Skip to main content

நக்கீரனுக்கு வழக்குகள் ஒன்றும் புதிதல்ல! ஃப்ரண்ட்லைன் இதழ் வெளியிட்ட கட்டுரையின் தமிழாக்கம்!

Published on 27/10/2018 | Edited on 29/10/2018

 

NAKKHEERAN GOPAL

 

நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், நீதித்துறை உரிய காலத்தில் தலையிட்டு அந்த நாளை பத்திரிகை சுதந்திரத்திற்கான நாளாக மாற்றியது.

 

அரசாங்க அதிகாரத்தை மீறி நீதித்துறை மாஜிஸ்திரேட் தினந்தோறும் பத்திரிகை சுதந்திரத்திற்காக எழுந்து போராட முடியாது. ஆனால், ஆளுநருக்கு பிடிக்காத செய்திகளை வெளியிட்டதற்காக, அக்டோபர் 9 ஆம் தேதி ஆளுநர் மாளிகை கட்டளைப்படி காவல்துறையால்  கைது செய்யப்பட்ட ஒரு பத்திரிகையாளரை, ரிமாண்ட் செய்ய முடியாது என்று அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார் ஒரு மாஜிஸ்திரேட்.
 

இதற்கு முன் எந்த ஆளுநரும் செய்யாத வேலையை இவர் தொடங்கிவைத்தார். மாவட்டங்களுச் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்துவது, அரசு திட்டங்களை ஆய்வு செய்வது என்று அடிக்கடி பயணங்களை மேற்கொண்டார். இதை மாநில அமைச்சர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினால் ஒரு திட்டத்தை பலமுறை ஆய்வு செய்வது நல்லதுதானே என்றார்கள்.


அக்டோபர் 9 ஆம் தேதி, ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்து புனேயில் உள்ள ஒரு நண்பருக்காக சித்தா வைத்தியர் ஒருவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார் நக்கீரன் கோபால். அப்போது அடுத்த ஒரு மணி நேரத்தில் பரபரப்புச் செய்திக்கு காரணமாகப் போகிறோம் என்று அப்போது அவருக்குத் தெரியாது. “எனது வீட்டுக்கு அருகே போலீஸ் நின்றார்கள். ஆனால், நான் வழக்கமாக செல்லும் காரைத் தவிர்த்து வேறு காரில் சென்றதால் என்னை தடுத்து நிறுத்தவில்லை” என்கிறார் நக்கீரன் கோபால்.


வழக்கமாக வெள்ளை நிற அம்பாசிடர் காரில் பயணிப்பதுதான் நக்கீரன் கோபாலின் வழக்கம். அந்தக் காரை எதிர்பார்த்து நின்றதால் போலீஸ் அவரை தவறவிட்டது. போலீஸ் தனக்காக காத்திருப்பதை அறியாத நக்கீரன் கோபால், விமானநிலையம் சென்று, சோதனைகள் முடிந்து பயணத்திற்கு தயாரானார். அப்போது, விமானநிலையத்தின் ரெஸ்ட்ரூமிற்கு சென்றபோது, உளவுப்பிரிவு ஊழியர் ஒருவர் தன்னை பின்தொடர்வதை கவனித்தார். "இந்த ஆள் ஏன் நம்மை பின்தொடர்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன்" என்கிறார் நக்கீரன் கோபால்.


ரெஸ்ட்ரூமில் இருந்து வெளியே வந்த சமயத்தில் உதவிக் கமிஷனர் விஜயகுமார் அவரிடம் வந்து, டெபுடி கமிஷனர் ஜி.ஷஷாங்க் சாய் உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றார். தனக்கு ஏற்கெனவே நேரமாகிவிட்டது என்று சொன்னபோது, பரவாயில்லை என்றார் உதவிக்கமிஷனர். அடுத்த சில நிமிடங்களில் டி.சி.யும் அவருடன் 20 போலீஸாரும் வந்து அவரை சுற்றி நின்றனர். வாரண்ட் எதையும் காட்டவில்லை. நக்கீரன் கோபாலின் போனை ஒருவர் வாங்கிக் கொண்டார். அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார். அவருடன் வந்த சித்த வைத்தியரிடம் பின்னர்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 

