Skip to main content

விடியற்காலையிலே எழுந்து நடந்து வரணும்... எங்க வாழ்க்கை குப்பையா இருக்கு... தூய்மை பணியாளர்களின்  சோகம்!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

தமிழகத்தில் குப்பைகளை அகற்றுபவர்கள் இனி துப்புரவுப் பணியாளர்கள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். அதற்குப் பதிலாக தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார் முதல்வர். "பேரு வெச்சியே... சோறு வெச்சியா' என்பதற்கிணங்க தூய்மைப் பணியாளர்கள் என பேர் வைத்தால் போதுமா…எங்களது வாழ்க்கையிலும் சுகாதாரமும் ஆரோக்கியமும் வேண்டாமா என கேள்வியெழுப்புகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.


  cleaning work



தமிழகம் முழுவதுமுள்ள தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை 1,25,586. இதில் சென்னையில் மட்டும் 15 மண்டலம் 200 வார்டுகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 19,575 பேர். முச்சக்கர வாகனத்தில் வந்து தூய்மை பணி செய்பவர்கள் 5,400 பேர், பேட்டரி சைக்கிளில் பணியில் ஈடுபடுபவர்கள் 434 பேர். மீதமுள்ளவர்கள் இதர பணிகளில் ஈடுபடுகிறவர்கள். நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 5,100 டன் குப்பை சென்னையில் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது.

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மூன்று மண்டலங்களை ஏற்கனவே அரசு தனியாரிடம் டென்டர் விட்டிருந்த நிலையில், மேலும் 1, 2, 3, 7, 11, 12, 14, 15 ஆகிய 8 மண்டலங்களையும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கம்பெனிக்கு ஒப்பந்தம் மூலம் தற்போது கொடுத்துள்ளது. கரோனா வந்ததையடுத்து அந்த கம்பெனி துப்புரவுப் பணிகளைச் செய்யாமல் நிறுத்திவைத்துள்ளது. வேறுவழியில்லாமல் வழக்கம்போலவே அரசுப் பணியாளர்களும் அரசு ஒப்பந்தப் பணியாளர்களும்தான், இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

cleaning work



இதில் அரசுப் பணியாளர்களைக் காட்டலும் ஒப்பந்த ஊழியர்களே அதிகமானோர் பணிபுரிகின்றனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச சம்பளமான ரூ.15 ஆயிரம் வழங்கப்படாமல் ஒருநாள் கூலியாக ரூ 270 என மாதம் 8100 ரூபாய்தான் இவர்கள் சம்பளம். பி.எப். பிடித்தம், ஈ.எஸ்.ஐ. பிடித்தம் போக மாதம் 6,000தான் கையில் சம்பளமாக வழங்கப்படுகிறது. இருந்தபோதும் தற்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அரசுப் பணியாளர்களாக மாற்றுங்கள் என்றும், ஊதியத்தை உயர்த்திக்கொடுங்கள் என்றும் போராட்டத்தில் ஈடுபடாமல், மக்கள் நலன் கருதி தன்னுடைய உயிருக்கு என்ன நடந்தாலும், மற்றவர்களுக்கு எந்த நோயும் வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பணியாற்றும் இவர்களுக்கு இந்த அரசு என்ன பாதுகாப்பு செய்துள்ளது என்று பார்த்தால் பெரிய கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
 

nakkheeran app



எழும்பூர் மருத்துவமனை பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அருகிலுள்ள மருத்துவர் குடியிருப்பில் சற்று இளைப் பாறிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் சென்று பேசியபோது, “என்ன தம்பி செய்யறது சுனாமி குடியிருப்பில் இருந்து நடந்தே எக்மோருக்கு 6 மணிக்கெல்லாம் வரணும். இல்லனா கத்துவாங்க, இப்போதான் பஸ்ஸே வரதில்லையே, அதனால விடியற்காலையிலேயே எழுந்து நடந்து வரணும்.'' என்றார். பாதுகாப்பாக பணிபுரிய முகக்கவசம், கைகழுவ பயன்படுத்தும் கிருமிநாசினி, சோப், கையுறைகள் கொடுக்கிறார்களா என்று கேட்டதற்கு, ""ஆரம்பத்தில் முகக்கவசம் மட்டும்தான் கொடுத்தார்கள், அதுவும் இரண்டு நாளுக்குமேல் வரல, நாங்களே வாங்கிட்டு வருவோம். இல்லையென்றால் துணியால் மூடிக்கொள்வோம்'' என்றார்.

 

speech



அதேபோல அண்ணாநகரிலுள்ள மணிக் கூண்டு சாலையில் கையில் எந்த கையுறையோ, முகக்கவசமோ இல்லாமல் தூய்மை செய்துகொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்ததும் தன் பெயர் பி.ராஜ்குமார் என்றார். உங்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் தரலயா என்று கேட்டதுமே, "போங்க சார் கரோனா வந்ததிலிருந்து குப்பை அள்ளினுதான் இருக்கோம், ஆனா எங்களுக்கு ஒரு மருத்துவ செக்கப்கூட செய்யல, அவங்களுக்கு என். 95 மாஸ்க், எங்களுக்கு நார்மல் மாஸ்க். அதையாவது ஒழுங்கா தராங்களா? இல்லையே. ஒரு டம்ளர் கபசுரக் குடிநீர்கூட கொடுக்கல. முன்னெச்சரிக்கை நடவடிக்கையா அதையாவது கொடுக்கச் சொல்லுங்க சார்'' என்றார்.

இதுதொடர்பாக பேசிய சமூக ஆர்வலர் பே.பெலிக்ஸ், "இங்கே கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன, மருத்துவமனையிலும், சாலை ஓர குப்பைகளையும் அகற்றி கிருமிநாசினி தெளித்து வரும் இவர்களே நிஜ தெய்வங்கள். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வீசும் இந்த குப்பைகளை தரம்பிரித்து அகற்றும் பணியில் ஈடுபடும்போது பொதுவாகவே நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இவர்களுக்கு கரோனா நேரத்தில் மட்டுமல்லாது எப்போதுமே கையுறை, முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்புகளை வழங்கவேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.
 

சென்னை கார்ப்பரேஷன் ஹெல்த் செகரட்டரி செந்தில்நாதனோ இதுதொடர்பாக பேச மறுத்துவிட்டார். அரசு அனைவருக்கும் மாஸ்க், கைகழுவ கிருமிநாசினி கொடுப்பதாகச் சொல்கிறது. ஆனால் அவர்களுக்குச் சென்று சேர்வதில்லை. இதற்கான டெண்டர் அமைச்சர் வேலுமணியின் மச்சான் கையில் உள்ளது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கண்டும் காணாமல் செல்கிறார். அதனால்தான் அனைவருக்கும் இந்த பாதுகாப்பு சாதனங்கள் கிடைப்பதில்லை என்கிறார்கள் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள்.

அழுக்கு சென்னையை, அழகு சென்னையாக மாற்றும் இந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களது ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
 

படங்கள்: ஸ்டாலின்