அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்கா மீன்சுருட்டி அருகே உள்ளது மேலணிக்குழி. இந்த ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் கொஞ்சம் பெரிய கிராமம் மேலணிக்குழி. அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்க இந்த ஊருக்கு வருவார்கள். இந்த ஊரில் சண்முக விலாஸ் என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் கந்தசாமி.
கரோனா நோய் பாதிப்பு வராமல் மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார்கள். மக்களுக்கு வருவாய் போதிய வருவாய் இல்லை. அரசாங்கத்திற்கு செலவுகள் அதிகம். எனவே அரசு வழியாக மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த கந்தசாமி தன் மளிகை கடை வருமானத்தின் மூலம் சேமித்த பணத்தில் ஒரு லட்ச ரூபாயை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக அளிப்பதற்கு முடிவு செய்தார்.
ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற கந்தசாமி, வட்டாட்சியர் கலைவாணனை சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்குமாறு கூறி வழங்கினார்.
ஒரு குக்கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ஒரு சிறிய வியாபாரி, ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியது கண்டு அங்கிருந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கந்தசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது கந்தசாமி, மக்களிடமிருந்து தான் என்னைப் போன்றவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். அதை நேரடியாக செய்வதற்கு என்னைப்போன்ற சாதாரணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் அரசு மூலம் இந்த உதவி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதற்காக முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கச் சொல்லி வட்டாட்சியர் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை அளித்துள்ளேன்.
என்னைப் போன்று சிறிய பெரிய வியாபாரிகள் இதுபோன்று அரசுக்கும் மக்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உதவி செய்ய முன்வரவேண்டும். எவ்வளவு பணம் இருந்தாலும் அதை மக்களுக்கு கொடுப்பதற்கு நல்ல மனம் உள்ளவர்கள் முன்வரவேண்டும். அதுவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசும் சிரமப்படுகிறது, மக்களும் சிரப்படுகிறார்கள். ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரம் என்பார்கள். அதுபோல அனைவரும் உதவ வேண்டும் என்கிறார் கந்தசாமி. ஒரு குக்கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ஒரு சிறிய வியாபாரியான கந்தசாமியே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவும்போது, தமிழகத்தில் உள்ள செல்வந்தர்கள் பலருக்கும் உதவ வேண்டும் என்ற மனம் இருந்தால் போதும், மக்கள் பசி இல்லாமல் கரோனா நோயை எதிர்த்து மீண்டு வருவார்கள்.