விருதுநகர் மாவட்டம், செங்குன்றாபுரம் அருகே மூளிப்பட்டியில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுமார் 500 ஆண்டுகள் பழமையான குதிரைவீரன் மற்றும் போர்வீரனின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூளிப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் தங்கள் ஊரில் பழமையான சிற்பங்கள் இருப்பதாகக் கொடுத்த தகவல்படி, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ் பாண்டி, நாகபாண்டி, பழனிமுருகன், மணி ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர். அதில் அங்கு இருந்தவை கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் மற்றும் போர்வீரனின் நடுகற்கள் என கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனைவர் து.முனீஸ்வரன், “நடுகல் வழிபாடு சங்க காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. குறிப்பாக கோவலர்களாகிய மழவர்கள், மணிகட்டிய கடிகை வேலை கையில் வைத்துக் கொண்டு ஆநிரைகளை மீட்டு வரும்போது, வில்லெய்து வீழ்த்தப்பட்டால் அவ்வீரனுக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவார்கள். முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று வீரத்தோடு முன்னின்று பொருதுப்பட்ட வீரருக்கு அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி நாள்தோறும் தீப தூபம் காட்டி பூஜை செய்யும் வழக்கத்தை நடுகல் வணக்கம் என புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் போன்ற இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், மூளிப்பட்டியில் கண்டறியப்பட்டவை குதிரைப்படை மற்றும் காலாட்படை வீரர்களின் நடுகற்கள் ஆகும். இதில் குதிரை வீரன் நடுகல் 3 அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்டுள்ளது. இதில் ஒரு வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்று புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவன் வலது கையில் ஈட்டி ஏந்தியும் இடது கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் காட்சி தருகிறான். குதிரை முன்னங்காலை தூக்கியவாறு உள்ளது. அவன் கை கால்களில் காப்புமும், தலையில் சிறிய கொண்டையும் உள்ளது.
அதன் அருகில் உள்ள போர்வீரனின் புடைப்புச் சிற்பம் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டுள்ளது. வீரன் இடுப்பில் குறுவாளுடனும், வலது கையில் உயர்த்திய வாளுடனும், நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடனும் நின்றவாறு காட்சி தருகிறான். இவர்கள் இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரைப்படை மற்றும் காலாட்படை வீரர்களாக இருக்கலாம். இவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நடுகற்கள் அமைத்து இருக்கலாம். இவ்விரண்டு சிற்பங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. இந்நடுகற்களை வைரவர் சாமி, பட்டாக்கத்தி வீரன் என இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். சிற்பங்களின் அமைப்பைக் கொண்டு இவை கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம்” என அவர் கூறினார்.