எழுத்தாளர், பேச்சாளர், படைப்பாளி, வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல் கட்சி தலைவர் என்று பல முகத்தினை உடைய முன்னாள் திமுக தலைவர் கலைஞர், 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில், 1969 ஆம் ஆண்டு ஜூலை 27ம் நாள் திமுக தலைவராக பொறுப்பேற்றார். 1957 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு முதன் முதலாக குளித்தலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார் கலைஞர். அப்பொழுது அவருக்கு வயது 33. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 95. அப்பொழுது அவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். கிட்டதட்ட 62 ஆண்டுகாலமாக அவர் சட்டப்பேரவை உறுப்பினர். தோல்வியோ சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 60 ஆண்டுகால இந்திய அரசியலில் இருந்தார் என்றால், அவர் இவர் ஒருவர் மட்டுமே.
இதை இங்கு சொல்லவும் காரணம் உண்டு. தமிழகத்தின் பொற்கால ஆட்சியை கொடுத்ததாக கூறப்படும் காமராஜர் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார். தமிழ் தாயின் தலைமகன் என்று சொல்லப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களும் 1962 ஆண்டு காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். தன்னை இருப்பு பெண்ணாக காட்டி வந்த ஜெயலலிதாவும் 1996 ஆம் ஆண்டு பர்கூரில் தோல்வி அடைந்தார். ஆனால் தமிழக மக்கள் கடந்த 60 ஆண்டுகாலமாக தேர்தலில் பங்கெடுத்த அவரை, ஒருமுறை கூட தோல்வி அடைய செய்ததில்லை. அவர் தலைமையிலான திமுக படுதோல்வி அடைந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலிலேயே கூட அவர் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது வாழ்வே சுவாரசியம் நிறைந்தது என்றாலும், சில வரலாற்று தருணங்களை மீண்டும் நினைவு கூறுவது தவறாகாது. கலைஞரின் நகைச்சுவை என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று.
ஒருமுறை சட்டமன்றத்தில் ஒருகாரசார விவாதம் நடைபெற்று வந்தது. ஒரு எதிர்கட்சி உறுப்பினர் கும்பகோணம் கோயில் குளத்தில் முதலை உள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கு அரசாங்கம் என்ன சொல்கிறது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை அந்த உறுப்பினர் முன் வைத்தார். உடனடியாக கலைஞர் எழுந்தார். அவர் முதல்வராக இருந்த சமயம் அது. மாண்மிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். அரசாங்கம் 'முதலை' தான் போடமுடியுமே தவிர முதலையை போட முடியாது என்று கூறினார். கேள்வி கேட்ட எதிர்கட்சி உறுப்பினரும் அவரின் பதிலை கேட்டு அவர் சிரித்து விட்டார்.
ஒருமுறை இந்து என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாக கலைஞர் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா முழுவதும் சங்பரிவார் அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. தமிழகத்தில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வட மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின் தலையை சீவி விடுவேன் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் உங்களின் தலையை சீவி விடுவதாக சாமியார் ஒருவர் கூறியுள்ளாரே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல ஒரு பதில் கலைஞரிடம் இருந்தது வந்தது. நானே என் தலையை சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவருக்கு தான் ஒரு வாய்ப்பை வழங்கி பார்ப்போமே என்று. இதைவிட ஒரு சுவாரசிய சம்பவம் நடிகர் விஜய் படத்தின் வெற்றி விழாவில் நடைபெற்றது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி விழாவில் பங்கெடுத்த கலைஞர் பேசும் போது, 'தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே' என்று கூறினார். அவரின் இந்த கருத்தை கேட்ட விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிரித்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.
கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டு பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957 ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கரம் வீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார்.
அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் தாரளமாக வெளியே செல்லாம், அதற்காக சபாநாயகரிடம் அனுமதி பெற தேவையில்லை என்று கூறி அமர்ந்தார். அமைச்சரின் இந்த பதிலை கேட்ட ஆசைத்தம்பி செய்வதறியாது திகைத்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுது தான் அந்த குரல் வெளிப்பட்டது, வெளிப்படுத்தியவர் கலைஞர். அமைச்சரின் பேச்சால் கடும் கோபத்துக்கு உள்ளான அவர், சபாநாயகரை பார்த்து கூறியதுதான் உச்சகட்ட அணுகுண்டு தாக்குதல்."மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, ஆசைத்தம்பிக்கு சிறுநீர் வந்தால், அமைச்சர் சி.சுப்பரமணியன் ஏன் வாய் திறக்கின்றார்"? என்று கூறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அவரின் இடிமுழக்க கருத்தை கேட்ட சி.சுப்பரமணியன் அவமானத்தால் கூனி குறுகினார். கலைஞரின் பேச்சை கேட்ட காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்றால் அது மிகையல்ல.