Skip to main content

மோடியின் வாக்குறுதியும் மக்களின் துயரமும்! கொண்டாடத்தக்கதா இந்த 8 ஆண்டுகள் ?

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

2014ல் ஆரம்பித்த மோடி ஆழி பேரலை, 2019ல் அலையாகி தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. இரண்டாம் முறையாக பதவியேற்ற பிறகு தற்போது 8ம் ஆண்டு விழாவையும் பாஜகவினர் கொண்டாடினர். ஒவ்வொரு தலைவரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் தங்கள் பெயர் சரித்திரத்தில் நிற்கும்படி சில காரியங்களை செய்துகொண்டே வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடி, சில விஷயங்களை செய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணிக்கு அதுவரை புழக்கத்தில் இருந்த உயர்ந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களான 500 மற்றும் 1000 ஆகியவை செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். அதேபோல், எழிலும் பதைபதைப்பும் நிறைந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370வை அதிரடியாக நீக்கினார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

இரண்டிலும் அவர் சொன்ன காரணம் தீவிரவாத ஒழிப்பு பிரதானமானது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு அவர், “நாட்டில் உள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் ஒழித்துக் கட்டுவது; கள்ளப்பணத்தை அழிப்பது; டிஜிட்டல் பேமண்ட் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையை வளர்த்தெடுப்பது” என நியாயம் சேர்த்தார். ஆனால், இந்தியப் பிரதமரின் 8ம் ஆண்டு கொண்டாட்ட விழாவிற்கு இணையாக அவரின் நடவடிக்கையின் பிரதிபலிப்புகளும் வெளியாகி அவரின் நோக்கம் நிறைவேறியதா என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளன. 

 

முதலாவது காஷ்மீர் விவகாரம்:

 

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டு கொள்ளப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பண்டிட்களான வங்கி அதிகாரி, பள்ளி ஆசிரியையும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களும் ஒரு டி.வி. நடிகையும் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 370ஐ நீக்கும்போது, ஜம்மூ மற்றும் காஷ்மீர் ஆகியவை சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டமன்றம் அற்ற யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் அப்போது கண்டனங்கள் தெரிவித்தபோது, உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இதை விட வேறு வழியில்லை. தேவைப்பட்டால் எதிர்வரும் காலத்தில் அமைதி திரும்பினால் ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்படும்” என்றார்.

 

மேலும், ராஜ்யசபாவில் பேசிய அமித்ஷா, “இந்த நடவடிக்கையால் ஜம்மு - காஷ்மீர் போர்க்களமாக மாறும் என சில உறுப்பினர்கள் கூறினர். அவ்வாறு நடக்காது; அந்த மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கு அங்கு இருந்த 370வது பிரிவு தான் தடையாக இருந்தது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் அங்கு இருக்கும் வரை அந்த மாநிலத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது” என்றும் ஊழல் மற்றும் பொருளாதாரம் குறித்தும் பேசினார். 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

காஷ்மீரில் பண்டிட்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஒருசார்பாக இருக்கிறது என சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட நிலையில், இப்படம் குறித்து பிரதமர் மோடி, ``பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த, மறைக்கப்பட்ட உண்மையை ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் காட்டியிருக்கிறது. இது போன்ற படங்கள் மூலம், மக்கள் உண்மையை அறிந்துகொள்வதோடு, கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்களுக்கு யார் காரணம் என்பதையும் புரிந்துகொள்கிறார்கள்.

 

பேச்சு சுதந்திரத்துக்காகக் கொடி ஏந்தியவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கடந்த 5-6 நாள்களாகக் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்தைப் புகழ்வதற்கு பதிலாக, இழிவுபடுத்திப் பிரசாரம் செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்! நமது எம்.பி-க்கள் அனைவரும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்!" என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். 

 

இன்று காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கியதற்கான நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் பெரும் கேள்வியாகவே தொங்கி நிற்கிறது. 

 

இரண்டாவது பணம் மதிப்பிழப்பு:

 

பணம் மதிப்பிழப்பு மூலம், கருப்பு பணம், கள்ள பணம் ஆகியவை ஒழியும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களின் இன்னல்களுக்கு நியாயம் சேர்க்கப்பட்டது. தற்போது, அதிக மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கு சில்லறை கிடைப்பதில் சிக்கல் என்பதன் காரணமாக அதன் புழக்கத்தை அரசு குறைத்துள்ளது. 

 

BJP 8 years! Modi's promise and people's misery!

 

இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதனைக் கண்டு பாஜகவினர் உட்பட நாட்டில் உள்ள பெரும்பாலானோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 79,669-ஆக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம். அதேபோன்று, ரூ.2,000 கள்ள நோட்டுகளின் புழக்கமும் 54.6 சதவீதம் உயா்ந்து 13,604 என்ற எண்ணிக்கையில் இருந்தது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கள்ளநோட்டுகளின் புழக்கம் குறைந்திருந்த நிலையில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வங்கிகளால் கண்டறியப்பட்ட ஒட்டுமொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையானது 2,08,625-லிருந்து 2,30,971-ஆக அதிகரித்துள்ளது” என்றது.  

 

கள்ளப்பணத்தை ஒழிக்க முன்னெடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தற்போது அதிகம் புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்பிலான பணம் என்பது ரூ. 500 என்றாகிவிட்டது. கள்ள நோட்டு புழக்கமும் முன்பு இருந்தைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 

 

மோடி தலைமையிலான ஆட்சியின் 8 ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும் இந்த இரண்டு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் உட்பட வலது சாரி அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.