குஜராத்தில் பாஜக பெற்ற தேர்தல் வெற்றி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வி எழும்பினோம். நம்முடையை கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " குஜராத்தில் பாஜக ஏன் தோற்கப் போகிறது. மோடி, அமித்ஷா மற்றும் இவர்களின் முதலாளி அம்பானி, அதானி ஆகியோர்களின் சொந்த மாநிலம். எனவே இவர்கள் ஏன் தோற்கப் போகிறார்கள். ஒருவேளை தேர்தல் ஆணையம் நடத்தியிருந்தால் அது சாத்தியமாகியிருக்கும். ஆனால் அமித்ஷா முடிவுகளை நிர்ணயிக்கும் போதும் ஏன் அவர்கள் தோற்கப் போகிறார்கள்.
இமாச்சலில் இவர்கள் போனால் போகட்டும் என்று இருந்துவிட்டார்கள். இல்லை அங்கேயும் வெற்றிபெற வேண்டும் என்று இவர்கள் விரும்பியிருந்தால் பாஜக வெற்றி கூடப் பெற்றிருக்கும். ஆனால் அங்குள்ள தேர்தல் ஆணையமும் விரும்பவில்லை. அவர்களும் பெரிய அக்கறை காட்டவில்லை. ஏனென்றால் இமாச்சலின் முடிவு நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கப்போவதில்லை. ஆனால் குஜராத்தின் முடிவை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைக் கணக்கிடுவார்கள். இந்த வெற்றியே நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அவர்களால் மக்களிடம் எளிதாகக் கூறி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விடுவார்கள்.
நீங்கள் இந்த வெற்றியை கூர்ந்து பார்த்தால் தெரியும். ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்; மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. அப்புறம் எங்கே எதிர்க்கட்சிகள் வெற்றிபெறும் என்று மக்களை நினைக்க வைத்துவிடுவார்கள். மக்களுக்கு இந்த வெற்றியைப் பெற அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்று தெரியப்போவதில்லை. அதனால் இவர்கள் எப்போதும் வெற்றியை மட்டுமே சுவைத்துக்கொண்டு வருகிறார்கள். மக்கள் வாக்களித்தார்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை. முன்பு தேர்தலில் தோல்வி அடைந்தால் மக்கள் இப்படிச் செய்தார்கள் என்று சொல்வார்கள். தற்போது கமிஷன் இப்படி பண்ணிடுச்சி என்று சொல்லுமளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது.
நம்மை மாதிரி சில ஊடகங்கள் தான் இந்தியாவில் தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக நடைபெறுவதைப் போலவும், அதில் மக்கள் வாக்களித்தவர்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதைப் போலவும் பேசிக்கொண்டு இருக்கிறோம். மக்களுக்கு நன்றாகத் தெரியும். இது அனைத்தும் கையைவிட்டு போயிடுச்சின்னு தெரியும். குஜராத் தேர்தலில் இலவசங்கள் கொடுத்ததைப் பற்றிக் கேட்கிறீர்கள், இங்கே இலவசம் கொடுத்து சோம்பேறியாக்கிவிட்டீர்கள் என்று நம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். ஆனால் குஜராத்தில் அப்படியான குற்றச்சாட்டுக்களை வைக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே சோம்பேறிகள். அவர்களை இலவசங்கள் கொடுத்து சோம்பேறியாக்க என்ன இருக்கிறது.
இன்றைக்கு எங்கள் வீட்டுக்குள் வரக்கூடாது, நாங்கள் கும்பிடும் சாமியை நீ கும்பிடக்கூடாது என்று அனைத்து இடத்திலும் இருந்து அம்பேத்கரை வெளியேற்றியவர்கள் இன்றைக்கு அவரை காவி உடை உடுத்தி விபூதி வைத்து நீங்கள் எங்கள் ஆள்தான் என்று அம்பேத்கரை ஐயராக காட்டிக்கொள்கிறார்கள். பட்டியல் இனத்தைச் சேர்த்தவரை தங்கள் ஆளாகக் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியதே திராவிட இயக்கத்தின் சாதனைதான். எனவே இவர்களைக் காலம் நிச்சயம் மாற்றும். அப்போது ஜனநாயகம் காக்கப்படும். அதுவரை வேடிக்கை பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.