Skip to main content

ப.சிதம்பரம் கைதால் பீதியாகும் காங்கிரஸ் தலைவர்கள்!

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதைத் தொடர்ந்து காங்கிரஸில் உள்ள சில தலைவர்கள் பீதியடைந்துள்ளனர். மோடியை இதுவரை கடுமையாக தாக்கிவந்த அவர்கள், திடீரென்று மோடியின் நல்ல செயல்களை பாராட்டுவதில் தவறில்லை என்று பேசியிருக்கிறார்கள்.
 

chidambaram

 

 

ப.சிதம்பரம் கைதைத் தொடர்ந்து மோடி அரசை கடுமையாக விமர்சிக்கும் சசிதரூர் உள்ளிட்ட சில தலைவர்கள் குறிவைக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், “மோடியின் நல்ல காரியங்களுக்காகத்தான் அவர் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூடுதல் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த அவருடைய நல்ல பணிகளை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என்று கூறினார்.
 

இந்த கருத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி ஆதரித்திருக்கிறார். “செயல்பாடுகளில் நல்லது கெட்டது என எப்போதும் இருக்கும். ஏழைப் பெண்களுக்கு கேஸ் இணைப்பு கொடுத்தது எல்லாம் மோடியின் நல்ல செயல்களில் ஒன்று” என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
 

அவரைப்போலவே, சசிதரூரும் “மோடி சரியானதை சொல்லும்போதும் செய்யும்போதும் அதை நாம் பாராட்ட வேண்டும் என்று நான் 8 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அவருடைய நல்லவற்றை பாராட்டினால்தான், அவருடைய கெட்டவற்றை விமர்சிக்கும்போது நம்பகத்தன்மை ஏற்படும்” என்று கூறியிருக்கிறார்.
 

ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்திருப்பதால், அடுத்தடுத்து அவர் பல்வேறு வழக்குகளில் தொடர்ச்சியாக சிக்க வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சிபிஐ காவல் முடிந்ததும், விமானம் கொள்முதல் வழக்கில் அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அது தவிர ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, அமலாக்கத்துறை வழக்கு என்று பல வழக்குகள் சிதம்பரத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.