Skip to main content

கலைஞரின் சரியான முடிவும், தவறான முடிவும்!

Published on 20/11/2017 | Edited on 21/11/2017
 

மத்தியில் ஜனதாக் கட்சி ஆட்சியில் குழப்பங்கள் அதிகரித்தன. தலைவர்கள் தங்களுக்குள் முரண்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் போக்கு அதிகரித்தது.
 
இன்றைக்கு பாஜகவாக மாறியிருக்கும் அன்றைய ஜனசங்கத்தின் வாஜ்பாயும், அத்வானியும் தங்களுடைய துறைகளில் தங்களுக்கு வேண்டிய ஆட்களை கமுக்கமாக நுழைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
வெளிநாட்டு தூதரங்களிலும், மீடியாக்களிலும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை இயன்றவரை திணித்துக் கொண்டிருந்தார்கள். ஜனதாக் கட்சியின் குழப்பங்களில் எதிர்க்கட்சிகள் கவனமாக இருந்த நிலையில் இந்த ஆபத்து அமைதியாக நிகழ்ந்து கொண்டிருந்தது.
 
பிரதமர் மொரார்ஜிதேசாய் தன்னைப் பற்றி வெளியிட்ட ஒரு தகவல் இந்தியாவையே நாறச் செய்தது. அப்படியென்ன கூறிவிட்டார்?
 
“நான் தினமும் காலையில் ஒரு கிளாஸ் சிறுநீரைக் குடிக்கிறேன். அது என்னை நோயற்றவனாக வைத்திருக்கிறது”
 
ஒரு நாட்டின் பிரதமர் சங்கடப்படாமல் இப்படி சொன்னால் என்னாகும்? நாடு முழுவதும் கடுமையான விமர்சனம் எழுந்தது. அவருடைய கூற்றை இன்னொரு மத்திய அமைச்சரான ராஜ்நாரயணும் ஆமோதித்தார். அவர், தானும் சிறுநீர் குடிப்பதாக பேட்டியளித்தார்.
 
இதைப் படிக்கும்போது, இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் மாட்டு மூத்திரத்திலும், சாணியிலும் மருத்துவக் குணம் இருப்பதாக பிரச்சாரம் செய்வது உங்களுக்கு இயல்பாகவே நினைவுக்கு வரும். இது எப்படி கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறதோ அதுபோலத்தான் அன்றைக்கு மொரார்ஜியும் கிண்டலுக்கு ஆளானார்.



மொரார்ஜி தேசாய்

அந்தச் சமயத்தில் கலைஞர் இதுதொடர்பாக ஒரு கடிதம் எழுதினார். அதில்…
 
“சிறுநீரில் நாம் உண்ணும் உணவின் மிச்சங்கள் கலந்திருப்பது நிஜம்தான். நமது சமையலறையில் தாய்மார்கள் அம்மியில் வைத்து பல்வேறு பொருட்களை அரைப்பார்கள். பிறகு அரைத்ததை வழித்துவிட்டு, கழுவி விடுவார்கள். அந்த தண்ணீர் அது சாக்கடையில் கலக்கும். அதுபோலத்தான் சிறுநீர் என்பது நமது உடலின் கழிவுதானே தவிர மீண்டும் உபயோகிக்கக்கூடிய மருந்தல்ல…” என்று கூறியிருந்தார்.
 
ஜனதாக்கட்சி ஆட்சியை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. அன்று இந்திராவின் இளையமகன் சஞ்சய் காந்தி அரசியலில் முக்கிய பங்கு வகித்து வந்தார். அவர் ஜனதாக் கட்சித் தலைவர்களுக்குள் புகைந்து கொண்டிருந்த பதவி ஆசையை பயன்படுத்தி அந்த ஆட்சியை கலைக்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.
 
அதன்முடிவாக மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சரண்சிங்கிற்கு பிரதமர் ஆசை இருப்பதை அறிந்த சஞ்சய் காந்தி, அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தார். இதையடுத்து ஜனதாக் கட்சியை உடைத்த சரண்சிங், காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார்.
 
