குட்கா ஊழலில் டெல்லி காட்டியிருக்கும் அதிரடிப் பாய்ச்சல் ஆளும் கட்சியின் பெருந்தலைகளை நிலைகுலைய வைத்திருக்கிறது. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சி.பி.ஐ. சோதனை தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சி.பி.ஐ.யை வைத்துக்கொண்டு தமிழக அரசை பிரதமர் மோடி மிரட்டிப்பார்க்கிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கும் நிலையில், குட்காவுக்கு எதிராக டெல்லி போட்ட ஸ்கெட்ச்சின் ஆழத்தை விசாரித்தோம்.
டெல்லியில் கோலோச்சும் தமிழக அதிகாரிகளிடம் நாம் விவாதித்தபோது, ""பிரதமர் மோடியின் ஆலோசனையின்படி, சி.பி.ஐ. வசம் உள்ள வழக்குகளின் தன்மை குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரம் ஆய்வை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் இருந்தனர். பல வழக்குகளின் மீது ராஜ்நாத் சிங் கவனம் செலுத்தினாலும், தமிழகத்தின் குட்கா ஊழல்மீதுதான் பிரத்யேக அக்கறை காட்டினார்.
குட்கா ஊழல் சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டபிறகு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என ராஜ்நாத் சிங் விசாரித்தபோது, "தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறையிடமிருந்து வழக்குத் தொடர்பான ஆவணங்கள் மிக தாமதமாகத்தான் நம்மிடம் தரப்பட்டன. இன்னும் பல தகவல்கள், ஆவணங்கள் அங்கிருந்து கிடைக்கவில்லை. கிடைத்த தகவலின்படி, எஃப்.ஐ.ஆர். மட்டுமே போடப்பட்டிருக்கிறது. அதிலும் மாதா மாதம் லஞ்சம் பெற்றதாக வருமானவரித்துறையினரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யமுடியவில்லை. அதற்கான ஆதாரங்கள் எதையும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கொடுக்கவில்லை. சென்னையிலுள்ள வருமானவரித் துறையினரிடமிருந்து விசாரணையைத் துவக்க வேண்டும். இவைதான் தற்போதைய நிலை' என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து நடந்த ஆலோசனையில், குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை சென்னை வருமானவரித்துறையிடமிருந்து பெற வேண்டுமெனவும், இதற்காக குஜராத்திலுள்ள வருமானவரித்துறை அதிகாரிகளை சென்னைக்கு அனுப்புவதெனவும் முடிவெடுத்தனர். அதன்படி, பிரதமருக்கு நம்பிக்கையுள்ள குஜராத் அதிகாரிகள் 7 பேரை டெல்லிக்கு வரவழைத்து அவர்களிடம் அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது. சென்னைக்கு வந்த குஜராத் அதிகாரிகள், குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகளிடம் நீண்ட ஆலோசனை நடத்தி, குட்கா விற்பனையாளர் மாதவ்ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரி, வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே மாதவ்ராவ் கொடுத்துள்ள வாக்குமூலம், அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் கமிஷனர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம், கலால்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்புடைய ஆவணங்கள், கடந்த 1 வருடத்தில் தமிழகத்தில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என பல்வேறு டாகுமெண்டுகளை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர் (இதனை ஆகஸ்ட் 22-24 தேதியிட்ட நக்கீரனில் பதிவு செய்துள்ளோம்).
இதனையடுத்து டெல்லியில் மீண்டும் ஒரு ஆலோசனை நடந்தது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனவும், மாதவ்ராவின் டைரி மட்டுமே போதாது எனவும் ஆலோசித்துள்ளனர். அப்போதுதான், மாதவ்ராவிடம் மீண்டும் வாக்குமூலம் பெறுவது என முடிவு செய்ததைத் தொடர்ந்து, கடந்த 29-ந்தேதி மாதவ்ராவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக்கொண்டதுடன் குட்கா ஊழலில் தொடர்புடைய அனைவரையும் போட்டுக்கொடுத்தார் மாதவ்ராவ். நீண்ட வாக்குமூலமாக அது இருந்துள்ளது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ரெய்டுக்கு திட்டமிட்டனர். அந்த ரெய்டுதான் தற்போது நடந்து பலரும் கைதாகியிருக்கிறார்கள். இதில் தொடர்புடைய பெருந்தலைகளும் தப்ப முடியாது. இந்த விசயத்தில் அதிதீவிரம் காட்டுகிறது டெல்லி!'' என்று டெல்லி போட்ட ஸ்கெட்சை விவரித்தனர்.
