நாயை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பழகுவது ஆபத்து. நாயிடம் உள்ள கேப்னோசிடோபாகா என்ற பாக்டிரீயா ரத்தத்தில் கலந்து, திசுக்களைக் கொன்று, உடல் பாகங்களை பாதிக்கும் என்று அமெரிக்க டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கிரேக் மேன்ட்யுஃபெல் என்பவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநில மருத்துவமனைக்கு சென்றார். காய்ச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்த அழுத்தம் படுவேகமாக குறைவதை பார்த்த டாக்டர்களுக்கு ரத்தப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியை அளித்தது.
அவருடைய கால்களுக்கு ரத்தம் செல்வது வெகுவாக குறைந்தது. இது நீடித்தால் அவருடைய திசுக்கள் மிக அதிகமாக இறக்க நேரும் என்று டாக்டர்கள் அறிந்தனர். ரத்தப் பரிசோதனையில் கிரேக்கை தாக்கியிருப்பது கேப்னேசைடோபாகா என்ற பாக்டீரியா என்பது புரிந்தது.
இந்த பாக்டீரியா பொதுவாக நாய்களிடமும், பூனைகளிடமும் மட்டுமே இருக்கும். நாய்களைக் கொஞ்சும்போதும், அவற்றுடன் தூங்கும்போதும், அவை நமது முகத்தை நாக்கால் நக்கும்போதும், நாம் அவற்றுக்கு முத்தமிடும்போதும் நமது ரத்தத்தில் பரவக்கூடும் என்கிறார்கள்.
கிரேக்கிற்கு ரத்த ஓட்டம் குறையக்குறைய எதிர்ப்பு சக்தி குறைந்தது. இதையடுத்து அவருடைய கால்கள் நீக்கப்பட்டன. பொதுவாக 74 சதவீத நாய்களுக்கும் 57 சதவீத பூனைகளுக்கும் கேப்னோசைடோபாகா என்ற பாக்டீரியா இருக்கும். இது நாய்களுக்கோ, பூனைகளுக்கோ சுகவீனத்தை தராது. ஆனால், அவற்றுடன் நெருக்கமாக இருக்கும் மனிதர்களுக்குள் பரவினால் மிகமோசமான பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் நான்கு நாட்களுக்குள் இந்த பாக்டீரியாவின் பாதிப்பு தெரியவரும். அதிகபட்சம், 14 நாட்களுக்குள் பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் நோயின் அறிகுறிகள் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.