காங்கிரஸை ஆதரித்து அதை கைவிட்ட எம்ஜியார் ஜனதாக் கட்சியின் அடிமையாக இருந்தார். ஆனால், மத்திய அரசின் திட்டங்களையோ, மாநில அரசின் திட்டங்களையோ தமிழ்நாட்டில் நிறைவேற்றவே இல்லை. இந்நிலையில்தான் சரண்சிங் அமைச்சரவைக்கும் ஆதரவளித்தார் எம்ஜியார். அதிமுகவைச் சேர்ந்த பாலாபழனூர், சத்தியவாணிமுத்து மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சியைச் சேர்ந்த, அதுவும் திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரானது அப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.



நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையின்போது எம்ஜியார்
 
காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமரான சரண்சிங் 24 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் ஆதரவை வாபஸ்பெற்றதால் ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. ஆனால், நெருக்கடி நிலைக்காலத்து வழக்குகளை வாபஸ்பெற மறுத்தே ராஜினாமா செய்ததாக சரண்சிங் கூறினார்.
 
இதையடுத்து காபந்து பிரதமராக சரண்சிங் மேலும் ஆறு மாதங்கள் நீடித்தார். 1980ல் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் இந்திராவுடன் சேர எம்ஜியார் தயாராக இல்லை என்பதைக் காட்டிலும், எம்ஜியாரின் துரோகத்தை மறக்க இந்திரா தயாராக இல்லை என்பதே முக்கியமாக பேசப்பட்டது.
 
அதேசமயம் திமுகவுடன் கூட்டணி அமைக்க இந்திரா தூது அனுப்பினார். அதற்கு பதில் அளித்த கலைஞர், நெருக்கடி நிலைக் கொடுமைகளுக்கு வருத்தம் தெரிவித்தால் கூட்டணி அமைப்பது குறித்து பேசலாம் என்றார். இதையடுத்து நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்ததற்கு வருத்தம் தெரிவித்த இந்திரா, இனி இந்தியாவில் நெருக்கடி நிலைப் பிரகடனம் வரவே வராது என்று உறுதியளித்தார்.
 
இதையடுத்து இந்திரா காங்கிரஸுடன் திமுக கூட்டணி பேச்சு தொடங்கியது. அந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. வெல்லவே முடியாதவர் அல்ல எம்ஜியார் என்பதற்கு சிறந்த உதாரணமாக அது இருந்தது. ஏனென்றால் பின்னாளில் திமுகவை எம்ஜியார் தோற்கடித்த சமயத்திலெல்லாம் அவர் இந்திரா காங்கிரசின் துணையோடுதான் போட்டியிட்டிருக்கிறார். எம்ஜியாருக்கு கிடைத்த மரண அடியாக இது இருந்தது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில்தான் எதிரியாக இருந்தாலும், நட்பாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பார் கலைஞர் என்று இந்திரா பேசினார். எம்ஜியாரின் பயந்தாங்கொள்ளித் தனத்தை அவர் கிண்டலடித்தார்.
 
இரண்டரை ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ், திமுக, காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் ஆகியவை அணி அமைத்து போட்டியிட்டு, இந்திரா காங்கிரஸ் 351 இடங்களில் வெற்றி பெற்றது.
 
ஜனதாக்கட்சியுடன் கூட்டணி அமைத்த அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
 
முந்தைய தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் அணி அமைத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளோடு அணி அமைத்து போட்டியிட்டது. சிபிஎம் 35 இடங்களிலும், சிபிஐ 11 இடங்களிலும் அப்போது வெற்றிபெற்றிருந்தன. மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கும்போது, சிறப்பு விருந்தினராக கலைஞரை நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கே அழைத்துச் சென்று மரியாதை செய்தார்.



சரண்சிங்
 
பிரதமரானதும், 1977ல் ஜனதாக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றதும் கலைத்து தேர்தல் நடத்திய மாநில சட்டமன்றங்களை கலைக்க முடிவு செய்தார் இந்திரா. இந்தச் சமயத்தில்தான் கலைஞர் தனது அரசியல் வரலாற்றில் முதல் தவறைச் செய்தார்.
 
