திமுகவை பாஜக நெருங்குவதாக கூறமுடியாது -விஜயதாரணி பேட்டி!
கலைஞரை மோடி சந்திப்பது தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நேற்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்த நிலையில், அதை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மறுத்திருந்தனர். இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதாரணியிடம் கேட்டபோது அவர் கூறியது...,

கொள்கைகளை கைவிடாததால்தான் திமுக இன்று இந்தளவு முன்னேறி இருக்கிறது. தமிழர்களின் நலன் காக்கும் நோக்கோடுதான் திமுக தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறது. தமிழர் நலனுக்காக மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுக்கும் இடத்தில்தான் திமுக இருக்கிறது. கலைஞரை மோடி சந்தித்ததால் திமுகவை பாஜக நெருங்குகிறது என்றும் கூற முடியாது. இப்படி தவறாக புரிந்து கொள்ள வேண்யது இல்லை.
திமுகவின் கோரிக்கையை ஏற்று செம்மொழி அந்தஸ்தை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்தது. இன்று அந்த செம்மொழி உள்ளிட்ட திமுக கொண்டு வந்த பல்வேறு விசயங்களுக்கு மூடுவிழா காண மத்திய பாஜக அரசு துடிக்கிறது. இப்படி இருக்கும்போது திமுக பாஜகவோடு எந்த நெருக்கமும் வைத்துக்கொள்ளாது.
மோடியின் வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளாரே?
பாஜகவுக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு உள்ளது. அந்த எதிர்ப்பை குறைக்க இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். டெல்லி பாஜக கையில்தான் அதிமுக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதை மறைக்க, திமுகவோடும் நல்லுறவோடு உள்ளோம் என்றும் காட்டிக்கொள்ள இந்தச் சந்திப்பை பயன்படுத்தியுள்ளனர். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க, திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே உள்ள நெருக்கத்தை குறைக்கவும் இந்த சந்திப்பை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியுடன், திமுக தேர்தலில் நிற்கக்கூடாது, தனித்து நின்றாலும் பரவாயில்லை என்றும் பாஜக நினைக்கிறது. ஆக எப்படிப் பார்த்தாலும் திமுக தனது கொள்கைக்கு எதிராக எந்த தவறையும் செய்யாது என்றார்.
-வே.ராஜவேல்