மாநில ஆளுநர் பதவியென்பது ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நியமன பதவியே. ஆளுநர்களின் செயல்பாட்டுக்கென பல்வேறு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதில் ஆளுநர்கள், அரசியல்வாதிகளைப்போல் அரசியல் பேசக்கூடாதென்றும், மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்குவதுபோல் செயல்படக் கூடாதென்றும் உள்ளது. ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர்களைப் போலவே செயல்படும் சம்பவங்கள் தற்போது வழக்கமாகி வருகின்றன. இப்படியான செயல்பாடுகளால் அரசியல் கட்சிகளாலும், நீதிமன்றங்களாலும் கண்டிக்கப்படும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது ஊரறிந்த ரகசியம்தான். ஏற்கெனவே பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியதோடு, இறுதியில் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு உச்ச நீதிமன்றத்தால் குட்டு வைக்கப்பட்டார்.
அப்போது நடந்த விவாதத்தில், "குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது என்றாலும் இந்த வழக்கில் அரசியல் சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்'' என்று குறிப்பிட்டது.
இறுதியாக, "மாநில அமைச்சரவையின் முடிவை ஆளுநர் நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை. முடிவெடுக்காமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கத் தேவையில்லை. இதனால், தேவையற்ற கால தாமதம் செய்துள்ளார்'' என கண்டித்த நீதிபதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின்படி பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.
அதேபோல், திராவிட மாடல் அரசு என்று செயல்படும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக, திராவிட மாடல் என்ற ஒன்றே இல்லையென்று ஆர்.என். ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதைவிட பெரிய சர்ச்சையாக, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடந்ததா என்பதை பரிசோதிப்பதற்காக இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைத்தார்.
பொதுவாக ஆளுநர்கள் இப்படியான சந்தேகம் இருந்தால் மாநில முதல்வரையோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையோ அழைத்து விவரங்களைக் கேட்டறிந்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், தீட்சிதர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.வினரைப் போலவே அரசியல் செய்தார். அதையடுத்து, ஆளுநர் கூறிய கருத்து தவறானது என்றும், அப்படியான சோதனை முறை 2013-லிருந்தே தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்தார். விசாரணை முடிவில் அமைச்சர் கூறியதே உண்மையென்பது வெளிப்பட்டது. அதேபோல் தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்த மறுத்து, தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி ஆளுநர் ஏற்படுத்திய சர்ச்சையால் அவர் அளித்த தேநீர் விருந்தை ஆளுங்கட்சியும் தோழமைக் கட்சியினரும் புறக்கணித்தனர். இறுதியாக தற்போது, ஆளுநரின் செயல்பாடுகளுக்கெதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
தமிழகத்தைப் போலவே பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் ஆகியோரும் மாநில அரசுகளின் மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வந்தனர். எனவே கேரளா, பஞ்சாப் மாநில அரசுகளும் ஆளுநர்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது. ஆளுநர்கள் கொஞ்சமாவது மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். அதோடு, தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறக்கக்கூடாது" என்று ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு குட்டு வைத்தது.
ஆர்.என். ரவியைப் போலவே தெலுங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும் இரு மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பதோடு மட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்தும் அரசியல்வாதியைப்போல் எதிர்க்கருத்து சொல்வதை வழக்கமாக்கி வருகிறார். சமீபத்தில், "உங்களுக்கு இந்துக் கோவில்கள் மீது நம்பிக்கை இல்லாதபோது ஏன் அவற்றை கட்டுப்படுத்த நினைக்கிறீர்கள்? தீபாவளிக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் இந்துக் கோவில் சொத்து மட்டும் உங்களுக்கு வேண்டுமா?'' என்று பா.ஜ.க. தலைவரைப் போலவே கருத்து தெரிவித்தார்.
தற்போது, அஸ்ஸாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, ராஜஸ்தான் மாநில தேர்தலில் உதய்பூரில் பா.ஜ.க. வேட்பாளர் தாராசந்த் ஜெயினை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு ஆளுநர், அரசியல்வாதியைப்போல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இந்திய ஜனநாயகத்தில் இதுவரை இல்லாதது! "அஸ்ஸாம் ஆளுநர் தனது நாற்காலியின் கண்ணியத்தை வீழ்த்தியுள்ளார்'' எனக் கண்டனம் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, அவருக்கெதிராக தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது.
இப்படி மாநில ஆளுநர்கள் வரம்பு மீறுவது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவ தென்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.