அவதூறு பரப்பக் கூடாது: அமைச்சருக்கு முத்தரசன் கண்டனம்
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்தியதையடுத்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. அமைச்சர்கள் பஸ் ரூட் வாங்கியிருக்கிறார்கள், ஆகையால் சுயலாபத்திற்காக கண்டத்தை உயர்த்தியுள்ளனர் என முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கட்டண உயர்வு குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,
தமிழ்நாடு அரசாங்கம் பேருந்து கட்டணங்களை பலமடங்கு மிக கடுமையாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இதனை எதிர்த்து பொதுமக்களும், மாணவர்களும் தாமாகவே முன்வந்து கடந்த 19ஆம் தேதி முதல் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளுக்கு எந்த வகையிலும் மதிப்பு அளிக்காத வகையில், கட்டண உயர்வு திருப்பப் பெற மாட்டாது என்று திட்டவட்டமாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிக்கிறார்.
கட்டண உயர்வுக்கு காரணம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்குகிறது என்று அவர்கள் சொன்னாலும், அமைச்சர்கள் பலருக்கு பேருந்து ஓடுகிறது. பினாமி பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் இந்த கட்டண உயர்வு வந்தது என்று பலரும் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பேருந்து கட்டண உயர்வை கண்டிக்கிறார். தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கிறார். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்டண உயர்வு சரிதான் என வரவேற்கிறார். ஒரே கட்சியைச் சேர்ந்த இரு முக்கிய நபர்கள் மாறுபட்ட கருத்துக்களை சொல்கின்றனர். இதற்கான விளக்கத்தை மாநிலத் தலைவரான தமிழிசைதான் கூறவேண்டும்.
போக்குவரத்து துறை அமைச்சர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தொழிற்சங்க வேலைநிறுத்தம் நடைபெற்றபோது, கம்யூனிஸ்டுகள் கட்டணத்தை உயர்த்துங்கள் என்று கூறினார்கள். ஆனால் இப்போது போராடுகிறார்கள். அவ்வாறு அவர் கூறியது கடும் கண்டத்திற்கு உரியது. எந்த தொழிற்சங்க தலைவர்களும் அப்படி கூறவில்லை.
நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்ய வேண்டும். பழைய பேருந்துகளை கைவிட்டு புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்கிற யோசனைதான் சொல்லப்பட்டதே தவிர, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று எந்த தொழிற்சங்கத் தலைவர்களும் சொல்லவில்லை. சொல்லாததை அமைச்சர் கூறியிருப்பது, அப்பட்டமான பொய் என்பது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்கு உரியது. இப்படி அவதூறு பரப்பக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
-வே.ராஜவேல்