Published on 22/08/2018 | Edited on 22/08/2018
வந்தவர் அனைவரையும் சென்னை வரவேற்கும் ஆனால் கடின முயற்சி இருப்பவர்களை மட்டுமே அரவணைக்கும், காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை தனக்குள் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது சிங்கார சென்னை. சென்னைக்கு இன்று வயது 379. சென்னை அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் முக்கியமானதாக இருக்கும். சென்னையை பற்றி சில தகவல்கள்...
- 1687ம் ஆண்டு சென்னை நகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் என்ற மன்னர் அறிவித்தார். இந்தியாவின் முதல் நகராட்சி சென்னைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியாகும். 1794ம் ஆண்டில் இது நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராயபுரம் இரயில் நிலையம் இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களுல் ஒன்று. இதுதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்பதும், இன்றுவரை பயன்பாட்டில் இருக்கும் ரயில் நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம் சென்னை உயர்நீதிமன்ற வளாகம்.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
- ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு பேருந்து நிலையம்தான். 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2002ல் திறக்கப்பட்டது.
- 1863ல் கட்டப்பட்டது ஸ்பென்சர் பிளாசா. இந்தியாவின் மிகப் பழமையான ஷாப்பிங் மால்களில் இதுவும் ஒன்று.
- இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் மூன்றில் ஒருபங்கு சென்னையில்தான் இயங்கி வருகிறது. இதனால்தான் சென்னை இந்தியாவின் ‘டெட்ராய்ட்’ என்று சென்னை அழைக்கப்படுகிறது
- ஆசியாவின் முதல் உடற்கல்வி கல்லூரி சென்னை ஒய்.எம்.சி.ஏ. விலுள்ள உடற்கல்வி கல்வியியல் கல்லூரிதான்.
- சிறுசேரியிலுள்ள சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப பூங்கா என்றும் சொல்லப்படுகிறது,
- சென்னைக்கு மட்டுமல்ல சென்னையின் கடலுக்கும் வரலாறு உண்டு. கடற்கரையை உல்லாச இடமாக அனேகமானோர் பயன்படுத்துவர். ஆனால் தமிழ்நாட்டில் அது அரசியல் களமாக, போராட்டக் களமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நான்கு ஆளுமைகள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் துயில் கொள்கின்றனர். 2010ம் ஆண்டிலிருந்து ஈழத்தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சி அங்குதான் நடைபெறுகிறது, இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம் இப்படி பல எழுச்சி போராட்டங்களின் களமாக விளங்குகிறது மெரினா.