கடந்த சனிக்கிழமை (24-மார்ச்) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும், அந்த ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்தும் மக்கள் பெரும் கூட்டமாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த ஆலையினை எதிர்த்து பதிவுகள் இடப்படுகின்றன. ஸ்டெர்லைட் என்பது தாமிர உருக்காலை. இந்த ஆலையில் வெளியாகும் இரசாயன கழிவுகள், நச்சுப் புகையால் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தத் தொழிற்சாலை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே ஆபத்து வாய்ந்த வாயுக்களின் ஈடுபாடு உள்ள ஸ்டெர்லைட் ஆலையில், பல விபத்துகளும் அதனால் மரணங்களும் நிகழ்ந்துள்ளன. பல்வேறு காரணங்களால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்துப் பார்ப்போம்.
- 1997இல் இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த நடராஜன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவரும் சிம்னி எனப்படும் ராட்சச புகை போக்கியருகே பணியாற்றிய போது ஏற்பட்ட தீவிபத்தில் பலியாகினர். உடனிருந்த மூன்று தொழிலாளர்களுக்கும் காயமேற்பட்டது.
- 1998இல் தொழிற்சாலையில் திடீரென நாற்பது டன் ஆயில் தொட்டியின் மூடி வெடித்து சிதறியது. இதனால் இரண்டு பேர் இறந்தும் மற்றும் நான்கு பேர் காயமும் அடைந்தனர்.
- 2008 ஆண்டில் முருகேசன் என்பவரின் கை கன்வேயர் பகுதிகளில் இருக்கும் பெல்ட்டில் மாட்டி துண்டிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் இங்கு பழக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்பட்டிருக்கிறது.
- 2009இல் கன்வேயர் பகுதிகளில் இருக்கும் பெல்ட்களில் மீண்டும் ஒருவர் சிக்கிக்கொண்டு பலியாகியுள்ளார்.
- 2008இல் தாமிரம் உருக்கப்படும் பகுதிகளில் வேலை பார்த்த 25 வயது பாலகிருஷ்ணன், சிம்னி சுத்திகரிப்புப் பணியில் இருக்கும்போது தன் உயரதிகாரியின் அவசரத்தால் தவறான வழிகாட்டுதலில் நேரடியாக கீழே சென்று சுத்திகரிக்கச் சென்ற பொழுது, உள்ளே இருந்த கூரிய செம்புத் துகள்களால் உயிரிழந்தார்.
- 2010இல் வட இந்தியர் ஒருவர், இங்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஆசிட் தொட்டியிலிருந்து ஆசிட் வெடித்ததால் கண் பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது. இங்கு நிரந்தரமாக இல்லாமல் ஒப்பந்த ஊழியர்களாக வேலை பார்க்கும் வட இந்தியர்களின் உயிருக்கும் உடல் பாகங்களுக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை என்று அங்கு சுற்றியிருக்கும் கிராமப்புற மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் விபத்துகள் பெரும்பாலும் கணக்கிலேயே வருவதில்லையாம்.
- அதே 2010 ஆம் ஆண்டில் ஒரு இரவு நேர வேலையின் போது ஆசிட் தொட்டியின் அளவை பார்க்கச் சென்ற முத்துகிருஷ்ணன் என்பவர் சல்பூரிக் ஆசிடின் புகையால் மயக்கமடைந்து தொட்டியினுள்ளே விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார்.
- 2011ஆம் ஆண்டில் ஒரு முறை இங்கு வேலை பார்க்கும் பலருக்கும் திடீரென்று வெளியான அளவுக்கு மீறிய புகையால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
- 2013ஆம் ஆண்டில் பெரும் அளவிலான நச்சுப் புகை தொழிற்சாலையை விட்டு வெளியேறி பொது மக்களையும் பாதிக்க தொடங்கியது. இதனால் ஊர் மக்கள் அனைவருக்கும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களில் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒருவர் வெளிச்சக் குறைபாட்டால், பாஸ்பாரிக் ஆசிட் தொட்டியில் விழுந்து உயிரை விட்டிருக்கிறார்.
இதுவரை சொல்லப்பட்ட பலிகளும் பாதிப்புகளும் அந்த நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளால் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களுக்கு நேர்ந்தது. இது அல்லாமல் வெளியே வசிக்கும் மக்களுக்கும் இந்த ஆலையால் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிமாகிக் கொண்டே செல்கிறது. பெண்களுக்கு மலட்டுத் தன்மை அதிகரித்திருக்கிறது, இயற்கையால் முன்பு அதிக மழை பெய்த கனமழை பகுதிகளில் மழையே பல வருடமாக இல்லாதது, நுரையீரல் பாதிப்பு, தமிழகத்தில் கேன்சர் நோய் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக ஆனது என தூத்துக்குடிக்கு பல விளைவுகளைத் தந்துள்ளது ஸ்டெர்லைட். இது அனைத்தும் ஸ்டெர்லைட் மற்றும் அதைச் சுற்றி இருக்கும் இரசாயன ஆலைகளால் ஏற்படுத்தப்பட்டது. இய
தொழிற்சாலைகளில் விபத்துகள் நடப்பது பல சமயங்களில் தவிர்க்க முடியாததுதான் என்றாலும், அடிக்கடி உயிர் பறிபோகும் வாய்ப்புள்ள செயல்முறையில் இயங்கும் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகள் மிகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், இங்கு கூறப்பட்டிருக்கும் உயிர்கள் உடனே பறிபோனவை. ஆனால், நச்சு வாயுவினால் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் உயிர்களுக்கு கணக்கு என்ன?