உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 36 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1500-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 46,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், முறையான பாதுகாப்பைச் செய்து தராமல் ராணுவத்தைக் கொண்டு பூ தூவ ஏற்பாடு செய்யப்பட்டதைச் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக என்ன நடைபெற்றது, இதில் உண்மை நிலை என்ன, என்பது குறித்தான கேள்வியை மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,
இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சென்னையில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வரும் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்களைப் பெருமை சேர்க்கும் பொருட்டு முப்படைகளை வைத்து மலர் தூவப்படும் என்ற அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இதற்கு மருத்துவர்கள் தங்களுக்கு இது உற்சாகப்படத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். கரோனா உச்ச நிலையை அடைந்துள்ள இந்த நிலையில் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எந்தத் துறையில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஊக்கம் தர வேண்டிய நல்ல விஷயம்தான். ஆனால் அரசாங்கம் செய்ய வேண்டியது மரியாதை அல்ல. பாதுகாப்பை உத்தரவாதத்தைத் தர வேண்டியதுதான் அரசாங்கத்தின் வேலை. நம் இந்தியாவைப் பொருத்த வரையில் கரோனாவை எதிர்ப்பதற்கு பல உக்திகளை நாம் வைத்துள்ளோம். எப்படிப் பாகிஸ்தானுக்கு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை சிறப்பாகக் கையாண்டமோ அப்படி இந்த விஷயத்தில் இந்தியா செய்து வருகின்றது. மார்ச் மாதத்தில் நாம் கைத்தட்டி கரோனாவை ஓட விட்டோம். மார்ச் மாதம் ஒருநாள் ஊரடங்கில், பிரதமர் சொன்னதற்கிணங்க கைத்தட்டி, சங்கு ஊதி, பாத்திரத்தை உடைத்து கரோனா விரட்டினோம். போதாக்குறைக்கு ஊர்வலம் எல்லாம் சென்றோம். அடுத்த இரண்டு மூன்று நாட்களிலேயே 21 நாள் ஊரடங்கை அவர் அறிவித்தார்.
மார்ச் மாதம் கைத்தட்டி கரோனாவை காலி செய்தோம் என்றால், ஏப்ரல் மாத்தில் விளகேற்றினோம். முதலில் கைத்தட்டி ஒலி எழுப்பினோம். அடுத்ததாக விளக்கேற்றி ஒளி எழுப்பினோம், அதாவது ஒலியும் ஒளியும். இது நமக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே? அதனால் எல்லாரும் கிடைத்த இடத்தில் எல்லாம் விளக்கை ஏற்றினார்கள். அதுவும் பத்தாது என்று பட்டாசு எல்லாம் வெடித்தார்கள். இந்த வைரஸ் சீனாவில் இருந்து வந்ததால் சீனா பட்டாசு வெடித்தால் போயிவிடும் என்று கண்டுப்பிடித்திருப்பார்கள் போல, பாதிபேர் பட்டாசு வெடித்தார்கள். அதன் மூலம் கரோனாவை விரட்டினார்கள். இது ஏப்ரல் மாத கோட்டா முடிந்துவிட்டது. இப்ப அடுத்த என்ன செய்வது என்று யோசித்தில் சிக்கியதுதான் பூ போடுவது. ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து மருத்துவர்கள், பணியாளர்கள் மீது மலர் தூவப்பட்டுள்ளது. இது மருத்துவர்களுக்கு மரியாதை செய்யக்கூடியதுதான். கோவை போன்ற சில மாவட்டங்களில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனை மீது மலர் தூவவில்லை என்று மருத்தவர்கள் சிலர் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.
இதெல்லாம் ஒரு பதுதியாக இருந்தாலும் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கு நாம் சென்றுள்ளோம். அதனால் நாம் செய்ய வேண்டியது பால் தெளிக்கிறதோ அல்லது பூ தூவுகிறதோ அல்ல. அதெல்லாம் செய்தால் வேறு மாதிரியாக இருக்கும். தற்போது நாம் செய்ய வேண்டியது எல்லாம் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துதல், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்தல் மற்றும் போதுமான எண்ணிக்கையில் ஆன டெஸ்டிங்கை அதிகப்படுத்த வேண்டும். தற்போது சென்னையில் பரவலாக கரோனா தாக்குதல் அதிகரித்துள்ளது. எப்போது யாருக்கு வரும் என்று தெரியவில்லை. எந்தவித அறிகுறியும் இல்லாமல் கரோனா வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், அரசாங்கமும் அதை ஒத்துக்கொள்கிறது. அப்படி இருக்கும்போது நாம் உடனடியாகச் செய்ய வேண்டியது மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்தலும், பரிசோதனையை விரைவுப்படுத்தலும் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தேவையில்லாதவற்றுக்கு எல்லாம் அரசாங்கம் முத்தியத்துவம் தரக்கூடாது,என்றார்.