கரோனா தடுப்பு விவகாரங்களில் மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறது மத்திய மோடி அரசு. இதற்காக ஒவ்வொரு மாநிலத்தின் மேலிடப் பொறுப்பாளர்கள் மூலம், அந்தந்த மாநில பாஜக தலைவர்களிடமும் மூத்த நிர்வாகிகளிடமும் முதல் கட்டமாக விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது தேசிய பாஜக தலைமை!
இதனையடுத்து 3 நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் முருகன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடமும் வீடியோ காலில் தமிழக அரசின் கரோனா செயல்பாடுகள் குறித்து விவாதித்தார் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ். அந்த ஆலோசனையில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகள், ’’கரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு பல தவறுகளைச் செய்து வருகிறது. மக்களிடையே அவைகள் அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. கரோனா நடவடிக்கைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருக்கும் 12 குழுக்களிலுள்ள அதிகாரிகளையும் தொடர்புகொள்ள முடிவதில்லை‘’ என்பது உள்பட தமிழகம் முழுவதும் நிலவும் பரிதாபங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.இதனைக் குறித்துக் கொண்டதுன், ‘’உங்கள் கருத்துக்களைப் பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்‘’ என உறுதிகொடுத்துள்ளார் முரளிதரராவ்.
இதனையடுத்து தொடர்ந்து பேசிய முரளிதரராவ், ’’கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் வாழ்வாதாரம் இழந்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், 100 நாள் வேலைத்திட்டத்திலுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் என மூன்று தரப்பினருக்கும் மத்திய அரசு நிதி உதவி வழங்கியிருக்கிறது. அந்த நிதி உதவி அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதா? என்பதையும், இல்லையெனில், எதனால் போகவில்லை? என்பதையும் சேகரித்து எனக்கு அனுப்பி வையுங்கள்.
பசி பட்டினியில் ஒரு உயிரும் பறிபோய் விடக்கூடாது என அழுத்தமாக சொல்லியிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்காக, நம்முடைய மத்திய பாஜக அரசு பல்வேறு நலஉதவித் திட்டங்களை மக்களுக்காக அறிவித்துள்ளது. மக்களுக்கு அவைகள் கிடைத்துள்ளதா என்பதைக் கண்காணித்தும் அவைகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்‘’ எனத் தமிழக பாஜக தலைவர் முருகனிடமும், முன்னாள் எம்.பி. நரசிம்மனிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மத்திய அரசின் நிவாரண உதவிகள் மக்களுக்குப் போய்ச் சேர்ந்துள்ளதா என்பதை முருகனும், நரசிம்மனும் தனித்தனியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.