திரைப்படங்களில் வரும் கொடூர வில்லன்களை விடவும் மோசமான வில்லனாக ஒருவர் கொலைகாரப் படையுடன் வலம் வருகிறாராம். பல வீடுகளைத் துக்க வீடுகளாக்கிய க்ரைம் ஹிஸ்ட்ரி அந்த வில்லனுக்குரியதாம். அவரைக் கண்டால் ஊரே நடுங்கிப் பதறுகிறது என்கிறார்கள்.
இப்படி ஒரு தகவலைச் சுமக்கும் மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் உள்ள சாம்பிராணிப்பட்டி கிராமத்தில் நாம் ஆஜரானோம். ஊர் முழுக்க நிசப்தம் அடர்ந்திருக்க, பார்த்த முகங்களில் எல்லாம் அச்சம் படர்ந்திருந்தது. மெல்ல விசாரித்தபோது, அந்த வில்லனின் பெயர் கோபாலகிருஷ்ணன் என்றார்கள். இவரும் ரத்தப்பசி கொண்ட இவர் ஆட்களும் அந்தப் பகுதி மக்களிடம், அடிதடி வெட்டுக் குத்து என்று ஆரம்பித்து, பதறப் பதற படுகொலை வரை அரங்கேற்றுகிறார்களாம். போதாக்குறைக்கு, பொய் பெட்டிசன்கள் போட்டும், பொது நலவழக்கு என்ற பெயரில் நீதிமன்றங்களுக்கு அலைக்கழித்தும் பலரையும் அந்த டீம் அலறவைத்துக் கொண்டிருக்கிறதாம்.
இதுகுறித்து நம்மிடம் பதற்றத்தோடு பேசிய கிராமத்து இளைஞர் ஒருவர், “அந்த கோபால கிருஷ்ணன் சாதாரணமான ஆள் இல்லை. வில்லாதி வில்லன். அவருக்கு மூலதனமே டெரர்தான். கொலைகளை அசால்ட்டாகச் செய்யும் கோபாலகிருஷ்ணன் டீம், அப்பாவிகளை அடித்து மிரட்டி, நிலங்களை வாங்குறது... யார் இடமென்றாலும் தயங்காமல் அந்த இடத்திற்கு அவுங்களுக்கே தெரியாமல் பட்டாவை மாற்றி, அதன் பேரில் வங்கிகள்ல கோடிக் கணக்கில் லோன் வாங்குறது... இதை எல்லாம் யாராவது கண்டு பிடிச்சிக் கேட்டா, அவங்களை ஆட்களைத் திரட்டி, அடித்து மிரட்டுவதுன்னு கொடூரங்களை நடத்துவது, போதாக்குறைக்கு அந்த கோபாலகிருஷ்ணன், விவசாய சங்கத்திலிருந்து மனித உரிமை இயக்கம் வரை அனைத்துப் பொதுநல இயக்கங்களிலும் முக்கிய நபர் மாதிரி காட்டிக்கிட்டு.. ஆடாத ஆட்டமெல்லாம் ஆடறார். ஆர்.டி.ஐ.யை வைத்து அதிகாரிகளையும், நிலச்சுவான்தார்களையும் மிரட்டிப் பணம் பறிக்கிறார். ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தால் கூட, அங்கே பச்சைத் துண்டு சகிதமாக உள்ளே போய், கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிகாரிகளையும் மிரட்டுவார். இப்படி, சகல விதத்திலும் அனைவரையும் பதறவைக்கும் கோபாலகிருஷ்ணனின் இரும்புப் பிடியில் இருந்து தப்பிக்கிற வழி தெரியலை. அதனால், ஊரைவிட்டு ஓடலாமான்னு எங்க ஊர் மக்கள் எல்லோரும் நினைக்கிறாங்க. அவரைப் பற்றி இப்ப எல்லோருமா போய் கலெக்டர்ட்ட புகார் கொடுக்கவும் தயாராயிட்டோம்” என்று டெரர் தகவல்களால் திகைக்க வைத்தார்.
