Skip to main content

 இடைக்கால மக்களின் வாழ்விடப் பகுதி, சோழர்கால செப்பு நாணங்கள் கண்டுபிடிப்பு 

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
seeman nkn


            
 கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் வடலூர் என்ற ஊரின் கிழக்கு பகுதியில் உள்ள பழமையான காளிக் கோயில் பகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வில். சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் இடைக்கால மக்கள் வாழ்ந்ததற்கான மிகபெரிய வாழ்விடப் பகுதியை ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன், கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத் தலைவர் இரா. கோமகன் ஆகியோர் கண்டுபிடித் துள்ளனர்.

 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,   வடலூர் காளிக்கோயிளில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவையின் சிற்பம் உள்ளது. இச்சிற்பமானது நான்கடி உயரமும் , மூன்றடி அகலமும் கொண்ட நீள் செவ்வக வடிவ கற்பலகையில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது . சிலையின் தலைப்பகுதியானது ஜடாமகுடத்துடன் மகரபூரிமதால் அலங்கரிக்கப்பட்டும். நெற்றியில் கல்மணிகளால் அழகுப்படுத்தப்பட்ட நெற்றிச்சுட்டியும். கழுத்தில் கண்டிகை , சரப்பளி , ஹாரம் போன்ற அணிகலன்களும். கைகளில் காப்பும் மார்பு கச்சையின் கீழ் வயிற்றுப் பகுதியில் வீரசங்கிலியும் காணப்படுகிறது. மேலும் கொற்றவை யின் முகம் நீள் வட்டவடிவில் சதைப்பற்றுடன் சாந்த நிலையில் காட்சியளிக்கிறது . இச்சிற்பத்தின் தோல்பகுதி அகன்றும் இடைசிறுத்தும் உள்ளது. கொற்றவையின் வலது கரங்களில் மேலிருந்து கீழாக சக்கரம் , வாள் , கபாலம் போன்றவைகளை தாங்கி உள்ளது. ஒரு கை உடைந்துள்ளது. இடது கரங்களில் சங்கு , வில் , கேடையம் போன்ற ஆயுதங்களை பிடித்தவாறும், கீழ்கரம் தர்ஜனீகஸ்தத்துடன் எதிரியை அச்சுறுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இச்சிலையின் முதுகு புறத்தில் அம்புத்தூரிகை உள்ளது. கொற்றவையின் இடுப்பில் அணியப்பட்டுள்ள இடைக்கச்சையானது குஞ்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டு எருமைத்தலை மீது ஒருகாலை நிலையாக ஊன்றியும் மற்றொரு காலை சற்று மடக்கி வைஷ்ணவ ஆசனத்தில் நின்றவாறு பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக உள்ளது. இச்சிலையின் முகத்தில் பல்லவர் கால கலைப்பாணியும் , உடல் பகுதியில் முற்கால சோழர் கலைப்பாணியின் தாக்கமும் உள்ளதால் இச்சிற்பத்தின் காலம் கி.பி. 9 - 10 ஆம் நூற்றாண்டாகும். இக் கொற்றவை சிற்பத்தின் மூலம் பல்லவர்களுக்கு பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பல்லவ கலைப் பாணியை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்கள் கலைப் பாணியில் சிறு , சிறு மாற்றங்களைச் செய்து சோழர்கலை மரபு என்ற தனி கலைப்பாணியை உருவாக்கினர் என்பதற்கு இச்சிற்பமே சிறந்த சான்றாக உள்ளது.    

 

se1

         

 வடலூர் காளிக் கோயிலில் இருந்து கிழக்கு , மேற்காக சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்பாட்டுப் பகுதி காணப்படுகிறது . அப் பகுதியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்படும் பள்ளங்களில் இருந்து 27 x 17 x 7 செ.மீ அளவுள்ள செங்கற்கள் அவ்வப்போது வெளிப்படுகின்றன. இதே அளவுள்ள செங்கற்கள் தாராசுரம் அகழாய்வில் கிடைத்துள்ளது. மேலும் கோயிலின் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 100 ஆடி தூரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மழை நீரை வெளியேற்று வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கட்டடத்தின் தரைதளப் பகுதி வெளிப்பட்டது. அத்தரைதளப் பகுதிக்கு 24 x 12 x 4 செ.மீ அளவுள்ள செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.  இதே அளவுள்ள செங்கற்கள் பழையாறை அகழாய்விலும் கண்டறியப்பட் டுள்ளது. மேலும் தரைதளத்தை ஒட்டியவாறு வடக்கு தெற்காக இரண்டடி அகலத்தில் மிகப்பெரிய செங்கற்சுவர் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பள்ளத்தில் இருந்து இடைக்காலத்தை சார்ந்த சிவப்பு நிற பானையோடு கள், ‘’ ட ‘’ வடிவ கூரை ஓடுகள் போன்றவை கிடைத்துள்ளன. இங்கு கிடைக்கப்பட்டுள்ள ’’ ட’’ வடிவ கூரையோடுகள் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கிடைக்கப்பட்டுள்ள ஓடுகளின் அமைப்பை ஒத்துள்ளது. மேலும் காளிக்கோயில் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள சான்று களை ஆய்வு செய்ததில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுவரை மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

