தமிழ் மொழியின் மீது பண்பாடு, கலாச்சாரத்தின் மீது தீவிரமான பற்று கொண்டுள்ள சீனத் தமிழன் வில்லியம் சியா உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
தமிழர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பது என்னுடைய எண்ணம். இன்று நான் வாழ்வதற்கு காரணம் தமிழ் தான். தமிழ் தான் என்னை வாழ வைத்தது. ஒரு சீனராக இருந்தாலும் இதை நான் பெருமையாகச் சொல்வேன். நான் மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தவன். நாம் வாழும் சூழ்நிலை தான் நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கும். அதுபோல் எனக்கும் என்னுடைய சூழ்நிலை தமிழைக் கற்றுக்கொடுத்தது. நாங்கள் வாழ்ந்த பகுதியில் நிறைய தமிழர்கள் இருந்தனர். அதனால் தமிழர்களோடு பழகும் வாய்ப்பும் தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
தமிழ் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்கும், தமிழ் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழர்களின் ஒழுக்கம் என்னைக் கவர்ந்தது. திருவிழா காலங்களில் காப்பு கட்டுவது, தீ மிதிப்பது என்று அனைத்தையும் பார்த்திருக்கிறேன். நானே மூன்று முறை தீ மிதித்திருக்கிறேன். தமிழ் கடவுள்களின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. அம்பாள், மாரியம்மன், காளியம்மன் என்று பல்வேறு கடவுள்களை எனக்குப் பிடிக்கும். 2006 ஆம் ஆண்டு முதன்முதலில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டுக்கு நான் வருகிறேன்.
தமிழ்நாட்டுக்கு வருவது தான் என்னை ஆசுவாசப்படுத்துகிறது. இங்கு வரும்போது தமிழ் மண்ணை நான் தொட்டுக் கும்பிடுவேன். இந்த மண்ணுக்கு நான் ஏதோ கடமைப்பட்டிருப்பது போல் எப்போதும் உணர்வேன். என்னுடைய தாய்வழிப் பாட்டி ஒரு தமிழர். என் உடம்பிலும் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதுகூட என் தமிழ் பற்றுக்குக் காரணமாக இருக்கலாம். என்னுடைய சிறுவயதில் தமிழ் படங்களின் மீது எனக்கு ஈடுபாடு கிடையாது. அதன்பிறகு திருவிளையாடல், கந்தன் கருணை, ஆதிபராசக்தி போன்ற படங்களைப் பார்த்தேன். நாங்கள் கேசட் விற்பனையிலும் ஈடுபட்டதால் தமிழ் படங்களின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.
சமீபத்தில் கூட துணிவு படம் நல்ல கதையம்சத்துடன் இருந்தது. மாரி செல்வராஜ் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் நடக்கும் விஷயங்களை எதார்த்தமாக அவர் காண்பிக்கிறார். கர்ணன் படத்தில் வரும் 'கண்டா வரச் சொல்லுங்க' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.