Skip to main content

பில்கேட்ஸை முந்தும் பணக்காரர்!!!

Published on 07/08/2017 | Edited on 07/08/2017
பில்கேட்ஸை முந்தும் பணக்காரர் !!!


 

'பிஸினஸ் கேம்' (Business) என்பது A3 அளவில் இருக்கும் அட்டையில் ஊர்/ நாட்டின் பெயர்களும் அதற்கான மதிப்பு தொகைகளும், இன்னும் சில விவரங்களும், விதிமுறைகளும் அடங்கிய ஒரு விளையாட்டு. நான்கு பேர் வரை இந்த விளையாட்டில் பங்குகொள்ளலாம். இதில் வெற்றி பெறுவதே ஒரு இமாலய சாதனை. இடம் வாங்குதல், கடனில் அடகு வைப்பது, விற்பது, அதை மீட்டெடுப்பது என்னென்ன பாடுபட வேண்டுமென்பது அதை விளையாடியவர்களுக்கு நன்கு புரியும்.  அதேபோல இந்த உண்மையான உலகில் ஆயிரக்கணக்கான பேர் ஒரு பிசினஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள் இந்த விளையாட்டு எப்போதும் முடியாது என்றாலும் தற்போதைய நிலையில் இருவர் மிக முனைப்புடன் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் முதலிடத்திற்காக.


ஒருவர், அந்த விளையாட்டில்  ராஜாதிராஜா. 18 வருடங்களாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பவர். அக்டோபர் 28, 1955ல் வாஷிங்டனிலுள்ள சியாட்டில் பிறந்தவர், சிறுவயதிலிருந்தே உற்சாகமாக வளர்ந்தவர், தன் பெற்றோர்களின் வழக்குரைஞர் கனவை தகர்த்து கணினி மேல் ஆர்வம் காட்டியவர். டிக்- டேக்-டோ  (Tic- tac- toe) என்ற பழைமையான விளையாட்டை கணினியில் கொண்டு வர   தனது 13வது வயதிலேயே கணினி  நிரல்களை (Computer Program) எழுதியவர். 1975ல் தனது நண்பர் பால் ஆலங் என்பவரோடு சேர்ந்து மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தைத்  தொடங்கியவர். அதனைத்தொடர்ந்து பல துறைகளில் கால் பதித்தவர், உலகின் உச்சத்தை தொட்டவர். எழுத்தாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் இன்னும் பல ரூபங்களுக்கு சொந்தக்காரர். அவர்தான் வில்லியம் ஹென்றி கேட்ஸ் என்ற பில் கேட்ஸ்.




இன்னொருவர் ஜனவரி 12, 1964ல் நியூ மெக்சிகோவில்  பிறந்தவர். வளரும் மற்றும் வலிமையான பணக்காரராக, தொழிலதிபராக வளம் வருபவர். 1994ல் அமேசான் (amazon.com) எனும் இணையதளத்தை உருவாக்கி, இன்றுவரை உலகமெல்லாம் அது பயன்படுமாறு செய்தவர். 2000ல் ப்ளூ ஆரிஜின்  (Blue Origin) என்ற விண்வெளி சுற்றுலா  நிறுவனத்தை உருவாக்கியவர். 2011ல் சாதாரண மனிதர்களும் செல்லும் வகையில் அதன் விலையை குறைத்து அதே நேரத்தில் பாதுகாப்பையும், தரத்தையும் உயர்த்தியவர். இன்னும் பல நிறுவனங்களின் சொந்தக்காரர் மற்றும் பங்காளர். 2015ல் Texas-ன் அதிக நிலம் வைத்திருப்போர் பட்டியலில் இணைந்தவர். கிட்டத்தட்ட 25,000 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர். அவர்தான் ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos).


இந்த இருவருக்கும் இடையேதான் கடந்த இருவாரமாக போட்டி நிலவுகிறது ஜெஃப் பெஜோஸ் ஜூலை 27   அன்று  "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பதுபோல் 90.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார். தொடர்ந்து நான்கு வருடமாக முதலிடத்தில் இருந்த பில் கேட்ஸ் சிறு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திற்கு சென்றார். அந்த வெற்றியை அவர் ஆற அமர ருசிக்கும் முன்னரே, "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு  எப்டி போனேனோ அப்டியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என சொல்லி அடிக்கும் விதமாக  மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார் பில் கேட்ஸ். முன்பு குறிப்பிட்டுள்ளதை போல, இது முடியாத விளையாட்டு அடுத்தடுத்த காலங்களில் யார் முன்னுக்கு வருவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

கமல் குமார் 

சார்ந்த செய்திகள்