- தெ.சு.கவுதமன்
தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலையின் வரவுக்குப் பிறகு சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதுடன், அவர்களை அசிங்கப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடப்பதாக சீனியர்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல் கட்சிக்குள்ளாக எழுந்துள்ளது. இந்த சீனியர்ஸ் வெர்சஸ் ஜூனியர்ஸ் என்ற போட்டி, பகையுணர்வால் அனலாக தகதகக்கிறது தமிழக பா.ஜ.க.
இல.கணேசனை புறக்கணித்த அண்ணாமலை:
இல.கணேசனின் வீட்டு சுபநிகழ்ச்சிக்குத் தமிழக பா.ஜ.க.வின் தலைவரே செல்லாமல் புறக்கணித்ததோடு, இல.கணேசன் எதிர்க்கட்சியினரோடு இணக்கமாகப் போவதாகப் பகிரங்கமாக அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்தார். இதன்மூலம் இல.கணேசன், கட்சிக்குத் துரோகம் செய்வதுபோன்ற அவப்பெயரை அவருக்கு ஏற்படுத்தினார்.
தொண்ணூறுகளில் தமிழக பா.ஜ.க.வின் முகமாகப் பார்க்கப்பட்டவர் இல.கணேசன். 1991ஆம் ஆண்டு, தமிழக பா.ஜ.க.வின் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். அப்போதெல்லாம் பா.ஜ.க. தமிழகத்தில் மிகச்சிறிய கட்சியாக இருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஊறிப்போனவர்கள் மட்டுமே ஆதரவாளர்களாக இருந்தனர். அப்படியிருந்த கட்சியைத் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சியடைய வைத்ததில் இல.கணேசன் போன்ற மூத்த தலைவர்களின் பங்கு பெரிது. அதற்கேற்ப கலைஞர், ஜெயலலிதா எனத் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களோடு மிகுந்த நட்போடு செயல்பட்டவர். கட்சியின் கொள்கை வேறானாலும் அடுத்தவர்களை மரியாதைக்குறைவாக விமர்சித்ததில்லை.
அவர் மட்டுமல்ல, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் கட்சியின் சார்பாக விமர்சனம் வைக்கும்போது கடுமையாக இருந்தாலும், கண்ணியமான வார்த்தைகளையே பயன்படுத்தி வந்தார்கள். அதேபோல், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் மிகவும் கண்ணியமாகப் பேசி வந்தார்கள். இதனால்தான், இந்துத்துவா ஆதரவையும் தாண்டி பா.ஜ.க. மீதான ஈர்ப்பு பலருக்கும் ஏற்பட்டது. கட்சியும் சீராக வளர்ந்தது. அதிலும் தமிழிசையின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலத்துக்குப் பெரிய வளர்ச்சியை எட்டியது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் நாடார் சமுதாய மக்களின் வாக்குகளைத் தமிழிசை சவுந்தரராஜனின் எளிமையான அணுகுமுறையும், தீவிர கட்சிச் செயல்பாடுகளுமே ஈர்த்தன.
தமிழிசைக்குப் பின் தடம்புரண்ட பா.ஜ.க:
தமிழிசைக்குப் பிறகான பா.ஜ.க.வில் நிறமாற்றம் தொடங்கியது. எல்.முருகன் கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதுமே, தனது தலைமைப் பதவியைத் தக்கவைப்பதற்காக அதிக உறுப்பினர்களைச் சேர்ப்பதாகக் கூறிக்கொண்டு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் பலருக்கும் கட்சியில் அடைக்கலம் தரத் தொடங்கினார். குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகள் என்ற நிலையிலிருப்பவர்களும், பா.ஜ.க.வில் ஏதாவது பதவியை வாங்கிக்கொண்டு காவல்துறைக்கே போக்கு காட்டினார்கள். பா.ஜ.க.வின் தலைமையகமான கமலாலயத்தில், ரவுடி லிஸ்ட்டில் இருப்பவர்கள் குவிந்திருப்பது போன்ற படங்களைப் பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர். அதோடு, வட மாநிலங்களில் நடப்பது போன்ற ரத யாத்திரையை நடத்த எல்.முருகன் திட்டமிட்டார். வேல் யாத்திரை நடத்துவதாகக் கூறிக்கொண்டு, கட்சியின் சீனியர்களைக் கலந்தாலோசிக்காமல் தனது ஆதரவாளர்களை மட்டும் அழைத்துக்கொண்டு யாத்திரை கிளம்பினார். மக்கள் அவர்களை ஆதரிப்பதற்குப் பதிலாக முகம் சுளிக்கும் விதமான ஆர்ப்பாட்டமாக அந்த யாத்திரை நடந்ததால், அது பெயிலியரானது. வேல் பூஜை என்று நடத்திய ஆன்மீக பயணமும், அட்டை வேலும் தோல்வியைத் தந்தது. இவரது தலைமை வந்ததுமே கட்சியின் சீனியர்கள், ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் பலரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அடுத்து, தமிழ்நாட்டில் கட்சித் தலைமைக்கு யாருமே இல்லையென்று சொல்வதைப்போல், கர்நாடகாவில் ஐ.பி.எஸ்.ஸாக பணியாற்றிய அண்ணாமலையை உடனடியாக தமிழக பா.ஜ.க. தலைவராக்கியது சீனியர்கள் பலரையும் விரக்தியின் விளிம்புக்கே கொண்டு சென்றது. இவரும் எல்.முருகனைப் போலவே தனக்கென ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தைத் தன்னைச் சுற்றி வைத்துக்கொண்டார். அமர்பிரசாத் ரெட்டி போன்ற வெளி மாநில ஆட்களைத் தனது தீவிர ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் தரக்குறைவாகப் பேசுவதை ஊக்குவித்தார். அண்ணாமலையும், தி.மு.க. தலைவரையும், சீனியர் நிர்வாகிகளையும் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்யத் தொடங்கினார். பத்திரிகையாளர்களைக் குரங்குகளோடு ஒப்பிட்டும் 1000, 2000 ரூபாய் என்று ஏலம் விட்டும் அவமானப்படுத்திப் பேசினார். இப்படியெல்லாம் பேசுவது தமிழக பா.ஜ.க. சீனியர்களுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அமித்ஷாவால் நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை என்ற காரணத்துக்காகவும் ஆர்.எஸ்.எஸ். அபிமானம் காரணமாகவுமே சீனியர்கள் அண்ணாமலையின் ஆட்டத்தைக் கண்டுங் காணாமல் இருந்து வந்தனர்.
