- தெ.சு.கவுதமன்

பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் வாக்குகளைக் கவர்வதற்காக, 2018 டிசம்பர் மாதத்தில் பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 5 ஏக்கருக்கும் குறைவாக நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாயை தலா 2,000 ரூபாய் என்று மூன்று தவணைகளாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுக்க சுமார் 12 கோடி விவசாயிகள் (11.84 கோடி) பயனாளர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய விளம்பரமாகக் காட்டினார்கள். அதற்காகவே இத்திட்டத்தின் தொடக்க விழாவை 2019 மார்ச் மாதத்தில் நடத்தினார்கள். பின்னர் அத்திட்டப்படி நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததுதான் சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கியது. இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் தங்களுக்கான உதவித் தொகையைப் பெறுவதற்காகக் காத்திருந்தால் உதவித்தொகை நிறுத்தப்படுவது தொடர்ந்தது. ஒவ்வொரு தவணையாக விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 12வது தவணைத் தொகை வெறும் 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது, முதல் தவணையில் இருந்த விவசாயிகள் எண்ணிக்கையைவிட 67% குறைவாகும்.
தமிழ்நாட்டில் முதல் தவணை ஊக்கத்தொகை 46.8 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 12 வது தவணை ஊக்கத்தொகை அதில் பாதியாக 23.04 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவே கேரளத்தில் 2019ஆம் ஆண்டு 36.99 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது 2022ஆம் ஆண்டில் 24.23 லட்சமாகக் குறைந்துள்ளது. தெலுங்கானாவில் 39.10 லட்சம் விவசாயிகள் 24.32 லட்சம் விவசாயிகளாகக் குறைந்துள்ளனர். இப்படியாக இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பயனாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் என்னவொரு வேடிக்கையென்றால் இப்படி விவசாயிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபரில் 12வது தவணையை வழங்க ஆணையிட்ட பிரதமர், இதன்மூலம் 11 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்றும் அவர்களுக்காக 16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதுவரை இத்திட்டத்துக்காக ஒன்றிய அரசு 2.16 லட்சம் கோடியை செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உண்மையில் 3.87 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே தொகையைச் செலுத்துகிறார்கள் என்றால் 7 கோடிக்கு மேலான விவசாயிகளின் கணக்கு என்னவானது என்பது பெருத்த கேள்விக்குறியாக உள்ளது. அப்படியானால் இதற்காகச் செலவிடப்பட்டுள்ள தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் பலன்பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் யார் என்பதெல்லாம் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சபையைச் சார்ந்த விவசாயி ஒருவர், "மூன்றில் இரண்டு பங்கு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி குறைக்கப்பட்டிருப்பதற்கு ஒன்றிய அரசின் சார்பாக எந்தவொரு சரியான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இதன் போக்கைக் கவனித்தால் கூடிய விரைவில் இந்த ஊக்கத்தொகை முற்றிலுமாக நிறுத்தப்படுமென்றே தெரிகிறது" என்று குறிப்பிட்டார். கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாகக்கூறி கொஞ்சங் கொஞ்சமாக அந்த மானியத்தை காலி செய்ததுபோல் விவசாயிகளையும் நம்ப வைத்து மோசம் செய்யப்போகிறதோ ஒன்றிய அரசு?