அமைச்சர், டி.ஜி.பி. வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவர்களது பதவியை முதல்வர் எடப்பாடி பறிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அரசியல்ரீதியாக வலுத்து வருகின்றன. மூத்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்களோடு முதல்வர் கலந்தாலோசித்தபோது, ""ரெய்டுக்கு ஆளானவர்கள் பதவி விலகுவதுதான் சரியானது. இல்லைன்னா அரசு மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும். எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தமாக பதில் சொல்ல முடியாத நெருக்கடியும் ஏற்படும்'' என தெரிவித்திருக்கிறார்கள். இதனை மையமாக வைத்து, ராஜினாமா செய்யச்சொல்லி விஜயபாஸ்கரிடம் வலியுறுத்த அவரை தனது வீட்டுக்கு வருமாறு 5-ந்தேதி மாலை அழைத்திருக்கிறார் எடப்பாடி.
அதனை ஏற்க மறுத்து தொலைபேசியிலேயே எடப்பாடியிடம் பேசிய விஜயபாஸ்கர், ""நீங்க என்ன சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, ராஜினாமா செய்யமாட்டேன். ரெய்டு நடந்துட்டாலே நான் குற்றவாளியா? உங்க மகன் வீட்டிலும் சம்பந்தி வீட்டிலும் ரெய்டு நடந்துச்சு. நீங்க ராஜினாமா பண்ணிட்டீங்களா? ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக வழக்கு இருக்கு. அவர் ராஜினாமா பண்ணிட்டாரா? என்னை மட்டும் ஏன் வற்புறுத்த நினைக்கிறீங்க?'' என காட்டமாகச் சொல்லியிருக்கிறார். இதனால் போனை துண்டித்துக்கொண்டார் எடப்பாடி. நமக்கு எதிரான பிரச்சனையை நாமே எதிர்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு, "குற்றச்சாட்டு கூறப்பட்டாலே ஒருவர் குற்றவாளியாகி விட மாட்டார்'’ என விளக்கமளித்தார் விஜயபாஸ்கர்.
இந்த நிலையில், தன்னை சந்தித்த டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் பிரச்சனையை எதிர்கொள்வது குறித்து நீண்ட ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி, ""சூழல்களின் நெருக்கடியால் டெல்லியிலிருந்து வரும் தகவல்களை வைத்து முடிவை எடுப்போம். அதுவரை அமைதியாக இருக்கலாம்'' என அறிவுறுத்தியதாக தெரிவிக்கும் தலைமைச்செயலக அதிகாரிகள், ""ரெய்டு நடத்தப்பட்டிருப்பதால் அதிகாரிகளுக்குத் தலைவரான தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனோ அல்லது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் தலைவரான கவர்னர் பன்வாரிலாலோ டி.ஜி.பி.யிடம் ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனா, இரண்டு பேருமே அமைதியாக இருப்பது ஆரோக்கியமாக இல்லை!''’ என்கிறார்கள்.
""அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், சி.பி.ஐ. எதிர்பார்த்த அளவுக்கு ஆவணங்கள் சிக்கவில்லை. ஆனால், கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களிடமிருந்து சிக்கியிருக்கும் டாக்குமெண்டுகளை வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியபிறகே எதுவும் நடக்கும். குட்கா ஊழலில் சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழாமல் இருக்கவும், அரசியல் ரீதியாக அடுத்தடுத்த வாரங்களில் டெல்லி எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்வதற்காகவுமே இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது'' என சுட்டிக்காட்டுகிறார்கள் சி.பி.ஐ.யோடு தொடர்புடைய உளவுத்துறையினர்.