அன்னிய மூலதனத்தை இந்தியா வுக்கு கொண்டு வந்ததில் ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ப.சி.யை கைது செய்த செய்தி எதிரொலித்தபோது, சென்னை கோட்டையில் தனது வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டி ருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
28-ம் தேதி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் எடப்பாடி, 22-ம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை கோட்டைக்கு அழைத்தார். எடப்பாடியுடன் வெளிநாடு செல்லும் டீமில் இடம் பெற்றிருக்கும் அவரது ஆல் இன் ஆல் பி.ஏ. கிரிதரன் மற்றும் செயலாளர் விஜயகுமாருடன் சேர்ந்து இருநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வெளிநாட்டு பயணம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக விவாதித்தார். சுகாதாரம், தொழில்துறை, எரிசக்தி, கல்வி, பால்வளம் ஆகியவை முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் இடம் பெறப்போகும் துறைகள்.
சுகாதாரத்தை பொறுத்தவரை ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவது, கல்வித்துறையில் டிஜிட்டல்மய மான கல்விமுறையை கொண்டு வருவது, எரிசக்தி துறையில் சூரிய ஒளி மின்சார திட்டங்கள், தொழில்துறையில் தொழில் முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு, பால்வளத்தில் பண்ணைகளை வளர்க்கும் விதம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தொழில்துறையில் அன்னிய முதலீட்டை கொண்டு வருவது என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய முயற்சி' என தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் ஃபாரின் விசிட் பற்றிய துறை வாரியான கூட்டங் களில் சொல்லி வருகிறார். ஆனால் எடப்பாடி தனது ஃபாரின் விசிட் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. அவரது அசைவுகள் மிகவும் ரகசியமானதாக இருக்கின்றன. பிரதமர், உள்துறை அமைச்சர் இவர்களிடம் மட்டுமே வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்கு ஒரு ரகசிய காரணம் இருக்கிறது.
பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானி இலங்கையில் துறைமுகத் துறையில் ஒரு பெரிய கட்டுமானத்தை செய்ய இருக்கிறார். அதில் அதானியுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற இருக்கிறார்கள். அதுபற்றிய பேச்சுகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காவுக்கும் அ.தி.மு.க.விற்கும் ஒரு தொடர்பு இருந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் உதவியாக இருந்த தொழிலதிபர் தற்பொழுது எடப்பாடிக்கும் உதவியாக இருக்கும்படி பா.ஜ.க. கேட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா-இங்கிலாந்து அரசுகளும் பாதுகாப்பு தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முதலீட்டை வரவேற்கின்றன. இஸ்ரேலும் தற்பொழுது சிவப்புக் கம்பளம் நீட்டி வரவேற்கிறது. அங்கு முதலீடு செய்வது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இஸ்ரேல் நாட்டுக்கு போய் வந்து விட்டார். எடப்பாடியும் "நான் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வேன்' என சேலத்தில் பேசியிருக்கிறார்'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.