Skip to main content

எதற்காக எரிந்தான் முத்துக்குமார்?

Published on 30/01/2018 | Edited on 30/01/2018
எதற்காக எரிந்தான் முத்துக்குமார்?

கோரிக்கைகள்... வார்த்தைகள்... மறக்க முடியாத கடிதம்!     



 

2009ஆம் ஆண்டு, இதே நாளின் (29 ஜனவரி)  காலை, சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்குள் நுழைந்து, துண்டுப் பிரசுரம் விநியோகித்த அந்த இளைஞர், ஒரு போராட்டப் பெருந்தீயின்  முதல் கற்பூரமாய் எரியப்போகிறார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். தன் கடிதத்தை அங்கிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு, தன்னைத் தானே எரித்துக்கொண்ட அவர், சிகிச்சைக்கு அவகாசம்  அளிக்காமல் உயிர் நீத்தார். சொந்த காரணத்திற்காக சென்றதல்ல அந்த உயிர். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு அப்போதைய இந்திய அரசு வழங்கிய உதவிகளை நிறுத்த வேண்டும் என்று  முழக்கமிட்டுக்கொண்டே முடிந்தது அந்த வாழ்வு. ஆனால், அவர் பற்ற வைத்த நெருப்பு, பின் தமிழ்நாடெங்கும் பரவி, நெடுநாளைக்குப் பின் மாணவர்களை போராடச் செய்தது. இந்தி எதிர்ப்பு வரலாறையெல்லாம் படித்திராத மாணவர்களும் கூட  ஜல்லிக்கட்டுப் புரட்சிக்கு முன்  பெருமளவில் கூடிப் போராடியது அப்போதுதான். முத்துக்குமார் எழுதிய நெடிய கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் உணர்வாய் பரவின. அந்த நெடிய கடிதத்தின் இறுதியில் தன் கோரிக்கைகளைக் கூறியிருந்தார் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த  பத்திரிகையாளர் முத்துக்குமார். தன் உடலை காவல்துறையிடமோ, அரசாங்கத்திடமோ ஒப்படைக்காமல், ஆயுதமாக ஏந்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று கோரியிருந்தது அந்தக் கடிதம்.         







முத்துக்குமாரின்  பதினான்கு  கோரிக்கைகள்

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் படைகளைத்  திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்திய அரசு நடத்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசால் எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும்  உறுப்பினர்கள் எவ்வித நிபந்தனையுமற்று  விடுதலை செய்யப்பட வேண்டும்.







4. புலிகளின் உறுப்பினர்கள் மீது உள்ள  பாஸ்போர்ட் தொடர்பான குற்றச்சாட்டுகள்  மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையவை  என்ற  பெயரில்  தடை செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தகுந்த நஷ்ட ஈடு  வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனலிசிஸ் சோதனைக்குட்பட வேண்டும்.

8. அமையவிருக்கும் தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுமே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழின மக்கள் தான் முடிவுசெய்வார்கள்







9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வன்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். 

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டனைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரங்கள்  உறுதி செய்யப்பட வேண்டும்.






இந்த 14 கோரிக்கைகளை வைத்துவிட்டு, அதற்கான போராட்டத்தின் முதல் பலியாக தன்னையே பற்றவைத்துக் கொண்டார் முத்துக்குமார். தீக்குளிப்பு, தற்கொலை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத போராட்ட வடிவமென்றாலும், ஒரு சதவிகிதம் கூட  தன் சொந்த துயர் காரணமாக அல்லாமல், தன்னையே எரித்துக்கொள்ளத் துணிந்த அந்த மனம் அரியது. அந்த கோரிக்கைகளில் ஒன்று கூட அதிகாரத்தின் காதுகளை எட்டவில்லை. அதன் பின்னர் தொடங்கிய போராட்டங்கள் மெல்ல அணைந்தன. அப்பொழுது போராடிய, எதிர்த்த  அரசியல் சக்திகள்  தன் நிலையை மாற்றிக்கொண்டு சுமூகமாகிவிட்டன. இன்றிருக்கும் அரசுகள் நினைவேந்தல் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றன.   முத்துக்குமாரின் உயிர் எங்கோ இன்னும் அடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது.    

"விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை..." என்று ஆரம்பித்து, 'காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது' என்று முடித்திருந்தார் அந்தக் கடிதத்தை. காலங்கள் கடந்துகொண்டே இருக்கின்றன. காயமும் மறந்துகொண்டே இருக்கின்றது. நீதிதான் யாருக்கும் கிடைத்தபாடில்லை.

வசந்த் 
     

சார்ந்த செய்திகள்