 

front line


தன்மீது என்ன வழக்கு என்று நக்கீரன் கோபால் கேட்டதற்கு போலீஸ் பதிலே சொல்லவில்லை. முதலில் புழல் சிறைக்கு கொண்டுபோவதாக கூறினார்கள். அது, மீடியா ஆட்கள் தங்களைத் தொடராமல் தவிர்ப்பதற்காக சொன்ன பொய் என்று தெரிந்தது. அவரை போலீஸ் வேனில் வைத்து சுற்றுப்பாதையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி டெபுடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துப் போனார்கள். அதே வளாகத்தில்தான் சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையமும் இருக்கிறது.


சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் ஒரு கோட்டையைப் போல மாறியது. அந்தக் காவல்நிலையத்தை நோக்கி வரும் சாலைகள் அனைத்தும் போலீஸ் தடுப்புகளை வைத்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. மிகப்பெரிய பயங்கரவாதி ஒருவரை போலீஸ் பிடித்திருப்பதை போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. ஒரு இணைக் கமிஷனர், நான்கு டெபுடி கமிஷனர்கள், ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டனர். எழும்பூர் செல்லும் அருணாச்சலம் தெரு துண்டிக்கப்பட்டது. நக்கீரன் கோபாலை அவருடைய வழக்கறிஞர்கள்கூட சந்திக்க அனுமதிக்கவில்லை. எந்த காவல்நிலைய எல்லைக்குள் அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்கள் முயன்றார்கள்.


விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட அவருடைய கைது, சில காரணங்களுக்காக நகரின் இன்னொரு ஓரத்தில் இருக்கும் ஜாம் பஜார் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது ஆளுநரை தாக்கியதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும்படி ஆளுநர் மாளிகை கோரியிருந்தது. அந்தச் சட்டம் இங்கு பொருந்துமா என்று அதிகாரிகள் விவாதித்தனர். இங்கு இது பொருந்தாது என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

 

வைகோ கைது


இதற்கிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிந்தாதிரிப்பேட்டை நக்கீரன் கோபாலை பார்க்க வந்தார். ஒரு வழக்கறிஞராக அவரைப் பார்க்க தனக்கு உரிமையுண்டு என்று வாதாடியும் அவரை யாரும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவருடைய ஆதரவாளர்களுடன் வைகோ சாலையில் தர்ணாவில் ஈடுபட்டார். எனவே, அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
 

 

vaiko

 


ஆனால், வைகோவின் இந்த நடவடிக்கையும், போலீஸாரின் நடவடிக்கையும் மற்ற அரசியல்வாதிகளை எச்சரிக்கை செய்தது. நக்கீரன் கோபாலைச் சுற்றி ஏதோ பெரிய சதி இருப்பது வெளிப்பட்டது. அன்று காலை அவர் கைது செய்யப்பட்டது, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் என்பது தெரியவந்தது.


நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட நாடகம் நடைபெற்ற அதேவேளையில் ஐந்து பத்திரிகை உரிமையாளர்களை ஆளுநர் அழைத்து காலை விருந்து அளித்தார். நிறைய விவாதம் நடைபெற்றது. “அந்த விருந்து ஒரு மணி நேரத்துக்கம் மேலாக நீடித்தது” என்கிறார் அதில் பங்கேற்ற தி ஹிண்டு குரூப் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மன் என்.ராம். இந்த விருந்தில் பங்கேற்ற ஐந்து பேரிடமும் சக பத்திரிகை உரிமையாளர் ஒருவர்மீது தனது விருப்பப்படி கைது செய்யப் போவது குறித்து ஆளுநர் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.


அவர்கள் ஐந்துபேரும் ராஜ்பவனை விட்டு வெளியே வந்ததும்தான் என்ன நடக்கிறது என்பதே தெரியவந்தது. நக்கீரன் கோபால் வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்திற்கும், அவரை உடல்பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற மருத்துவமனைக்கும் என்.ராம் சில அரசியல் தலைவர்களுடன் செல்ல முயன்றார். முடியாததால் நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்யும் விசாரணை நடக்கவிருந்த எழும்பூர் 13 ஆவது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அவர்கள் சென்றார்கள்.


