Skip to main content

இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மறுப்பவர்கள் முட்டையை எப்படி அனுமதிப்பார்கள் - மருத்துவர் ஷாலினி கேள்வி!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகள் சிலவற்றில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சில நாட்களுக்கு முன் தொடங்கியது. காலை உணவாக அவர்கள் வழங்கும் உணவில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் முதலியவை இருக்காது என்றும், அதில் கிடைக்கும் சத்துக்களை வேறு காய்கறிகளை கொண்டு சரிசெய்வோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இதுகுறித்து மருத்துவர் ஷாலினியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 
 

d



அக்‌ஷயபாத்ரா என்ற திட்டம் ஸ்கான் என்ற என்ஜிஓ நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உணவு வழங்குகிறார்கள். அது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பதால் மாணவர்களுக்கு அதனை இலவசமாக வழங்கி வருகிறார்கள். தமிழகத்தில் அரசே மதிய உணவு திட்டத்தை நடத்திவருகின்ற சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 24 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் இந்த திட்டத்தை இந்த தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான இடத்தை தற்போது தமிழக அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது ஒருபுறம் அரசியலோடு பார்க்கப்படுகிறது என்றால், அங்கு வழங்கப்படும் உணவில் இஞ்சி, பூண்டு, வெங்காயம் முதலியவற்றை தவிர்த்துவிட்டு வழங்குவதாக கூறப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் கூறுகின்ற நிறுவனம் பல ஊர்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவினை அளிப்பதாக கூறுகிறீர்கள். அது உண்மையும் கூட இருக்கலாம். ஏனென்றால் தமிழகம் போல அங்கே மதிய உணவு திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமும் அங்கே இல்லை. ஆனால் தமிழகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதே மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். முதலில் அப்போது கொண்டு வரப்பட்டதே காலை உணவு கொடுக்கும் திட்டம்தான். நூறு வருடத்துக்கு முன்பு கண்டுபிடித்ததை தற்போது அவர்கள் செய்கிறார்கள் என்றால் அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் நிலம் கேட்கிறார்கள், சென்னை மாநகராட்சிக்குள் கேட்கிறார்கள், அதை வைத்து எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. காலை உணவாக நம்முடைய வீடுகளில் அசைவ உணவை யாரும் செய்யமாட்டார்கள் என்பதால் அவர்கள் வழங்கும் காலை உணவில் எந்த பிரச்சனையும் எழப்போவதில்லை. ஆனால் நாங்கள் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சாப்பிட மாட்டோம், நீங்களும் சாப்பிடக்கூடாது என்று சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மூன்றையும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுபவர்கள் சாப்பிடுவதில்லை. 

அதனால் அதனை குழந்தைகள் மீது திணிக்கிறார்களோ என்ற அச்ச உணர்வு இயல்பாகவே நமக்கு எழுகின்றது. இவர்களுக்கு அந்த உணர்வு என்பது சமண மதத்தில் இருந்து வந்தது. அவர்கள் தான் பூமிக்கு அடியில் இருக்கும் உணவை சாப்பிட மாட்டார்கள். மேலும் உணவை இயந்திரமாக பிரித்து ஒரு இயந்திரம், இரண்டு இயந்திரம் என்று பிரித்து வைத்து சாப்பிடுவார்கள். கேரட், பீட்ரூட்  முதலிய காய்கறிகளை கூட அவர்கள் சாப்பிட மாட்டார்கள். எனவே நாங்கள் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சாப்பிடாமல் இருந்தால் இவர்கள் சொல்லும் உணவை சாப்பிடலாம். இந்த குறிப்பிட மூன்று காய்கறிகளில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தரமாட்டேன் என்று சொல்வதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது. அதில் உள்ள சத்துக்களை வேறு விதமாக தருவோம் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் தர முடியாது. ஒவ்வொன்றுக்கும் தனிதனியான தன்மைகள் இருக்கின்றது. சத்துக்கள் அடங்கி இருக்கின்றது. எனவே இதற்கு பதில் அது என்பது சரியான முறையாக இருக்காது.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு அவர்கள் உணவினை தருகிறார்கள். அதை உதவி மனப்பான்மையோடு நாம் ஏற்றுக்கொள்வதில் என்ன சிரமம் இருக்க போகின்றது?

இவர்கள் இதோடு அதனை நிறுத்திக்கொண்டால் நாம் கவலைப்பட போவதில்லை. ஆனால் அவர்களின் உள் உணர்வு வேறாக இருக்குமோ என்று நாம் சந்தேகப்பட வேண்டிய தன்மை ஏற்படுகிறது. காலையில் தொடங்குவதாகக் கூறிக்கொண்டு மதிய உணவையும் இவர்கள் வழங்கினால் அதில் ஏற்படும் பிரச்சனைகளால்தான் நாங்கள் முன்கூட்டியே அதுப்பற்றி பேசி வருகிறோம். நான்தான் காலை உணவை நன்றாக போட்டேனே, மதிய உணவை போடமாட்டேனா என்று கூறிக்கொண்டு மதிய உணவை இவர்கள் போட ஆரம்பித்தார்கள் என்றால், அது விபரீதத்தில் கொண்டு போய் விடும். அவர்கள் இஞ்சி, பூண்டை அனுமதிக்காதவர்கள் முட்டையை மாணவர்களுக்கு வழங்க அனுமதிப்பார்களா என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழும். இதனால் நம் குறைந்தைகளுக்கு சத்துக்கள் குறைந்து விடும். ஒரு வீட்டில் சமயலறை என்பதுதான் பவரான ஒரு இடம். அந்த இடத்தில் சமைப்பவர்களுக்குத்தான பவர் அதிகம். அதை போல தமிழக குழந்தைகளுக்கு அவர்கள் சமைக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு அதிக அதிகாரம் இயற்கையாகவே வந்துவிடும். அவர்கள் கொடுக்கும் உணவில் எங்கே சந்தேகம் வருகிறது என்றால் நமக்கு பிடித்த உணவை வழங்காமல் அவர்கள் சாப்பிடும் உணவை நமக்கு திணிக்க பார்ப்பதே காரணமாக இருக்கிறது. நீங்கள் நல்லவர்கள், தியாகிகள் என்றால் அடுத்தவர்களுக்கு பிடித்த உணவை வழங்காமல் உங்களுக்கு பிடித்த உணவை ஏன் வழங்குகிறீர்கள்.