ஆம். தமிழ்நாட்டில் அதிமுக அரசையும் கலைக்கும்படி இந்திராவிடம் கோரிக்கை வைத்தார் கலைஞர். கலைஞரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத்தையும் கலைத்தார் இந்திரா.
 
ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இழந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டது. காங்கிரஸ் நம்பிக்கை துரோகம் செய்ய முடிவெடுத்தது.
 
தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவுக்கு சமமாக தொகுதிகள் ஒதுக்கினால்தான் கூட்டணி என்று தமிழகத் தலைவர்கள் பேசினார்கள். அவர்களில் பலர் கலைஞரை தொடக்கத்திலிருந்தே பிடிக்காதவர்களாக இருந்தார்கள். உடனே கலைஞர் இந்திராவுடன் தொடர்புகொண்டார். அவரோ, தமிழக தலைவர்களோடு பேசிக்கொள்ளும்படி கூறிவிட்டார்.
 
கூட்டணியை மறுத்து கலைஞர் தனித்து போட்டி என்று அறிவித்திருக்கலாம். ஆனால், காங்கிரஸோடு கூட்டணி அமைக்க எம்ஜியார் தயாராகிவிடுவார் என்ற நிலை இருந்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தாலும் திமுக நிலைமையைத் தனக்கு சாதகமாக்கியிருக்க முடியும். என்ன நினைத்தாரோ, அவரை எது தடுத்ததோ, இரண்டு கட்சிகளுக்கும் இடையே தலா 114 இடங்கள் என்று முடிவெடுக்கப்பட்டது. 6 தொகுதிகள் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டன.
 
முதல்வர் பதவி திமுகவுக்கு என்று அறிவிக்கும்படி கூறப்பட்டது. அதை தேர்தலுக்குப் பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்று காங்கிரஸ் கூறிவிட்டது.
 
இது கலைஞரின் அரசியல் வாழ்வில் துடைக்கமுடியாத தவறாக அமைந்துவிட்டது. ஆம், முதல்வர் பதவியை முடிவு செய்வது யார்? மக்களா காங்கிரஸா என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்யும் நிலை உருவாகியது. இது தேர்தலில் எதிரொலித்தது.
 
தவிர, இரண்டரை ஆண்டுகளில் எம்ஜியார் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. எதைச்செய்தாலும் அதில் தவறு நேரும் என்பதால் எதையுமே செய்யாமல் இருந்தார். எனவே, அவருடைய ஆட்சிமீது குறைசொல்ல பெரிய விஷயம் ஏதுமில்லை.
 
அப்போது தேர்தல் பிரச்சாரத்தை வானொலியில் நடத்த அனைத்து கட்சிகளுக்கும் ஜனதா அரசு வாய்ப்பு வழங்கியிருந்தது. அதன்படி, எம்ஜியார் வானொலியில் பேசும்போது, “நான் என்ன தவறு செய்தேன். எதற்காக ஆட்சியைக் கலைத்தார்கள்”  என்று அழும்நிலையில் பேசினார்.
 
இது மக்கள் மத்தியில் அழுத்தமாக பாதிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை தோற்கடித்திருக்கலாம். ஆனால், அதிக இடங்களில் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி என்ற கணக்கில், திமுகவும், காங்கிரஸும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிரான வேலைகளில் வெளிப்படையாகவே இறங்கின. எனவே, சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டது.
 
1980 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து குமரி அனந்தன் தொடங்கிய காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், பார்வர்ட் பிளாக், இந்திரா காங்கிரஸிலிருந்து பிரிந்த அர்ஸ் காங்கிரஸ், மற்றும் சிறு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதிமுக 177 இடங்களில் போட்டியிட்டு 129 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இது கடந்த முறை பெற்றதை விட ஒரு இடம் குறைவாகும். சிபிஎம் 16 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களிலும், சிபிஐ 15 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களிலும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றிபெற்றன.
 
திமுக, இந்திரா காங்கிரஸ், மற்றும் சிறு கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. உள்குத்து காரணமாக திமுக 37 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 1 இடத்திலும் வெற்றி பெற்றன.
 