கட்டங்கட்டப்படும் நிர்வாகிகள்:
தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.வுக்கு சென்ற வி.பி.துரைசாமி, அண்ணாமலையின் ஆதரவாளர்களால் மேடையிலேயே அவமானப்படுத்தப்பட்டார். தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வுக்குச் சென்ற கு.க.செல்வம், பா.ஜ.க.வில் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் மீண்டும் தி.மு.க.வுக்கே திரும்பினார்.
பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகியான கே.டி.ராகவன் வீடியோவில் சிக்கியதிலும் அண்ணாமலையின் உள்ளடி வேலை இருப்பதாகவே கூறப்பட்டது. கே.டி.ராகவன் வீடியோவை வெளியே விடச்சொன்னது அண்ணாமலைதான். இதேபோல் இன்னும் சிலரையும் அண்ணாமலை கட்டம்கட்ட நினைத்தபோது, மேலிடத்திடம் புகார் போனதால் அப்படியான முயற்சிகளைக் கைவிட்டார். தான் மட்டுமே பா.ஜ.க.வை தமிழகத்தில் வளர்த்து வருவதாக வெளி காட்டிவருகிறார் அண்ணாமலை. ஆனால், சீனியர்கள் வளர்த்துவிட்ட பா.ஜ.க.வில்தான் சொகுசாக வந்து அமர்ந்திருக்கிறார் அண்ணாமலை என்று குமுறுகிறார்கள்.
அண்ணாமலை, தமிழக பா.ஜ.க.வில் தனக்குத்தானே ஒரு ஐ.டி. விங் வைத்துக்கொண்டதோடு நிறுத்தாமல், தனக்கென ஃபேன் கிளப் இருப்பதுபோல் தனது செலவில் ஒரு குரூப்பையும் உருவாக்கி, தனக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிட்டு, பா.ஜ.க.வில் தனக்கான பிம்பத்தைத் தீவிரமாக உருவாக்கி வந்தார். அதோடு, தனக்குப் போட்டியாக உருவாகும் குஷ்பு, காயத்ரி ரகுராம் போன்ற தலைவர்களின் வளர்ச்சியை ஓரங்கட்டும் வேலையையும் பார்த்து வருவதாக பா.ஜ.க. நிர்வாகிகளே குற்றம் சாட்டுகிறார்கள். சமீபத்தில் குஷ்புவை தி.மு.க. நிர்வாகி இழிவாகப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்களை மட்டுமே கூட்டம் சேர்த்து அண்ணாமலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில், குஷ்புவுக்கு அழைப்பில்லை.
அதேபோல், ட்விட்டரில் தீவிரமாக இயங்கும் காயத்ரி ரகுராமின் பதவியைப் பறித்ததோடு, அவரது ட்வீட்களை ட்ரோல் செய்வதற்கென்றே ஒரு டீமை இறக்கிவிட்டார் அண்ணாமலை. இதையடுத்து, தனது கட்சிக்காரர்களோடு சண்டை செய்யவே காயத்ரி ரகுராமுக்கு நேரம் பத்தாமல் போனது. மிகச்சரியாகத் திட்டமிட்டு, தான் சொல்வதையெல்லாம் கேட்கும் சூர்யா சிவாவை, டெய்சி சரணோடு ஆபாசமாக மோதவிட்டு, சண்டையைக் காரணமாக வைத்து காயத்ரி ரகுராமுக்கு கல்தா கொடுத்துவிட்டார். அதே ஆடியோ மூலமாக ஆர்.எஸ்.எஸ். சீனியரான கேசவ விநாயகத்தையும் சூர்யா சிவாவை வைத்தே அசிங்கப்படுத்திவிட்டார். இப்படியாக, அண்ணாமலையின் ஆட்டத்தால் பா.ஜ.க. சீனியர்கள் அனைவரும் பெரும் கடுப்பிலிருக்கிறார்கள். மேலிடத்துக்கு அடுத்தடுத்து ரிப்போர்ட்கள் பறந்தாலும் இப்போதுவரை பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு போலத் தெம்பாகவே இருக்கிறாராம் அண்ணாமலை.