 

s3

 

சோழர் கால நாணயங்கள் 

           வடலூர் காளிக் கோயிலின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் நடைபெற்ற கள ஆய்வில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து இராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட பன்னிரெண்டு செப்பு நாணயங்கள் கிடைத்தன. இந்நாணயத்தின் முன்பகுதியில் நிற்கும் மனித உருவமும்  அதன் இடதுபக்கத்தில் விளக்கு ஒன்றும் உள்ளது. பின் பகுதியில் அமர்ந்த மனித உருவத்தின் கையருகே ‘’ ஸ்ரீராஜராஜ ‘’ என்று நாகரி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ஈழக்காசு என்றும் அழைப்பர் . இந்நாணயங் கள் ஒவ்வொன்றும் எட்டு கிராம் எடை கொண்டவைகளாகும். கி.பி. 985 முதல் கி.பி.1014 வரை சோழப் பேரரசின் மாமன்னனாக விளங்கிய முதலாம் இராஜராஜ சோழனது காலத்தில் வெளியிடப்பட்ட இந்நணையங்கள் அதிக எண்ணிக்கையில் வடலூர் பகுதியில் கிடைத்துள்ளதால் சோழர் காலத்தில் இப்பகுதி சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும். 

 

             இவ்வளவு வரலாற்று பின்புலத்தை கொண்ட வடலூர் பகுதியில் இதுவரை சோழர் காலத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்க வில்லை. ஆனால் வடலூர் அருகேவுள்ள சந்தவெளிப்பேட்டை மற்றும் கீழூர் கிராமத்தில் மூன்று சோழர் காலத்தை சார்ந்த கல்வெட்டுக்கள் கிடைத் துள்ளன. மேலும் வடலூரை போன்று அதனைச் சுற்றியுள்ள ஊர்களான மருவாய் , சந்தவெளிப் பேட்டை , பெரியகோயில்குப்பம் , பூசாளிக்குப்பம் போன்ற ஊர்களில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் அதிக அளவில் கண்டறியப் பட்டுள்ளன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


 

Next Story

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

3 years imprisonment for refusing to buy Rs 10 coins

 

மத்திய ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயங்களை 2005ல் அறிமுகம் செய்து 2009ல் அதைப் புழக்கத்தில் விட்டது. இந்த 10 ரூபாய் நாணயங்கள் பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த காரணத்தால் 10 ரூபாய் நாணயத்தில் போலிகள் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதேபோல், இந்த நாணயங்களே செல்லாது எனவும் கூறப்பட்டது. அதனால், இந்த நாணயங்களை இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கடைகள் மற்றும் பேருந்துகளில் வாங்குவது மிக மிக குறைவு. இதனால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு குற்றச்சாட்டு வைத்து வந்தனர். 

 

இதையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தன. இருப்பினும், இந்த நாணயங்களை வாங்க பலரும் தயங்கி வந்தனர். இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலான ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பொய்யான தகவல் பரவிய வண்ணம் உள்ளது. 

 

பல கிராமங்களில் உள்ள கடைகளில் இந்த நாணயங்கள் மறுக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட 14 வகையிலான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். அவற்றை செல்லாது எனக் கூறுவதோ அதனைப் பணப்பரிமாற்றத்தின் போது வாங்கவோ அல்லது கொடுப்பதோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ-இன் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புப் பட்டயங்கள் கண்டுபிடிப்பு!