இதற்கிடையே, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தின் முன் வைகோவின் ஆதரவாளர்களும், மற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களும் அதிக அளவில் கூடத் தொடங்கினர். எனவே, நக்கீரன் கோபாலை அங்கிருந்து அகற்ற போலீஸ் முடிவு செய்தது. மற்ற தலைவர்களும் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்தால் அவரை வெளியே கொண்டுபோவது சிரமமாகிவிடும் என்று போலீஸ் கருதியது. எனவே, வேறு இடத்துக்கு அவரை மாற்ற முடிவு செய்தனர். ஒரு மணி அளவில் நக்கீரன் கோபாலை அவருடைய வழக்கறிஞர் சந்திக்க அனுமதி கொடுத்தார்கள். பின்னர் பலத்த பாதுகாப்புடன் திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு, உடல்தகுதி சோதனைக்காக அழைத்துச் சென்றனர். சுமார் 400 போலீஸ் வாகனங்கள் பின்தொடர அவரை அழைத்துப் போனார்கள். மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் நக்கீரன் கோபாலை சந்தித்தனர்.


 

front line


மருத்துவமனையிலிருந்து போலீஸ் வாகனங்கள் புடைசூழ வாலாஜா சாலை, அண்ணாசாலை, ஈ.வெ.ரா.சாலை வழியாக லில்லி பான்ட் காம்ப்ளக்ஸில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு அழைத்துப் போனார்கள். அதாவது கைதுசெய்யப்பட்டு ஐந்தரை மணி நேரத்துக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விருதுநகரில் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கைதுசெய்யப்பட்ட நிர்மலாதேவி என்ற உதவிப்பேராசியர் தொடர்பான வழக்கைச் சுட்டிக்காட்டி, ஆளுநரின் உதவிச் செயலாளர் டி.செங்கோட்டையன் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், அவருக்காக வேலை செய்யும் ஆட்கள் மீது 124 ஆவது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யும்படி, அக்டோபர் 6 ஆம் தேதி ஆளுநர் மாளிகை தரப்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. இந்த 124 ஆவது பிரிவு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது ஆகும். இந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அரசியல் சட்டம் 19(1)(ஏ) பிரிவின்படி ஜாமீன் கோரமுடியாது. அரசியல் சட்டம் 19(2) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியும். நக்கீரன் கோபால் மற்றும் பத்திரிகை ஊழியர்கள் 32 பேர் மற்றும் 3 வினியோகஸ்தர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில்தான் தெரியவந்தது.


கடந்த ஆறு மாதங்களி நக்கீரன் வெளியிட்ட மூன்று கட்டுரைகள்தான் ஆளுநர் மாளிகையை ஆத்திரப்படுத்தியதாக தெரியவந்தது. அதாவது, ஆளுநர் மாளிகையை திருப்தி படுத்துவதற்காக பெண்களை தவறாக ஈர்த்ததாக இந்தக் கட்டுரைகளில் கூறப்பட்டிருந்தாக ஆளுநர் மாளிகை கருதியது. ஏப்ரல் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் ரீதியாக ஆசைகாட்டியதாக கைதுசெய்யப்பட்டார். அப்போது வெளியான ஆடியோ கிளிப்பில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கிற ஆளுநரை நன்றாக தெரியும் என்று கூறி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகள் கூறியிருந்தார். இந்த ஆடியோ வெளியானதும் ஆளுநர் புரோகித் மறுத்தார். நிர்மலாதேவியை தனக்கு தெரியாது என்று கூறி, இதுதொடர்பாக விசாரிக்க ஒருநபர் கமிஷனை அமைத்தார். இத்தனைக்கும் இந்த விவகாரத்தை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இரண்டு விசாரணைகளின் விவரங்களும் வெளிவரவில்லை. தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில் ஆளுநர் ஏன் தனியாக ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை.


ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் வெளியான நக்கீரனின் 3 கட்டுரைகள் ஆளநரை அவருடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளன என்று செங்கோட்டையனின் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகள் அவதூறானவை, தீயநோக்கம் கொண்டவை. அரசியல் சட்டம் 162 ஆவது பிரிவு மாநிலத்தின் நிர்வாக அதிகாரங்களைப் பெற்றவர் என்று சொல்கிறது என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.


நக்கீரன் ஏப்ரல் 20-22 இதழ் அட்டையில்  பிரேக்கிங் நியூஸ் என்ற தலைப்பில் பூனைக்கு மணிகட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய ஆளுநர், சிறையில் நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து என்ற கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுநர் புரோகித்தின் படம் இருந்தது. 124 ஆவது பிரிவில் வழக்குப் பதிவுசெய்ய இது ஒரு காரணமாக கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் 23-25 தேதியிட்ட நக்கீரன் இதழில் ஆளுநரை காப்பாற்ற ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம் என்ற கட்டுரை வெளியாகியது. அதே இதழில்ல பல்கலைக்கழகத்தில் மர்ம பங்களா என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. அந்த பங்களாவில் தங்கியவர்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 26-28 தேதியிட்ட நக்கீரன் இதழில் ஆளுநரை நான்கு முறை சந்தித்தேன், நிர்மலா தேவிக்கு காத்திருக்கும் ஆபத்து, அதிர்ச்சி தகவல்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியது. அந்த இதழின் 6 ஆம் பக்கத்தில் நிர்மலா தேவி, புரோகித், ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.


அந்தப் புகாரில் முதல் கட்டுரைக்கு ஆசிரியராக நக்கீரன் கோபால் முதலாவதாகவும், இரண்டாவதாக சி.என்.ராமகிருஷ்ணனை இரண்டாவதாகவும், எந்தவகையிலும் கட்டுரைக்கு தொடர்பு இல்லாத நிலையிலும், ராம்குமார் என்ற போட்டோகிராபரை மூன்றாவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது கட்டுரைக்கு தாமோதரன் பிரகாஷ் மற்றும் சி.என்.ராமகிருஷ்ணன் ஆகியோரை ஆசிரியர்களாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரில், நக்கீரன் ஊழியர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் 32 பேர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 


அக்டோபர் 9 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 13 ஆவது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் எஸ்.கோபிநாதன் முன்னிலையில் நக்கீரன் கோபால் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடைய வழக்கறிஞர் பி.டி.பெருமாள் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தார். நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்யக்கூடாது என்று வாதிட்டார். 124 ஆவது பிரிவைப் பயன்படுத்துவதற்கான சின்ன ஆதாரத்தைக்கூட போலீஸார் காட்டவில்லை என்று அவர் கூறினார். உதவி அரசு வழக்கறிஞரோ நக்கீரன் கோபாலை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.


நக்கீரனும் தகுதியுடமையும்


விசாரணையின்போது, நக்கீரனின் ஒரு அட்டையை எடுத்து வழக்கறிஞர் பி.டி.பெருமாளிடம் நீதியரசர் கோபிநாதன் காட்டினார். அந்த அட்டையில் ஆளுநர், நிர்மலாதேவி, கருணாஸ் ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றிருந்தன. இதுதான் பொதுநலனுக்கான இதழியலா என்று கேட்டார். ஒரு வினாடி அதிர்ந்த பெருமாள் தனக்கு அருகில் நின்ற இந்து நிறுவனத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் அவர்களை சுட்டிக்காட்டினார். இந்தக் கேள்விக்கு பதிலளிக்க இவர்தான் தகுதியானவர் என்றார்.
 

