Skip to main content

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கால துண்டுக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published on 14/04/2022 | Edited on 19/04/2022

 

first Maravarman Sundara Pandyan Inscriptions Discovery

 

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த சரவணன் நாட்டரசன் கோட்டையில் இடிபாடுடைய கோவில் மண்டபம் ஒன்றில் சுவரில் கல்லெழுத்துகள் இருப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு தகவல் தெரிவித்தார். அவ்விடத்தில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, செயலாளர்  இரா.நரசிம்மன், உறுப்பினர் கா.சரவணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

 

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் கொல்லங்குடி புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, ”சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் வீரகண்டான் ஊரணி கரையின் கிழக்குப் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள உடையவர் கோவில் தெற்கு மற்றும் மேற்கு சுவரில் 9 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

 

உடையவர் கோவில்

வீர கண்டான் ஊரணிக் கரையில் மேற்குப் பகுதியை விடுத்து மற்ற பகுதிகள் அனைத்தும் கோவில்களால் சூழப்பட்டுள்ளன. அதில் உடையவர் கோவில் என அழைக்கப்படும் இடம் இடிபாடுடன் கூடிய முகப்பு மண்டபமும், அதையொட்டிய பின்பகுதியில் கருவறையுடனும் அமைந்துள்ளது. உடையவர் என்பது ராமானுஜரின் 12 திருநாமங்களில் ஒன்றாக அழைக்கப்பெறுகிறது. இக்கோவில் ராமானுஜருக்காக அமைக்கப் பெற்றுள்ளதை முகப்பு மண்டப தூண்களில் உள்ள ராமர் சிலை, ராமானுஜர் சிலையைக் கொண்டு யூகிக்க முடிகிறது, மேலும் இக்கோவில் பெருமாள் கோவிலை ஒட்டிய பகுதியிலேயே அமைந்துள்ளது. கருவறையில் சிலை ஏதுமில்லாமல் இடிந்த கற்கள் விழுந்து கிடக்கின்றன.

 

first Maravarman Sundara Pandyan Inscriptions Discovery

 

கல்வெட்டுகள்

சிறிதும் பெரிதுமாக 9 துண்டுக் கல்வெட்டுகளைக் கருவறை வெளிப்புறச் சுவரில் காணமுடிகிறது, முழுமை பெற்ற கல்வெட்டுக்களாக இருந்த கற்களைக் கட்டு இசைவுக்காக உடைத்து மேலும் கீழும் தலைகீழாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் இவை ஒன்றோடு ஒன்று தொடர்பற்றுள்ளதையும் காண முடிகிறது.

 

கல்வெட்டுச் செய்தி

கல்வெட்டு எழுத்து அமைப்பைக் கொண்டு இவற்றை பதிமூன்றாம் நூற்றாண்டாகக் கருதலாம், தெற்குப் பக்கச் சுவரில் நடுவாக அமைந்துள்ள கல்வெட்டு ஒன்றில், முன்பின் பகுதிகள் தொடர்பில்லாமல் இருந்தாலும் ஒரு சில சொற்கள் முழுமையாக உள்ளன. “ஒன்று 5 அரை மாவும் ஸ்ரீ சோணாடு கொ தேவற்கு ஐஞ்சாவது முதல் கெம எப்பேற்பட்ட இறை தவிந்தமைக்கு கல்லிலே” என வரும் தொடர்களைக் கொண்டு ஸ்ரீ சோணாடு கொண்டருளிய/கொண்ட  என்ற வரிகளாயின் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1216-1238) கல்வெட்டாக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. மேலும் மற்ற துண்டுக்கல்வெட்டுகளில் முழுமையான தொடர்பற்று சொற்கள் இருந்தாலும் வரி மற்றும் வரி தவிர்ந்தமை தொடர்பான செய்திகளே இடம் பெற்றிருப்பதாகக் கொள்ள முடிகிறது.

 

first Maravarman Sundara Pandyan Inscriptions Discovery

 

சூரக்குளம் ஐயனார் கோவிலில் துண்டு கல்வெட்டு

சூரக்குளத்திலிருந்து வஸ்தாபட்டிக்கு ஊரணி பின்புறத்திலிருந்து காட்டு வழியாக செல்லும் பாதை பிரிவிலிருந்து பஞ்சாட்சரம் ஐயனார் கோவிலுக்குச் செல்ல முடிகிறது. நல்ல அடர்ந்த காட்டிற்குள் அமைந்துள்ள இக்கோவிலில் நுழைவு வாயில் கீழ்ப்பகுதி சுவரின் கட்டுமானத்தில் ஒரு முழுமை இல்லா துண்டுக் கல்வெட்டு காணப்படுகிறது.

 

இக்கல்வெட்டு “செய்தியாவன செக்கிறையும் தட்டன் பாட்டமும் இவ்வாண்டு முதல் பள்ளிச்சந்த இ _ _ இப்படி சந்திராதித்தவற்_ _ _ _ அழகனான அழகிய பாண்_ _ _ பற்றயுடையான திருப்பூவன அரையன் வி” என 13,14ஆம் நூற்றாண்டு எழுத்தமைவில் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பள்ளிச்சந்தமாக பௌத்தம் அல்லது சமணக் கோயிலுக்கு சூரியன் சந்திரன் உள்ளவரை இறையிலியாக வரி வழங்கப் பெற்ற செய்தியை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம். இவ்விரு கோவில்களிலும் இத்துண்டுக் கல்வெட்டுகள் முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் கற்களோடு வேறு இடத்திலிருந்து கட்டுமானத்திற்காக இங்கு கொண்டுவந்து சிதைக்கப் பெற்று கட்டப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

 

உடைந்த நிலையில் சிவ மூர்த்த சிலை

வீர கண்டான் ஊரணியின் மேற்குப் பகுதியில் நீர்வரத்து மதகடிப்பகுதியில் இடுப்புக்கு மேல் பகுதி மட்டும் உள்ள பிளவுண்ட சிலை ஒன்று காணப்படுகிறது விரிசடையும் ஒரு கையில் உடுக்கையுடன் காணப்படும் இச்சிலையானது பைரவர் அல்லது வீரபத்திரர் சிலை அமைப்போடு உள்ளதாகக் கொள்ளலாம். இது சிவமூர்த்த சிலைகளில் ஒன்றாக இருக்கலாம்.

 

நாட்டரசன் கோட்டை கரிகாற்சோழிசுவரர் கோவில் மற்றும் பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இடிபாடுடைய மண்டபத்தில் 13ஆம் நூற்றாண்டு, 10 துண்டுக்கல்வெட்டுகள்  காணக்கிடைப்பதில் சிவகங்கை தொல்நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்தார்.