நீக்கப்படும் எங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதிவுசெய்துவிட்டு, மீண்டும் அவைக்கு திரும்புகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?
மக்கள்விரோத அரசு என்ற விமர்சனங்களையும் கடந்து ஆட்சி நடத்துவது எடப்பாடியின் வெற்றி இல்லையா?
ஆட்சி நடக்கிறது என்று சொல்வதையே நான் மறுக்கிறேன். இவர்கள் மத்திய அரசின் பினாமிகள். மோடி வா என்றால் வருவதும், போ என்றால் போவதும்தான் இவர்களது வேலை. சேலம் இரும்பு ஆலையை தமிழகத்திற்கு தர மறுத்தபோது, பிரதமர் இந்திரா காந்தி உடனான கூட்டத்தில் கலைஞர் கலந்துகொள்ள வில்லை. அப்போது, இந்திராவே கலைஞரை அழைத்து, "என்னை நம்பி கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்' என உறுதியளித்த கம்பீர வரலாறு தி.மு.க.வுக்கு இருக்கிறது. நேராக நிற்காதவர்கள்தானே இவர்கள்.
சமீபத்தில் எப்போது கலைஞரை சந்தித்தீர்கள்?
இரண்டு நாட்களுக்கு முன்னர்கூட சந்தித்தேன். அவருக்கென்ன.. நலமுடன் இருக்கிறார். சில சமயங்களில் தான் சோர்ந்து போய் விடுகிறார். ஒண்ணேகால் வருடம் ஒரே அறையில் இருந்தால் யாருக்குதான் சோர்வாகாது? கடற்கரைப் பக்கம் அழைத்துச் சென்று பாருங்கள் ஜாலியாக இருப்பார் என்று கூட நான் சொல்லியிருக்கிறேன்.
தொகுப்பு : ச.ப.மதிவாணன்