சொன்னது போலவே சாம்பிராணிப்பட்டி கிராம மக்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட, நாமும் அங்கே ஆஜரானோம். கலெக்டர் அலுவலகத்தில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தவர்கள்.. “கலெக்டரய்யா... அருவாளும் கையுமா எங்களைத் துரத்தும் வில்லன்களிடம் இருந்து எங்களைக் காப்பாத்துங்கய்யா... எங்க சொத்து பத்தை எல்லாம் கொலைகாரப் பாவிகள் அடிச்சி உதச்சிப் பிடுங்கறானுங்க. போலீஸும் இந்தக் கொடுமைக்கெல்லாம் துணை போகுது... கலெக்டர் அய்யா வெளியே வாங்க... வந்து எங்களைக் காப்பாத்துங்கய்யா..” என்று அவர்கள் கூக்குரல் எழுப்ப, அந்த அலுவலக வளாகமே பதட்டப் பரபரப்பில் மூழ்கியது.
அங்கே கண்ணீரோடு நின்றுகொண்டிருந்த சுரேஷ் என்பவரின் மனைவி கௌசல்யாவிடம் நாம் விசாரித்தபோது, “10 நாளைக்கு முன் என் கணவர் சுரேஷை, ஊர்மக்கள் கண்ணு முன்னாடியே அந்தப் படுபாவிங்க கோபால கிருஷ்ணனும் அவன் ஆளுங்களும் வெட்டிக் கொன்னுட்டானுங்க. 10 பேர் சேர்ந்து, ஒருத்தரை சுத்தி வளைச்சா எப்படித் தப்பிக்க முடியும்? இதுக்குக் காரணம், என் கணவரின் சொத்தை மிரட்டி வாங்கப் பார்த்தானுங்க. அவர் மசியலை. உடனே அந்த நிலம் புறம்போக்குன்னு அந்த கோபாலகிருஷ்ணன் பொய் வழக்குப் போட்டான். அந்த வழக்கை நீதிமன்றமே தள்ளுபடி செஞ்சிடுச்சி. இந்த நிலையில், எங்க பக்கத்து இடத்துக்காரரான லெட்சுமணனின் இடத்தையும் அபகரிக்கப் பார்த்தானுங்க. அதை என் வீட்டுக்காரர் தட்டிக்கேட்டார். அதனால் அவரைப் படுபாவிகள் வெட்டிச் சாய்ச்சுட்டானுங்க. அதிலும் அவனுங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல கோர்ட்டுக்குப் போகும்போதே வெட்டிக்கொன்னுட்டானுங்க. அவனுங்க உருப்படு வானுங்களா..” என்றபடி கதறினார்.
சுரேஷின் மாமனார் முத்துக்கனி என்பவரோ “எனக்கு சொந்த ஊர் அருப்புகோட்டை. சாம்பிராணி பட்டியில் என் ஒரே மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதை வாங்கியதில்தான் பிரச்சனை. முதலில் நிலத்தை அளக்கும்போது பக்கத்து இடத்துக்காரனான கோபாலகிருஷ்ணன் அளக்க விடாமல் தகராறு செய்து, ஆட்களோடு வந்து அரிவாளால் என் மருமகனை வெட்டிப் போட, நாங்க தூக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினோம். அடுத்து அவர் இடத்திற்குப் பக்கத்து இடத்துக்காரர் லெட்சுமணனை அவனுங்க வெட்டுபோது, என் மருமகன் வீடியோ எடுத்து போலீஸில் கொடுத்தார். அதனால் சாட்சியாக இருந்த என் மருமகனைத் திட்டம் போட்டுக் கொன்னுட்டானுங்க. இப்ப இரண்டு குழந்தைகளோட என் மகள் நிர்க்கதியா நிற்குது. இந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவே இல்லையா?” என்றார் கண்ணீரோடு.
