ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்து வந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
பெரிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ராஜீவ் வழக்கில் சிறையிலிருந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். முன் எப்போதும் இந்த மாதிரியான விடுதலை நடந்ததில்லை என்று கூறப்படுகின்ற நிலையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மொத்தத்தில் இந்த ஏழு பேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்ற கருத்தை இரண்டு வரிகளில் முடித்துவிடலாம். அதாவது ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்தால் அல்லது தெரிந்தே செய்தாலும் அதில் நீதிமன்றம் தனக்குரிய சிறப்புப் பிரிவு 142ஐ பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்பதை ஆளுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உச்சநீதிமன்றம் தெளிவாகப் புரிய வைத்துள்ளது. ஒரு மாநிலத்தின் அமைச்சரவை எடுத்த முடிவின் மீது ஒரு ஆளுநர் தேவையின்றி காலம் தாழ்த்த முடியாது என்பதைத் தெளிவாக அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஜெயலலிதா ஆட்சியின்போதே அவர்கள் விடுதலை கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர்களுக்கு அனுப்பினார்கள். ஆனால் சட்டப் பேரவையே தீர்மானம் நிறைவேற்றினாலும் நாங்கள் எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என்று முன்பு இருந்த ஆளுநரும், தற்போது இருக்கின்ற ஆளுநரும் உறுதியாக இருந்தார்கள். இன்றைக்கு இருக்கின்ற ஆளுநர் காலேஜ் காலேஜாகப் போக நேரம் இருக்கிறது, தமிழ் இலக்கியம் பேசுகிறார், திருக்குறள் அறிவுரைகளை வழங்குகிறார், அவர் தமிழ் இலக்கியம் படித்த நேரத்தில் இந்த விவகாரத்தில் முடிவு எடுத்திருக்கலாம் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
அதனால் உச்சநீதிமன்றம் இன்னோவிகேட்டிலே அதாவது அர்த்தமற்ற மிக மிக நீண்ட காலம் என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இன்றைக்கு அவர்களை விடுதலை செய்திருக்கிறது. இதில் அரசியல் சட்ட அமைப்புகள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஒரு சிறப்புச் சலுகைகளையும் அவர்களுக்கு வழங்கவில்லை. அரசியல் சாசன அமர்வு வழங்கிய சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த விடுதலை சாத்தியப்படுத்தியுள்ளது. அதையும் தாண்டி இந்த மாதிரியான முடிவுகள் என்பது தேவையில்லாத காலதாமதம் செய்யும் ஆளுநர்களின் நடவடிக்கைக்கு ஒரு பாடமாக அமையும்.