இந்தத் தேர்தலுடன் காங்கிரஸ் கட்சியை, சாகும்வரை எம்ஜியார் தனது நிரந்தர கூட்டணிக் கட்சியாக ஆக்கிக்கொண்டார்.
 
திமுக பட்ட அனுபவத்தை கவனத்தில் கொண்டு, மக்களவைக்கு காங்கிரசுக்கு அதிக இடமும், சட்டமன்றத்துக்கு அதிமுகவுக்கு அதிக இடமும் என்ற பார்முலாவை எம்ஜியார் பார்முலா என்று ஆக்கிவிட்டார்கள்.
 
இந்தச் சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் எம்ஜியாரின் ஆட்சியில் நிறைய மாற்றம் இருந்தது. நிர்வாகத்தில் ஊழல் மலிந்தது. கட்சிக்காரர்களை சம்பாதிக்க விடாததே 1980 மக்களவைத் தேர்தலில் கட்சி அடியோடு தோற்க காரணம் என்று எம்ஜியாரிடம் கூறினார்கள்.
 
இதையடுத்து எம்ஜியார் கட்சிக்காரர்கள் சம்பாதிக்க வசதியாக சாராயக் கடைகளையும், கள்ளுக் கடைகளையும் ஒரு சேரத் திறந்துவிட்டார். இந்த கெட்டபெயரை மறைக்க பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி அமலாக்கினார்.
 
கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி கட்டிடங்கள் கட்டவும், அந்த காண்ட்ராக்ட்டுகளை தனது கட்சிக்காரர்களுக்கே கொடுக்கவும் எம்ஜியார் உத்தரவிட்டார்.
 
இந்த காலகட்டத்தில் எம்ஜியார் மீது பல ஊழல் புகார்களை திமுக சுமத்தியது. கப்பல் பேர ஊழல், திருச்செந்தூர் கோவிலில் வைரவேல் திருட்டு, சாராய பாட்டலிங் மற்றும் பிளெண்டிங்கில் எம்ஜியார் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் என்று சட்டமன்றத்தில் கலைஞர் ஆதாரபூர்வமாக பல ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார்.
 
நுழைவு வரி என்று எம்ஜியார் அறிமுகப்படுத்திய வரிமுறையை எதிர்த்த கலைஞர் அதை வாபஸ் பெறச் செய்தார். ஈழத்தமிழர் பிரச்சனையில் கலைஞர் படு தீவிரமாக செயல்பட்டார். கலைஞரின் செயல்பாடுக்கு ஈடுகொடுக்கும் வகையில் எம்ஜியாரும் ஈழப்பிரச்சனையில் அதிக ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
 
ஈழத்தமிழருக்கு ஆதரவாக கலைஞர் முழு அடைப்பு என்று அறிவித்தால், எம்ஜியாரே அரசுப்பூர்வமாக பந்த் என்று அறிவிக்கும் நிலை உருவானது. இந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஈழத்தமிழர் பிரச்சனையில் கலைஞரும் பேராசிரியர் க.அன்பழகனும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
 
இந்த நிலையில்தான் எம்ஜியார் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாக கூறப்பட்டது.
 
இதையடுத்து அவருக்கு நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இந்திரா ஏற்பாடு செய்தார். அவர் அமெரி்க்காவில் சிகி்ச்சை பெற்ற நேரத்தில், 1984 அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் இந்திரா தனது சீக்கிய பாதுகாவலர்கள் இருவரால் சரமாரியாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.



இந்திராகாந்தி இறுதி நிகழ்வில் ராஜிவ்காந்தி

இதையடுத்து இந்திராவின் மூத்தமகன் ராஜிவ் காந்தி பிரதமராக பதவியேற்றார். தனது தாயின் மரணத்தால் ஏற்பட்டுள்ள அனுதாப அலையை பயன்படுத்தி உடனடியாக தேர்தல் நடத்த ராஜிவ் முடிவெடுத்தார். 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவைக்கு தேர்தல் அறிவி்க்கப்பட்டது. எம்ஜியார் சிகிச்சை பெறும் நிலையி்ல் தமிழகத்திலும் அந்த அனுதாப அலையை பயன்படுத்த அதிமுக தலைவர்கள் முடிவெடுத்தார்கள். இதையடுத்து மக்களவைக்கும், தமிழக சட்டமன்றத்துக்கும் ஒரேசமயத்தில் தேர்தல் நடைபெற்றது.
 
