Skip to main content

திமுகவின் 4 எம்.பி., 8 மா.செ., 10 எம்.எல்.ஏ.க்களை ஸ்கெட்ச் போட்டு பிடியில் வைத்துள்ள பா.ஜ.க.? தடுப்பு வியூகத்தில் ஸ்டாலின்!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
mks

 

 

மாநிலத்தில் வலிமையாக உள்ள கட்சிகளை பதம் பார்க்கும் படலத்தில் தமிழகத்தில் தன் ஆட்டத்தை அடித்து ஆட துவங்கியிருக்கிறது பாஜக. தி.மு.க எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் டெல்லி பயணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது.

 

சென்னை மேற்கு மா.செ.வாக இருந்த ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து அந்த பதவியைப் பிடிக்க கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் உட்பட மாவட்டத்திலுள்ள மூத்த பகுதி செயலாளர்கள் பலரும் முயற்சித்தனர். ஆனால், சீனியர்கள் யாரையும் நியமிக்காமல் இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவை உதயநிதியின் வற்புறுத்தலில் நியமித்தார் மு.க.ஸ்டாலின். இது அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதை ஸ்டாலினின் கவனத்துக்கு மூத்த தலைவர்கள் கொண்டு சென்ற நிலையிலும் அதனை சரிசெய்ய அக்கறை காட்டப்படவில்லை. சிற்றரசு கூட்டிய நிர்வாகிகள் கூட்டத்தை கு.க.செல்வம் உட்பட பலரும் புறக்கணித்திருந்தனர்.

 

இந்த நிலையில்தான், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான கு.க.செல்வம் டெல்லியில் தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பாஜக துணைத்தலைவர் ராஜா சகிதம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். 40 நிமிடத்துக்கும் அதிகமாக நீடித்த சந்திப்புக்குப் பின் மீடியாக்களிடம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிஃப்ட் வேண்டும் என்ற கோரிக்கைக்காக வந்தேன் என்றார்.

 

செல்வத்தின் டெல்லி பயண விவகாரம் தி.மு.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், ஸ்டாலின் மீதான விமர்சனத்தையும் உருவாக்கியது. இதனையடுத்து, கட்சியின் உயர்நிலை நிர்வாக குழுவிலுள்ள துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலருடனும் ஸ்டாலின் விவாதிக்க, செல்வத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தினர். இதனையடுத்து, கட்சி பொறுப்புகளிலிருந்து செல்வத்தை நீக்கி, விளக்க நோட்டீஸ் அனுப்பினார் மு.க.ஸ்டாலின்.

 

selvam

 

 

இதுகுறித்து தமிழக பா.ஜ.க.வின் உள்வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜகவில் இணைவதற்காக தான் டெல்லிக்கு சென்றார் செல்வம். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து நட்டாவுக்கு சில உத்தரவுகள் போனதால் கடைசி நேரத்தில் செல்வம் ஜகா வாங்க வேண்டியதாயிற்று. தி.மு.க.வில் சிலரின் மிதமிஞ்சிய ஆதிக்கத்தால் அப்செட்டில் இருப்பவர்களில் 2 மூத்த தலைவர்கள், 4 எம்.பி.க்கள், 8 மா.செ.க்கள், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டு, பா.ஜ.க. தன் பிடியில் வைத்துள்ளது. தேர்தல் நெருக்கத்தில் டெல்லியின் இலக்கு நிறைவேற்றப்பட விருக்கிறது'' என்கிறார்கள்.

 

sekar babu

 

இதுகுறித்து சென்னை கிழக்கு மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான சேகர்பாபுவிடம் பேசியபோது, "செல்வம் போன்றவர்களால் கட்சிக்கு சிறிய சிராய்ப்புக்கூட ஏற்படாது. அதிகார அழுத்தத்தினால் தி.மு.க.வை பலகீனப்படுத்தலாம் என பா.ஜ.க. நினைக்குமானால், முன்பைவிட வீறுகொண்டு தி.மு.க. எழும். நெருக்கடிநிலை காலத்திலிருந்தே இதுதான் வரலாறு. கலைஞர் மறைவுக்கு பிறகு, தி.மு.க.வின் கம்பீரம் எங்கள் தலைவர் ஸ்டாலின். அவரை, பா.ஜ.க. உள்ளிட்ட எந்த அதிகார மையமும் மிரட்டி பணிய வைத்துவிட முடியாது'' என்கிறார் மிக ஆவேசமாக.

 

டெல்லிக்கு செல்வம் பறந்த பின்னணி குறித்து விசாரித்தபோது, "பாஜகவில் இணைந்து சமீபத்தில் மாநில பொறுப்பு வாங்கிய ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் நபருக்கும், கு.க. செல்வத்துக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சென்னையிலுள்ள முக்கியமான மருத்துவமனை விற்பனைக்கு வருவதை அந்த பா.ஜ.க. பிரமுகரிடம் தெரிவித்த செல்வம், இதனை வாங்கும் சக்தி டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைவர்களுக்குத்தான் இருக்கிறது என சொல்ல, இதனை முருகனிடம் தெரிவிக்கிறார் அந்த பிரமுகர். மூவரும் அடிக்கடி சந்திக்க, மருத்துவமனை விற்பனை விவகாரத்தை நட்டாவின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார் முருகன். நேரம் வரும்போது அழைத்து வாருங்கள் என டெல்லி தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில்தான், மா.செ. பதவி கிடைக்காத அதிருப்தியை செல்வம் பகிர்ந்துகொள்ள, மாற்று கட்சியினரை வளைக்கும் அசைன்மெண்டில் இருக்கும் முருகன், தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ.வை தூக்கினால் நமக்கு மரியாதை உயரும் என்கிற ரீதியில் தகவல் தெரிவித்து, டெல்லி ப்ரோக்ராம் முடிவு செய்யப்படுகிறது.

 

Nakkheeran AD

 

முரளிதரராவ், முருகன், செல்வம் ஆகியோர் நட்டாவின் வீட்டில் அவரை சந்தித்து விவாதிக்கின்றனர். பரபரப்பான இந்த விவகாரத்தை பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் அமித்ஷாவின் சிஷ்யரான தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ். தனக்கு தெரியாத மூவால் அதிர்ச்சியடைந்துள்ளார் மோடி. அயோத்தி பயணம் இருக்கும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் சரியல்ல என சந்தோஷ் மூலம் நட்டாவுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார் மோடி.

 

அதாவது, எந்த சூழலிலும் பா.ஜ.க.வில் அவர் இணைந்ததாக செய்தி வரக்கூடாது. இணைவதெல்லாம் சென்னையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற உத்தரவு அது. இதன்பிறகே, பல்டி அடித்தார் செல்வம். அப்செட் மூடில் இருந்த நட்டாவும் மற்றவர்களும் பிஸ்னெஸ் விசயங்களை விவாதித்துவிட்டு செல்வத்தை சென்னைக்கு அனுப்பி வைத்தனர்'' என்று பின்னணிகளை விவரிக்கின்றனர் மத்திய உளவுத்துறையினர்.

 

சீனியர்களின் அதிருப்தியை சரிசெய்யும் தடுப்பு வியூகத்தில் உள்ள மு.க.ஸ்டாலினிடம், உதயநிதியின் தலையீடுகள் பற்றியும் சீனியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளில் முறையே துரைமுருகன், கனிமொழியை நியமிக்க ஸ்டாலின் திட்டமிடுவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

 

 

சார்ந்த செய்திகள்