'சர்கார்' - விஜயின் அரசியலுக்கு அதிகாரப்பூர்வ அடித்தளமாக அமைந்துள்ள திரைப்படம். இதற்கு முன்பும் தன் படங்களில் அரசியல் பேசியுள்ள விஜய், அப்போதெல்லாம் எந்த மேடையிலும் வெளிப்படையாக, முழுமையாக தன் அரசியல் முடிவு குறித்தோ, பயணம் குறித்தோ பேசியதில்லை. சின்னச் சின்ன குறியீடுகள் மட்டுமே காட்டுவார். ஆனால், 'சர்கார்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசியது, இதுவரை பார்த்திராத புதிய விஜய். கிண்டலும், நக்கலும், அதிக எனர்ஜியும், குட்டிக் கதையும் சேர்ந்து அதிரடியாக இருந்தது விஜயின் பேச்சு. 'நான் முதல்வரானால், உண்மையான முதல்வராக இருப்பேன், முதல்வராக நடிக்கமாட்டேன்' என்று அவர் பேசியது அப்போதே விவாதங்களை உருவாக்கியது.
பின்னர் 'சர்கார்' கதைத்திருட்டு குற்றச்சாட்டு எழுந்து அதில் பாக்யராஜின் கடிதமும் பேட்டிகளும் முக்கிய பங்காற்றி, இறுதியில் இயக்குனர் முருகதாஸ், புகார் எழுப்பிய வருண் ராஜேந்திரனுக்கு 'சர்கார்' டைட்டிலில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்பட்ட அதீத கண்டிஷன்கள், அதை ஏற்க மறுத்த பல திரையரங்குகள், அதிக விலைக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள், ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்காத நிலை என்றெல்லாம் பரபரப்புகளுக்கு இடையே பெரிய ஓப்பனிங்குடன் வெளியானது சர்கார். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தன. 'ஃபர்ஸ்ட் ஹாஃப் சூப்பர், செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஸ்லோ', 'தமிழ்நாட்டுக்குத் தேவையான கருத்தை சொல்லியிருக்கிறார் தளபதி' என்றெல்லாம் விஜய் ரசிகர்கள் கூற, 'இது விஜய் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படம், மற்றவர்களுக்கு சுமாரான படம்' என்று விமர்சகர்கள் கூறினர். படத்தின் பொழுதுபோக்குத் தன்மை குறித்து இப்படி கருத்துகள் நிலவினால், படத்தில் இடம் பெற்ற அரசியல் காட்சிகள் குறித்தே அதிகம் பேசப்படுகிறது.
முதல்வர் பாத்திரம் மரணமடைவது, சமாதியில் வந்து உண்மை சொல்வது இப்படி சில காட்சிகள் அதிமுகவை நினைவுபடுத்துவதாகவும் இலவச பொருட்கள், 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் தலைவர் என சில காட்சிகள் திமுகவை நினைவுபடுத்துவதாகவும் படம் பார்த்த அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆனால், படத்துக்கு எதிர்ப்பு என்பது அதிமுக பக்கமிருந்தே வருகிறது. மதுரையில் ராஜன் செல்லப்பா தலைமையில் சர்கார் படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன் ஆர்ப்பாட்டமும், பேனர் கிழிப்புகளும் நடந்து முடிய அப்படியே சென்னை காசி தியேட்டரில் அதிமுகவினர் போராட்டத்தைத் தொடங்கினர். 'ஜோசப் விஜய் என்னும் நான்' என்ற வரியுடன் தலைமைச் செயலகம் படமெல்லாம் போட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டன, கட்-அவுட்டுகள் உடைக்கப்பட்டன. இதையெல்லாம் பார்த்து, பேனர், கட்-அவுட் வைத்த ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் பொதுவாக விஜய் ரசிகர்கள் மெல்லிய மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களும், 'எதிர்ப்பு தெரிவித்தே படத்தை ஓட வைத்துவிடுவார்கள் போல' என்று சமூக ஊடகங்களில் எழுதத் தொடங்கிவிட்டார்கள். படத்தைத் தயாரித்த 'சன் பிக்சர்ஸ்'ஸின் சன் டிவி, அதிமுகவினரின் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் பிற நடவடிக்கைகளையும் முழுமையாகப் பதிவு செய்து ஒளிபரப்புகிறது. இதற்கெல்லாம் காரணம் இருக்கிறது.
கடந்த தீபாவளி தினத்தன்று (18-10-2017) வெளியான விஜயின் 'மெர்சல்' திரைப்படம் வெளியான அன்று, படம் சில பழைய திரைப்படங்களை நினைவுபடுத்தியதாலும், 'ஆளப்போறான் தமிழன்' பாடலுடனான அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள் தவிர்த்து படம் சுமார் என்ற உணர்வை அளித்ததாலும் சற்று தொய்வாகவே இருந்தனர் விஜய் ரசிகர்கள். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அந்த நிலையை மாற்றினர் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும். அவர்கள் காட்டிய அளவுக்கு மிஞ்சிய எதிர்ப்பால், தேசிய அளவிலான செய்தியானது 'மெர்சல்' திரைப்படம். அதிலும் ஹெச்.ராஜா, விஜய் அதிகம் பயன்படுத்தாத அவரது இயற்பெயரான ஜோசப் விஜய், என்று குறிப்பிட்டு விமர்சித்தார். அதுவரை விஜய் படங்கள் எதுவும் அடையாத அளவுக்கு புகழையும், கவன ஈர்ப்பையும் பெற்றது 'மெர்சல்'. இந்த கவன ஈர்ப்பு, வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் உதவியது. அரங்குகள் நிறைந்து காட்சிகள் அதிகரித்தன.
பாஜக அந்தப் படத்தை எதிர்த்ததற்கான காரணங்களாக, சிங்கப்பூரின் மருத்துவ வசதியை இந்தியாவுடன் ஒப்பிடும் வசனமும், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி குறித்த வசனங்களும் சொல்லப்பட்டன. ஹெச்.ராஜா, கோவிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுவேன் என்று படத்தில் கூறியது தவறு என்று விமர்சித்தார். இப்பொழுது அதே போல 'சர்கார்' படத்தில் தமிழக அரசின் பல நிகழ்வுகளை நினைவூட்டும் காட்சிகளை வைத்து, அதற்கு எதிர்ப்பை சம்பாத்துவிட்டார் இயக்குனர் முருகதாஸ். அதிமுகவும் அமைச்சர்களும் படத்தை எதிர்த்து கருத்து வெளியிட்டு பின் போராட்டத்திலும் குதித்துவிட்டனர். முதல் நாளன்று படம் குறித்து வெளியான கலவையான விமர்சனங்களால் கவலைப்பட்ட விஜய் ரசிகர்கள், இப்போது இந்த எதிர்ப்புகள் எப்படியும் படத்தை வெற்றி பெற வைத்துவிடும் என்று நம்பி சோஷியல் மீடியாவில் மகிழ்ச்சியாக ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 'தலைவா' படம் வெளியாக மறைமுக தடைகள் உண்டாகின. பின், சில நாட்கள் தாமதமாக வெளியாகி பெரிய வரவேற்பை பெறாமல் போனது 'தலைவா'. ஆனால், படம் வெளிவந்த பிறகு எதிர்ப்புகளைப் பெற்ற 'மெர்சல்' வெற்றி பெற்றது. 'சர்கார்', 'மெர்சல்' ஆகுமா அல்லது 'தலைவா' ஆகுமா? சில நாட்களில் தெரியும்.