Skip to main content

திமுக வாக்குறுதிகளும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் வெளிப்படுத்தும் உண்மை!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

திமுகவின் தேர்தல் அறிக்கை திமுக அணியினருக்கு கதாநாயகன் கதாநாயகியாகவும், எதிர் அணியினரின் வெற்றியைப் பறிக்கும் வில்லனாகவும் மாறி விவாதப் பொருளாகியிருக்கிறது. திமுக எதையெல்லாம் தனது தேர்தல் அறிக்கையில் செய்வோம் என்று வாக்குறுதி அளித்ததோ, அவற்றில் பெரும்பாலானவற்றை காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு வலுச்சேர்த்திருக்கிறது.

 

congress

 

தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக மட்டுமல்ல, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கிற தேர்தல் அறிக்கையாக திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் அமைந்திருக்கின்றன. பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் இந்தத் தேர்தல் அறிக்கைகளை பார்த்து மிரண்டு போயிருப்பதாகவே படுகிறது. ஏனெனில், தனது ஐந்தாண்டு சாதனைகளை சொல்ல முடியாத மோடி, பாகிஸ்தானை வைத்து பிரச்சாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதேசமயம், மக்களின் எதிர்காலம் குறித்தும் அவர்களுடைய வாழ்வாதாரம் குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்துவதையே தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.

 

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் அறிக்கையை தேர்தலுக்கு முன் வெளியிடும் பழக்கத்தையே திமுகதான் தொடங்கி வைத்தது என்பது சுவாரசியமான தகவல்…

 

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் திமுக போட்டியிடாவிட்டாலும், தனது நிலைப்பாட்டை விளக்கி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இயக்கம் திமுக. அந்த அறிக்கையில், “திராவிடர்களின் கருத்தை அறியாமலும், திராவிடர்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும் ஒரே கட்சியின் சர்வாதிகார முறையில் தயாரிக்கப்பட்ட அரசியல் சட்டத்தை கண்டிக்கும் வகையில் தேர்தலில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய திராவிட இனமொழி வழி மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை ஏற்கும் கட்சிகளை திமுக ஆதரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.

 

அன்றுமுதல் திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யும் என்று மக்களுக்கு முன்கூட்டியே வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அந்த தேர்தல் அறிக்கைகள் எப்போதுமே தமிழக மக்களின் வாழ்க்கையை கட்டமைக்கும் திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

திமுக வெற்றிபெற்றால் தான்கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. ஏனென்றால், எதைச் செய்ய முடியுமோ அதை முன்கூட்டியே திட்டமிட்டே தேர்தல் அறிக்கையை திமுக தயாரிக்கும். அந்த அடிப்படையில்தான் கலைஞர் “சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்” என்ற முழக்கத்தையே உருவாக்கினார்.

 

2006 ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ‘கதாநாயகன்’ என்று வர்ணித்தார். அந்த அறிக்கையில்தான் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றும், இலவச வண்ணத் தொலைக்காட்சி என்றும், கியாஸ் அடுப்பும் சிலிண்டரும் என்று திமுக வாக்குறுதிகளை வழங்கியது. கட்சியின் மாபெரும் வெற்றிக்கு இந்த வாக்குறுதிகள் மிக முக்கியமான காரணமாக இருந்தன.

 

2011 தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபோது, இந்தத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது ‘கதாநாயகியாக’ இருக்கும் என்றார் கலைஞர்.

 

2016 தேர்தலிலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கிற்கு முதல் கையெழுத்து, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி என்றெல்லாம் மிகமுக்கியமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதே வாக்குறுதிகளுடன் அதிமுகவும் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

 

dmk

 

அந்த வகையில் 2019 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபோது, திமுகவின் தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “கதாநாயகனாகவும், கதாநாயகியாகவும் இருக்கும். நிச்சயம் வில்லனாக இருக்காது” என்று பதிலளித்தார்.