front line


எதிர்பாராத நிலையில், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று என்.ராம் அவர்களிடம் கேட்டார் நீதியரசர். அவருடைய கேள்விக்கு பதிலளித்த என்.ராம், “இதுபோன்ற படத்தை நான் போடமாட்டேன். ஆனால், இங்கு இது ஒரு குற்றமாக கருத தகுதியில்லை” என்றார். மேலும் அவர் இந்த வழக்கில் மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். “முதலாவதாக, ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டு 124 ஆவது பிரிவின் கீழ் வரத் தகுயில்லாதது ஆகும். இரண்டாவதாக, நக்கீரன் கோபாலை நீதியரசர் ரிமாண்ட் செய்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மற்றவர்களும் காலாவதியான இந்த பிரிவை பயன்படுத்தும் தைரியத்தை கொடுத்துவிடும். மூன்றாவதாக, இந்த நடவடிக்கை தேவையற்ற வகையில் ஆளுநர் மாளிகையையும் குடியரசுத்தலைவர் மாளிகையையும் சர்ச்சைக்குள் இழுத்துவிடும்.” என்றார் என்.ராம்.


நக்கீரன் கட்டுரைகள் ஆளுநரை மனரீதியாக செயலிழக்கச் செய்துவிட்டது என்று அரசுத்தரப்பு வாதாடியது. “அப்படியானால், இப்படிப்பட்ட வீக்கான மனநிலையுள்ள ஆளுநரோ, குடியரசுத்தலைவரோ அந்தப் பதவியில் ஏன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டிலேயே வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கலாமே. கடுமையான விமர்சனங்களால் மனரீதியாக பாதிப்பு அடைகிறீர்கள் என்றால் இத்தகைய உயர்பதவிக்கு நீங்கள் பொருத்தமற்றவர்கள்” என்று நீதிமன்றத்துக்கு வெளியே என்.ராம் சொன்னார்.


“நீதிமன்றத்துக்குள் எல்லோரும் கருப்பு கவுன் அணிந்து இருந்தார்கள். நான் மட்டுமே லைட் ப்ளூ சட்டை அணிந்திருந்தேன். என்னிடம் மாஜிஸ்திரேட் கருத்துக் கேட்டார். இதில் சட்டவிரோதம் எதுவுமில்லை. இது எந்தச் சட்டத்தை மீறவில்லை என்று அவரிடம் சொன்னேன். நக்கீரன் அட்டைப்படம் குறித்து தனிப்பட்ட வகையில் என்ன நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். இத்தகைய படத்தை நான் பயன்படுத்த மாட்டேன். அது எங்கள் பத்திரிகை தரத்துக்கு ஏற்றதாக இருக்காது என்றேன். நக்கீரனுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஒரு கடிதம் கேட்டிருக்கலாம். அல்லது அதுகுறித்து பேசியிருக்கலாம்” என்றும் என்.ராம் செய்தியாளரிடம் கூறினார்.


நீதிமன்றத்தில் இரண்டு மணிநேரம் விவாதம் நடைபெற்றது. பின்னர் சிறிது நேரம் ஒத்திவைத்த நீதியரசர் கோபிநாதன், பின்னர், நக்கீரன் கோபாலை 124 ஆவது பிரிவின்கீழ் ரிமாண்ட் செய்ய இந்த வழக்கில் எந்த அடிப்படையும் இல்லை. விரிவான தீர்ப்பு பின்னர் தரப்படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீஸார் கலைந்து சென்றனர். நக்கீரன் கோபால் சுதந்திர மனிதனாக நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்தார்.

 

நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்குகள்

 

அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நக்கீரன் கோபால் மீது வழக்குகள் போடுவது ஒன்றும் புதிதல்ல. மூன்று கொலைவழக்குகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். நான்கு ஆள்கடத்தல் வழக்குகள், ஒருமுறை பயங்கர பொடா வழக்கு என அவர் சந்தித்து விடுதலைபெற்ற வழக்குகள் நீள்கின்றன. இப்போதும் ஒரு வழக்கை எதிர்கொண்டு விடுதலை ஆகியிருக்கிறார். இன்றைய நிலையில்  22 அவதூறு வழக்குகளில் தடையாணை பெற்றிருக்கிறார். அவதூறு வழக்குத் தொடர உதவியாக இருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டம் 499 ஆவது பிரிவையே செல்லாது என்று நக்கீரன் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.
 

“நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தியை நாங்கள் வெளியிட்டோம். நிர்மலா தேவியை நாங்கள் நீண்ட நாட்களாக தொடர்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வழக்கை நாங்கள் மட்டுமே நெருக்கமாக பின்தொடர்கிறோம். எனது அறிவுக்கு எட்டியவகையில் உண்மை என்று தெரிந்த விஷயத்தை மட்டுமே எழுதுகிறேன். நான் ஒரு பொறுப்புள்ள மனிதன். என் மீது ஒரு வழக்கு வருகிறது. அதை நான் எதிர்கொண்டே ஆகவேண்டும். எனது நிலையை நிரூபித்த பின்னர்தான் விடுதலை ஆகிறேன். ஒரு விஷயத்தை எழுதிவிட்டு ஓடி ஒளிபவன் அல்ல” என்று ஃப்ரண்ட்லைன் இதழிடம் சொன்னார் நக்கீரன் கோபால்.
 

நக்கீரன் கோபால் 124 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மூத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள், அச்சு, தொலைக்காட்சி, டிஜிடல் மீடியாக்களின் மூத்த பிரதிநிதிகள் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.



 

hindu N. Ram

 


“நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான நக்கீரன் கோபால் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கொடூரமான 124 ஆவது பிரிவை பயன்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்தப் பிரிவை  ஆட்சேபகரமான செய்தியை வெளியிட்டதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது பயன்படுத்தியிருப்பது எதிர்பாராதது மட்டுமல்ல. கேள்விப்படாததும் ஆகும். இந்தப் பிரிவு, குடியரசுத்தலைவரையும் ஆளுநரையும் தாக்குகிறவர்கள் மீது மட்டுமே பயன்படுத்தப்படும். இத்தகைய ஒரு பிரிவின் கீழ் நக்கீரன் கோபாலை கைது செய்யும் வகையில் ஆளுநர் மாளிகையே புகார் கொடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது ஆகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 

இந்த அறிக்கையில், என்.ராம், ஆனந்த விகடன் ஆசிரியரும் நிர்வாக இயக்குனருமான பி.சீனிவாசன், மதுரை, கோயம்புத்தூர் தினமலர் ஆசிரியர் ராமசுப்பு, கோயம்புத்தூர் தினமலர்  வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், புதியதலைமுறை நிர்வாக ஆசிரியர் எஸ்.கார்த்திகைசெல்வன், தினகரன் வெளியீட்டாளர் ஆர்.எம்.ரமேஷ், தி ஹிண்டு ஆசிரியர் முகுந்த் பத்மநாபன், நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் எம்.குணசேகரன், டெக்கான் குரோனிக்கள் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

 

ஒரு புதிய நாள், ஒரு புதிய யுத்தம்

 

நக்கீரன் கோபால் விடுதலையான பிறகு, அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான நக்கீரன் மஞ்சள் நிற அட்டையுடன் வந்தது. அந்த இதழில் ஆளுநரைத் தொடர்புபடுத்தி இரண்டு செய்திக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.
 

நக்கீரன் இதழைத் தடுத்து நிறுத்தத் தவறிய போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய ஆளுநர் மாளிகை வற்புறுத்தியதாக ஒரு செய்தியும், நிர்மலா தேவி கொடுத்த வாக்குமூலத்தை மாற்றியதாக ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. “மஞ்சள் பத்திரிகை என்று அழைப்போரின் கவனத்துக்கு என்ற தலைப்பில் ஆசிரியர் நக்கீரன் கோபால் எழுதிய கடிதத்தில், உண்மைகளை வெளிக்கொண்டுவரும் புலனாய்வு பயணத்திலிருந்து நக்கீரன் ஒருபோதும் விலகாது” என்று உறுதியளித்திருந்தார்.
 

நக்கீரனை மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆளுநர் ஒருபக்கமும், பத்திரிகையாளர்கள் மறுபக்கமுமாக இந்த யுத்தம் நடக்கிறது. நக்கீரன் கோபாலுக்கு இது பழக்கமானதுதான்.
 

இவ்வாறு அந்தக் நீண்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்