நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், ஈரோடு மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கட்சி சார்பாக தி.மு.க. வேட்பாளராக பிரகாஷ் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரை பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு பிரகாஷ் அளித்த பேட்டி பின்வருமாறு...
ஈரோடு மக்களுக்கு மக்களவைத் தொகுதியில் பிரதானமாக விவசாய தொழிலும், ஜவுளி தொழிலும் இருக்கிறது. பத்தாண்டு காலமாக இந்த தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து இருப்பதன் மூலம் விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சனை இருக்கிறது அதற்கு தீர்வு என்ன?
“கடந்த 1989ஆம் வருடம் இதே ஈரோடு மண்ணில் தான், கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்தார். அதை அறிவிக்காமல் இருந்திருந்தால் இங்கு ஒரு துளி விவசாயம் கூட இருந்திருக்காது. 35 ஆண்டுகளுக்கு முன்பாகவே விவசாயிகளை காக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு கலைஞர் அந்த திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல், இன்றைக்கு விவசாயிகள் நலிவடைந்து வருகிற இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட்டை அறிவித்துள்ளது. அந்த பட்ஜெட் மூலமாக விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். அதனால், விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாகத்தான் இந்த அரசு எப்போதும் இருக்கும். அதேபோல் நெசவாளர்களுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறார்கள்”.
விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதே தி.மு.க ஆட்சியில் தான் என்று பாஜகவினர் சொல்கிறார்களே?
“மனசாட்சி இல்லாமல் பேசக்கூடாது. பாஜக குற்றச்சாட்டு வைக்கலாம். ஏனென்றால் அவர்கள் தான் முழுக்க முழுக்க பொய்யே பேசி வருகிறார்கள் விசைத்தறி முதலாளிகள், தொழிலாளர்கள் இதை சொல்கிறார்களா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள், அனைத்தையும் பொய்யாக தான் சொல்லி வருகிறார்கள்”.
இங்கு மஞ்சள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது என்றும் அதற்கு ஏற்றுமதி அதற்கான கிடங்கு, மற்றும் அதற்கான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எல்லாம் வருகிறதே?
“பத்தாண்டு கால ஆட்சியில் இவர்களெல்லாம் அதை செய்யாமல் விட்டு விட்டார்கள். இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மஞ்சள் உட்பட அனைத்து விவசாய பொருட்களுக்கும் ஆதார விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம். எங்கள் ஆட்சி அமைந்தவுடன் பவானிசாகர் பகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் கொண்டு வரப் போகிறோம். விவசாயி முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு என்ன செய்தார் என்றால், எதையும் செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால், கலைஞர் எப்படி விவசாயிகளை கட்டிக் காப்பாற்றினாரோ, மு.க. ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று தனி பட்ஜெட் போட்டு விவசாயங்களை காத்து வருகிறார்”.
உங்களுக்கு முதலமைச்சரும், அமைச்சர் உதயநிதியும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அது எந்த வகையில் பலமாக அமையும் என்று நினைக்கிறீர்கள்?
“அவர்களுடைய சாதனை தான் என்னுடைய பலமாக அமையும் என்று நம்புகிறேன். அவர்களுடைய சாதனைகளை நாங்கள் சொல்வதைவிட, இதுவரைக்கும் செய்த சாதனைகளையும், இனி செய்யப்போகிற சாதனைகளை அவர்களே சொல்லும் போது அது எனக்கு பலமாக அமைகிறது”.
மக்களிடத்தில் தி.மு.க.வின் எந்த திட்டம் அதிகமாக பேசப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்?
“ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம், மகளிர் மத்தியில் முக்கிய திட்டமாக இருக்கிறது. அதேபோல், பெண்களுக்கான கட்டணம் இல்லாத பேருந்து திட்டத்தின் மூலம் ஆயிரம் ரூபாய் மிச்சமாக இருக்கிறது என்று அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதேபோல் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம். இதை எல்லாம் பொதுமக்கள் மிகவும் விரும்புகிறார்கள்”.
ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்ற வாக்குறுதியை கொடுத்து செய்யாமல் இருந்தார்கள். நான் தான் 27 மாதமாக சட்டமன்றத்தில் வலியுறுத்தி, போராட்டம் செய்து பொது வெளியில் பேசினேன். அதன் பிறகு தான், வேறு வழி இல்லாமல் இவர்கள் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறாரே?
“அவர்கள் ஆட்சியை விட்டு விலகும் போது தமிழ்நாட்டினுடைய நிதிச் சுமை 7 லட்சம் கோடியாக இருந்தது. அதற்குண்டான வட்டி தொகையை கட்ட முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதன் பிறகு எட்டு மாதம் கொரோனா காலம். கொரோனாவில் தமிழ்நாட்டையே முடக்கியது இந்த எடப்பாடி பழனிச்சாமி தான். லட்சக்கணக்கான உயிர்கள் இறந்ததற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான். இந்த பாவங்கள் எல்லாம் அவரை சும்மா விடாது. முன்பாக அதை தடுத்து இருக்கலாமே? பிரதமர் மோடியிடம் சொல்லி விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து ஆகிய போக்குவரத்துகளை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அப்படி நிறுத்தியிருந்தால் இந்தியாவிற்கு கொரோனாவே வந்திருக்காது. அந்த காலத்தில் அத்தனை நிதி சுமை இருந்த போதிலும் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி மக்களுக்கு நிதி கொடுத்தார். அதேபோல் இன்றைக்கு 8 லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை இழுத்து அதன் மூலமாக வரும் வருமானத்தை எடுத்து இன்றைக்கு இந்த திட்டங்கள் செயல்படுகிறது” கூறினார்.
பேட்டி தொடரும்...