Skip to main content

சாதி பெருமையை அடையாளப்படுத்துவதில் என்ன பெருமை வேண்டி கிடக்கிறது - செலின் விவகாரத்தில் எவிடென்ஸ் கதிர் கேள்வி!

Published on 16/11/2020 | Edited on 16/11/2020
hj

 

 

அமெரிக்க அதிபராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அமைத்துள்ள மருத்துவ குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் செலின் இடம் பெற்றுள்ளார். அவர் தன்னுடைய பெயருடன் தன்னுடைய சாதி பெயரையும் இணைத்துள்ளார். இது சர்ச்சையாகி வரும் வேளையில் இதுதொடர்பாக எவிடென்ஸ் கதிர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "அமெரிக்க அதிபராக விரைவில் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் செலின் அவர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அதிபர் குழுவில் இடம் பெறுவது என்பது சாதாரணமானது அல்ல. ஆனால் அவர் தன்னுடைய பெயரில் செலின் கவுண்டர் என்று பதிவு செய்துள்ளார். அதிலும் எந்த தவறும் இல்லை. ஆனால் இன்றைக்கு ஒரு ட்விட் பதிவு செய்துள்ளார் அதையும் தாண்டி, அதில் என்னுடைய சாதி தான் என்னுடைய வரலாறு என்றும், அதுதான் என்னுடைய பெருமை என்றும் குறிப்பிட்டுள்ளார். அங்குதான் வருத்தமாக இருக்கிறது. நமது அரசியல் அமைப்பில் கூட சாதி கூடாது என்று கூறவில்லை, சாதிய பாகுபாடு இருக்கக்கூடாது என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர் தன்னுடைய பெயரில் சாதியை போட்டுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இதுதான் என்னுடைய பெருமை, இதுதான் என்னுடைய வரலாறு என்று அவர் குறிப்பிடுகிறார் என்றால் அதைத்தான் சாதிய திமிராக நாம் சுட்டிக்காட்டுகிறோம். 

 

ஒரு வெள்ளைகாரன் அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை நிறம்தான் என்னுடைய அடையாளம் என்று அமெரிக்காவில் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய வரலாறு என்று சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அங்கிருப்பவர்கள் கைகொட்டி சிரிப்பார்கள். உலகமே கைதட்டி சிரிக்கும். அமெரிக்காவில் தற்போது பொறுப்பில் இருப்பவர்கள் கூட இந்த வெள்ளை தோல்தான் என்னுடைய அடையாளம் சொல்ல முடியாது. அதையும் தாண்டி 1979ம் ஆண்டு சர்வதேச அளவில் நிறவெறிக்கு எதிரான உடன்படிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையில் நிறவெறி சம்பந்தமாக பாகுபாடு காட்டுவது கூட ஒரு வகையில் வன்மம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதி பெருமைதான் என்னுடைய வரலாறு என்பது மறைமுகமாக சாதி பெருமையை திணிப்பது போன்று உள்ளது. அமெரிக்காவில் சாதிப்பாகுபாடு கூடாது என்று தற்போது வழக்கு ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஒரு மருத்துவர் இப்படி வெளிப்படையாக சாதி பெயரை போட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்தியாவில் யாருமே சாதியை போட்டுக்கொள்ளவில்லையா என்று கேட்கலாம், ஆனால் அதைக்கூட அவர்களின் உரிமையாக கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் இது என்னுடைய அடையாளம், பெருமை என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

 

அவர்கள் இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கு நாம் அனைவரும் கடிதம் எழுத வேண்டும். ஏனென்றால் இந்த மாதிரியான சாதி உணர்வுகளை நாம் ஊக்குவிக்க முடியாது. அதை செடியிலேயே பிடுங்கி எறிய வேண்டும். இந்தியர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்முடைய வரலாற்றை கொண்டு செல்லலாம், கல்வியை கொண்டு செல்லலாம், நாட்டின் பெருமைகளை எடுத்து செல்லலாம், அப்படி எடுத்து சென்றால் அது ஒரு நாகரிகம்.  ஆனால் நான் சாதியை கொண்டு செல்வேன் என்பது ஒரு விஷம், ஒரு குப்பை. ஒரு குப்பையை அடையாளப்படுத்துவது என்பது அதைவிட கேவலம். நான் அவர் போட்டுள்ள அந்த குறிப்பிட்ட சாதியை மட்டும் சொல்லவில்லை. எல்லா சாதியையும் சேர்த்துதான் சொல்ல வருகிறேன்.  எந்த சாதியை வெளியே கொண்டு சென்றாலும் அதை ஒரு வன்மமாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. இதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.