போராளிகள் வாழ்வில் நிம்மதியான சாப்பாடு, நிம்மதியான உறக்கம், நிம்மதியான வாழ்க்கை என்பது கிடையாது. தங்கள் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தங்களை அர்ப்பணித்து கொள்ளும் வாழ்வு அது. பொதுவாக அந்த நாட்களில் பிரபாகரன் ஆறஅமர சாப்பிட்டது என்பது வெகு அபூர்வம். சாப்பிட வசதியில்லை என்பதில்லை, அதற்கான சூழ்நிலை அமையவில்லை என்பதுதான் உண்மை.
சிங்கள போலீஸ் தேடிக்கொண்டிருக்கும் அந்த தலைமறைவு வாழ்க்கையில் இரவு பொழுதுகளில் வயல் வெளியில் இறங்கி ரொம்பதூரம் நடப்பார். வயற்காட்டில் எங்கே கிழங்கு பயிரிட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார். சர்க்கரைவள்ளி கிழங்கை இரவில் தடவிப் பார்த்து, செடியை உணர்ந்து கிழங்கை தோண்டி எடுத்துக் கொள்வார். மேலும் நடந்து மிளகாய் தோட்டம் பக்கம் சென்று நான்கைந்து பச்சை மிளகாய்களை வேலியோரம் நின்று பறித்துக்கொள்வார்.
எங்காவது கால்வாய் அல்லது குளத்தில் உட்கார்ந்து கொண்டு கிழங்கை கழுவி, தோலை நீக்கி பச்சையாகவே அப்படியே சாப்பிடுவார். தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய். பச்சை சர்க்கரை வள்ளிக்கிழங்கும், பச்சை மிளகாயும் அவருக்குப் பிடித்த உணவு.