அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தியை சந்தித்து பேட்டி கண்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு..
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பார் என்று தகவல் வந்த போதும், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் கூறுகின்றார்களே?
“ஊழல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு அதற்கு தண்டனையும் பெற்ற ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இதை கூறுகிறார்கள். இன்றைக்கு யார் மீது வேண்டுமானாலும் குற்றச்சாட்டு வைக்கலாம். அது மாதிரி தான் செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனால் தான் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு சட்டப்பூர்வமான வாய்ப்பு இருக்கிறது. மேலும், அமலாக்கதுறையினர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து மன அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.
செந்தில் பாலாஜி தனது வழக்கறிஞரை கூட பார்க்க அனுமதிக்காமல் செய்து ஹிட்லர் ஆட்சி பாணியை கடைப்பிடித்திருக்கிறது மோடி அரசு. இப்படி தொல்லைகள் கொடுத்து செந்தில் பாலாஜி உடலுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு கொண்டு போய்விட்டார்கள். அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு முதல்வர், செந்தில் பாலாஜியின் இலாகாவை வேறு அமைச்சர்களுக்கு கொடுத்திருக்கிறார். அதனால், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியில் இருந்து விலக்குவதற்கு தற்சமயம் வரை எந்த வித அவசியமும் இல்லை”.
செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கு இருப்பதனால் தான் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கு பின்னால் எந்த வித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று அண்ணாமலை கூறுகிறாரே?
“2016 ஆம் ஆண்டில் போட்ட வழக்குக்கு 7 ஆண்டு கழித்து தான் அமலாக்கத்துறையினர் கைது செய்கிறார்கள். ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே. ஆக, இந்த மோடி அரசு தனக்கு தேவைப்படும் போது தான் பழி வாங்குகிறார்கள். ஏனென்றால், அமலாக்கத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன் என்று செந்தில் பாலாஜி கூறிய பின்பும் எந்த வித முன்னனுமதியும் பெறாமல் அவரது அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார்கள். 7 ஆண்டுக்கு முன்பு செந்தில் பாலாஜி இருந்த துறையே வேறு. அந்த துறைக்கு சம்மந்தப்பட்ட வழக்குகிற்கு இன்றைக்கு இருக்கக் கூடிய அலுவலகத்தை ஒரு நாள் இரவு முழுவதும சோதனை செய்கிறார்கள்”.
2016 ஆம் ஆண்டில் நடந்த வருமானவரிச் சோதனையின் போது, தலைமைச் செயலகத்தில் தான் ஆதாரம் இருக்கிறது என்று அன்றைக்கு இருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறினார் என்று அண்ணாமலை கூறுகிறாரே?
“இந்த கைது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்லாமல் பழி வாங்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டது என்று முதல்வர் அறிக்கையில் கூறியிருக்கிறார். மேலும் இன்றைக்கு இவர்கள் எடுக்கும் இந்த வேகம், ஏன் அன்றைக்கு வழக்கு நடைபெற்ற போது எடுக்கப்படவில்லை என்று தான் நாங்கள் கேட்கின்றோம். ஆக, நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தான் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
மேலும், 2016 ஆம் ஆண்டில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமான சேகர் ரெட்டி மீது இதே அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். அந்த சோதனையில், தடைசெய்யப்பட்ட கட்டு கட்டாக 1000 ரூபாய் நோட்டுகள், தங்கக் கட்டிகள் போன்றவற்றை எடுத்தார்கள் அமலாக்கதுறையினர். ஆனால், இன்றைக்கு சேகர் ரெட்டி அந்த வழக்கில் விடுவிக்கப்பட்டு திருப்பதி கோவிலில் அறங்காவல் உறுப்பினராக இருக்கிறார். இப்படி பாஜக அரசு தங்களுக்கு விருப்பம் இருந்தால் அமலாக்கத்துறையின் மூலம் ரெய்டு நடத்துவார்கள். அதுபோல தான் திமுகவிற்கு தொல்லைகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்”.