அவர் அருகில் இருந்த பார்வதி ஆவேசமாக நம்மிடம் “2020-ல் சுரேஷ் தம்பியின் பக்கத்து தோப்பான லெட்சுமணன் என்பவரை அரிவாளால் வெட்டியபோது, நான் ஓடிவந்து கூச்சல் போட்டேன். அதனால் அவனுங்க அவரை விட்டுவிட்டு ஓடினானுங்க. இதனால் என்னை பலமுறை கொலை செய்ய வந்தானுங்க. அதேபோல் ஏற்கனவே இதே சுரேஷை கொலைசெய்யும் நோக்கத்தில் தாக்கினானுங்க. அப்ப அவர் படுகாயங்களோட தப்பிச்சிட்டார். இவனுகளுக்கு பயந்தே, கொஞ்சநாள் என் பிறந்த ஊருக்குப் போய் இருந்தேன். இப்பதான் சாம்பிராணிப்பட்டிக்கு வந்தேன். வந்த நேரத்தில்தான் சுரேஷ் தம்பியை கோபாலகிருஷ்ணன், கார்மேகம், அஜித்பாலன், திருமலை, பாண்டிச் செல்வி, ராமு, பரத், மலைச்சாமி ஆகியோர் எங்க எல்லோர் முன்னிலையிலும் வெட்டிக் கொன்னானுங்க. இந்த அரக்கன்கள் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்னதை என் கண்ணால் பார்த்தேன். நான் எவ்வளவோ கத்தினேன். ஊர் மக்கள் பயத்தினால் அருகில் வரவில்லை. இரத்தம் ஆறாக ஓடியது. இதுபோல் 2016-ல் பசும்பொன் என்ற தம்பியை இதேபோல வெட்டினார்கள். அவனைக் குற்றுயிரும் குலை உயிருமாக மாட்டு வண்டியில் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு போய் காப்பாற்றினேன். அதற்கும் நான்தான் சாட்சி. இனி இதற்குமேல் இழப்பதற்கு ஒன்றுமில்லை. அதனால்தான் ஊர்ப் பொம்பளைங்க எல்லோரும் இங்க கிளம்பி வந்துருக்கோம். ஊரில் பாதிபேர் வீட்டை காலிபண்ணிட்டுக் கிளம்பிட்டாங்க. இப்ப இங்க வந்த எங்கள் உயிருக்குப் பாது காப்பு இல்லை. அவனுங்க செஞ்ச நான்கு கொலைபாதகச் சம்பவத்திற்கு நான் சாட்சியாக இருக்கிறேன். கட்டாயம் என்னையும் இவனுங்க கொல்லப்போறானுங்க. இதையும் இந்த உலகம் வேடிக்கைதான் பார்த்துக் கிட்டு இருக்கப்போகுது” என்று விரக்தியாகச் சொன்னவர், “சாவுக்குப் பயந்து மனசாட்சிக்கு விரோதமாக இருக்க முடியுமா? சாவு எல்லோருக்கும் ஒருநாள் வரத்தான்செய்யும். நடக்குறது நடக்கட்டும்...” என்று தன் ஆதங்கத்தையும் கொட்டினார்.
ஏற்கனவே இந்த கோபாலகிருஷ்ணனால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளான லெட்சுமணனையும் பார்த்தோம். அவர் நம்மிடம், “இந்த கோபாலகிருஷ்ணனுக்கு அராஜகமே பொழப்பா இருக்கு. யாராவது தட்டிக் கேட்டால் வீடு புகுந்து தாக்குதல் நடத்துவான். போலீஸார் மீதும் பொய் வழக்கு போடுவான். சாம்பிராணிப்பட்டியை பொறுத்தவரை இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாகவே இதுவரை 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவன் மீது இருக்கு. என்மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைப் பார்த்த முக்கிய சாட்சியான சுரேஷை இப்ப அநியாயமா கொன்னுட்டானுங்க. இவனால் பாதிக்கப்பட்ட கௌசல்யா போலவே பார்வதி, பாண்டியம்மா, அனிதா, பசும்பொன், மனோகரன், சுரேஷ் முத்துக்கனி என்று 100-க்கும் மேற்பட்டவர்கள் இருக்காங்க. இது இங்கே தொடர் கதையாகவே இருக்கிறது. இப்படியே போனால் ஊரே சுடுகாடாத்தான் மாறும்” என்றார் கொதிப்போடு.
நாம் சாம்பிராணிப்பட்டிக்கு உட்பட்ட மேலவளவு காவல்நிலையத்தின் ஆய்வாளர் சார்லஸிடம் இந்த சம்பவம் பற்றிக் கேட்டபோது, “சுரேஷ் கொலை நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. சம்பந்தபட்ட கோபாலகிருஷ்ணன் டீமை பிடிப்பதற்குத் தனிப்படை போடப்பட்டிருக்கு. விரைவில் பிடிபடுவார்கள்” என்றார் நிதானமாக.
சாம்பிராணிப்பட்டி மக்களின் மனுக்களை வாங்கிய கலெக்டர் அனிஷ் சேகர், “கவலை வேண்டாம். முறைப்படி விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்” என்று உயிர் பயத்தில் இருக்கும் சாம்பிராணிப்பட்டி மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
ஒரு கிராமத்தையே ரத்தக் களறியாக்கிவரும் வில்லன்களை, காவல்துறை இன்னும் விட்டு வைத்திருப்பது, அப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அரசு என்ன செய்யப் போகிறது?