உடல்நிலை சரியில்லாத ஒருவரின் கைரேகையைப் பெற்று அவரை தேர்தலில் போட்டியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தது. ராஜிவ் அரசாங்கம் இதற்கு ஒப்புதல் கொடுத்தது.
 
நடைபெற்ற தேர்தலில் எம்ஜியார் புரூக்ளினில் சிகிச்சை பெறும் விடியோவும், இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் அடங்கிய போஸ்டர்களும் பயன்படுத்தப்பட்டன. சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்று அதிமுக கூட்டணிக் கட்சிகள் கேட்பதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. அதையே வாக்காளர்கள் உண்மையாக்கினார்கள்.
 
இந்தத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், அதிமுக, காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அணி அமைத்திருந்தன. திமுக, ஜனதா, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் அணி அமைத்து போட்டியிட்டன. திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும், அதிமுக 12 இடங்களிலும் வெற்றிபெற்றன.
 
இந்திய அளவில் விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 416 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராஜிவ் காந்தி பிரதமரானார். ஆனாலும் பதிவான வாக்குகளில் அந்தக் கட்சி 50.70 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது.
 
இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெயரோடு ராஜிவ் காந்தி இன்றைய டிஜிடல் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தார். ஆனால், தமிழ்நாட்டில் வாய்பேசமுடியாத ஊமை எம்ஜியாரை வைத்துக் கொண்டு காங்கிரஸ் தனது விருப்பப்படியெல்லாம் நிர்வாகத்தை நடத்த முயன்றது.
 
தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க ராஜிவும் தனது வழியில் முயன்றார். ஆனால், தமிழகம் மீண்டும் கொந்தளித்தது. திமுக இந்தித் திணிப்புக்கு எதிராக போர்க்கோலம் பூண்டது. நவோதயா பள்ளிகள் என்ற பெயரில் ராஜிவ் தமிழகத்தில் இந்தியை நுழைக்க முயன்றதை எதிர்த்து 1986 ஆம் ஆண்டு தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.
 
அரசியல்சட்டப் பிரிவை தீயிட்டு எரித்ததற்காக கலைஞர், பேராசிரியர் உள்ளிட்ட திமுக முன்னணி தலைவர்களுக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கலைஞரை விடுதலை செய்யக்கோரி பலர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
 
இதையடுத்து, ராஜிவ் காந்தி நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்றும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அறிவித்தார்.
 
இந்தப் போராட்டத்தின் விளைவாக பேராசிரியர் உள்ளிட்ட 10 திமுக எம்எல்ஏக்களின் பதவிகளை சபாநாயகராக இருந்த பிஎச் பாண்டியன் ரத்து செய்தார்.
 
இயல்பாகவே எம்ஜியாரின் ஊமை ஆட்சிமீது மக்கள் வெறுப்படைந்திருந்த சமயத்தில், ஜெயலலிதா அதிமுக ஆட்சியை கைப்பற்ற ராஜிவின் துணையை நாடினார். செயல்பட முடியாத எம்ஜியாரை நீக்கிவிட்டு, தனக்கு உதவும்படி ராஜிவுக்கு அவர் கடிதம் எழுதினார். இதையடுத்து அவரை கட்சி நடவடிக்கைகளில் இருந்து எம்ஜியார் ஒதுக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில்தான், 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எம்ஜியார் மரணம் அடைந்தார்.
 
(எம்ஜியார் மரணம், அதிமுக பிளவு, திமுக மீண்டும் ஆட்சி அமைப்பு, திமுக ஆட்சி கலைப்பு குறித்து வியாழக்கிழமை பார்க்கலாம்.)
 
- ஆதனூர் சோழன்


சார்ந்த செய்திகள்