 

ஆனால், அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கை எதிர் அணியினருக்கு வில்லனாகவே அமைந்துவிட்டது. மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்ட தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், கவுரவத்தையும் மீட்டெடுக்கிற வகையிலான 43 வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

விவாசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி, கிராமப்புற மாணவர்களும் மருத்துவர்களாகும் கனவை தகர்த்த நீட் தேர்வு ரத்து, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவருவது, தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும் ஏற்று இருப்பதால் நிறைவேற்றக் கூடியவைதான் என்பதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

 

neet

 

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில், தமிழையும் இணைமொழியாக அங்கீகரிக்க தேவையான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு 60 சதவீதம் பங்கு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உறுதிசெய்யப்படும் என்ற வாக்குறுதிகள், திமுக பங்கேற்கும் மத்திய அரசாங்கத்தால் எளிதில் நிறைவேற்றக் கூடியவை என்று வல்லுநர்களே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய பென்சன் திட்டம் என்ற வாக்குறுதி அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. அதுதவிர, தொழிலாளர்களின் ஓய்வூதியம் குறைந்தபட்சமாக 8 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்படும், வருமான வரிக்கான அதிகபட்ச வருமானம் 8 லட்சமாகவும், மூத்த குடிமக்களுக்கு 10 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதிகள் நடுத்தர வர்க்கத்தை சிந்திக்க வைப்பவை.

 

கியாஸ் மானியத்தை தனியாக கொடுப்பதற்கு பதிலாக, சிலிண்டரின் விலையை குறைப்பது, பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் மோசடியை ஒழித்து பழைய நிர்வகிக்கப்பட்ட விலை முறையை அமல்படுத்துவது இல்லத்தரசிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.

 

வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் பிடித்தம் செய்யப்பட்ட சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பித்தரவும், வரிவசூல் உரிமம் முடிந்த நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் ரத்து, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ திட்டம், கேபிள் டி.வி. கட்டணம் குறைப்பு ஆகியவை அனைத்துத் தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளன.

 

எல்லாவற்றுக்கும் மேலாக மோடியால் கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்க முடியாத வேலைவாய்ப்பை உருவாக்கவும், பறிக்கப்பட்ட வேலைவாய்ப்பை மீட்டுத்தரவும் திமுக தேர்தல் அறிக்கை ஆக்கபூர்வமான திட்டங்களை அறிவித்துள்ளது.

 

10 ஆம் வகுப்புவரை படித்த 1 கோடி இளைஞர்களுக்கு நெடுஞ்சாலைப் பணியாளர் வேலையும், 10 வகுப்பு படித்த 50 ஆயிரம் இளம்பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர்கள் வேலையும் உருவாக்கப்படும். வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் இலவசக் கருவிகளுடன் 150 ஆக உயர்த்தப்படும், மத்திய மாநில அரசு நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிற பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும், கார்பரேட் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் 50 லட்சம் பேருக்கும் வேலை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதிகள் அனைத்தும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒளி பாய்ச்சுவதுடன், வேலைவாய்ப்புகளை எப்படியெல்லாம் உருவாக்கி சமுதாயத்திற்கு உதவலாம் என்ற திமுகவின் சமூகநீதி பார்வையை இந்தியா முழுமைக்கும் தெளிவுபடுத்தியுள்ளது.

 

gst

 

மோடியால் சீர்குலைந்து பொருளாதாரத்தை சீரமைக்க பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழு அமைப்பது, ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் நிலவும் ஏற்ற இறக்கத்தை சீரமைப்பது, கிராமப் பகுதியில் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்குதல், கடந்த 11 ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டுள்ள சேதுசமுத்திர திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு நிறைவேற்றுவது, பட்டாசுத் தொழிலைப் பாதுகாத்து, ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுகவின் பொருளாதார சீரமைப்புப் பார்வைக்கு எடுத்துக்காட்டாக பொருளாதார வல்லுநர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

 

சுற்றுச்சூழலையும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவும் இந்தத் தேர்தல் அறிக்கை உறுதி அளித்திருப்பதை இவற்றுக்கு எதிராக போராடும் சூழலியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

 

திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் சிலவற்றை அதீதமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், திமுக ஆதரவுடன் மத்தியில் வாஜ்பாய் மற்றும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கங்களின் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இணைத்ததைப் போல, இவற்றையும் இடம்பெறச் செய்ய முடியும் என்று திமுகவினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

 

ஆனால், காங்கிரஸ் கட்சியோ தனது தேர்தல் அறிக்கையிலேயே திமுகவின் முக்கியமான அம்சங்களான நீட் தேர்வு ரத்து, விவசாயக்கடன் தள்ளுபடி, கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றம், குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிப்பு ஆகியவை உள்பட பலவற்றை இணைத்திருக்கிறது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையா திமுகவின் தேர்தல் அறிக்கையா என்ற விவதாமே எழுந்துள்ளது. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுமைக்குமே சமூகநீதியை உறுதிப்படுத்தும் அறிக்கையாக காங்கிரஸ் அறிக்கை இருப்பதாக பொருளாதார அறிஞர்களும் கல்வியாளர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.