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

alwarthirunagari temple discovered thirumalai naicker copper plate

 

திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்கத் திட்டத்தின் பணிக் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப்பட்டயங்களையும் கண்டறிந்தனர். இதில் இரண்டு மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது ஆகும். செப்புப் பட்டயங்கள் இவ்வூரிலுள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமானவை ஆகும்.

 

இச்செப்புப்பட்டயங்களைப் படித்து ஆய்வு செய்த சுவடியியல் அறிஞர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, "இவை கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் இரண்டு பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும் மற்ற இரண்டு பட்டயங்கள் கோயில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டவை ஆகும்.

 

முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது. இது திருமலை நாயக்கர், வடமலையப்ப பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாக காந்தீஸ்வரம் இறைவன் ஏகாந்த லிங்கத்துக்கு சிறு காலைச் சந்திப் பூசையில் அபிஷேகமும் நைவேத்தியம் செய்யப்பட்ட வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின்படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தது ஆகும். 1944-ல் வெளியிடப்பட்ட "திருமலை நாயக்கர் செப்பேடுகள்" என்ற நூலில் இது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2-வது பட்டயத்தில் கி.பி.1671-ல் காந்தீஸ்வரம் சுவாமி ஏகாந்த லிங்கத்துக்கு பிரதிநாமமாகவும், மகாஜனங்கள், திருமலை நாயக்கர், வடமலையப்ப பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாகவும் விளங்க தர்மதானப் பிரமாணம் வழங்க வல்லநாட்டு நாட்டவருக்கு வடமலையப்ப பிள்ளை கட்டளையிட்டமையால் அவர்கள் கோயிலுக்கு வழங்கிய நில தானம் மற்றும் அதன் எல்லை பற்றி கூறப்பட்டுள்ளது. இரு பட்டயங்களிலும் வழங்கப்பட்ட தானத்தை கெடுக்க நினைப்பவர்கள் நதிக்கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என இறுதியில் குறிப்பிடப்படுகிறது. இவற்றை சிதம்பரநாதன், தன்மகுட்டி முதலியார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

 

3-வது பட்டயம் கி.பி.1866 ஜனவரி 23-ல் எழுதப்பட்டுள்ளது. இதில் இக்கோயில் தர்மகர்த்தா ஆழ்வார்திருநகர் கோகில சங்கரமூர்த்தி முதலியாரின் மகள்கள் அங்கரத்தையம்மை, ஆவுடையம்மை ஆகிய இருவரும் அவர்களின் சந்ததியினரும் கோயிலில் நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் நாலாம் திருநாள் மண்டகப்படியை தொடர்ந்து வழங்கி நடத்திட வழிவகை செய்யப்பட்டதையும், இக்குடும்பத்தார் ஏகாந்தலிங்க சுவாமிக்கு வெள்ளித் தகடு பதித்த ரிஷப வாகனம் செய்து கொடுத்ததையும், ரிஷப வாகனம் பாதுகாப்பு அறையின் திறவுகோல் ஒன்று ஆவுடையம்மையின் வளர்ப்பு மகன் தானப்ப முதலியார் என்ற சங்கரமூர்த்தி முதலியாரின் வசம் இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டயம் 2 படிகள் உருவாக்கப்பட்டதையும், இதை நயினான் ஆசாரி மகன் சுவந்தாதி ஆசாரி எழுதியதையும் தெரிவிக்கிறது.

 

4-வது பட்டயம் கி.பி.1868 பிப்ரவரி 3-ல் எழுதப்பட்டுள்ளது. இது காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலின் விசாரணை கர்த்தாக்களும், ஊர் மக்களும் ஆழ்வார் திருநகரில் இருக்கும் பிச்சன் செட்டியார் குமாரர் நல்லகண்ணு செட்டியார், சர்க்கரை சுடலைமுத்து செட்டியார் குமாரர் ஆழ்வாரய்யன் செட்டியார் ஆகிய இருவரின் பரம்பரையினர் ஏழாம் திருநாள் முதற் கால மண்டகப்படியை வழங்கி நடத்தவும் பட்டு கட்டும் மரியாதை பெற்றுக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது குறித்து கூறுகிறது. மேற்படி குடும்பத்தார் சபாநாயகர் (இறைவன்) எழுந்தருள சப்பரம் செய்து கொடுத்தது பற்றியும் சப்பரம் நிறுத்தி வைக்கப்பட்ட அறையின் 2 சாவிகள் மேற்படி குடும்பத்தார் வசம் இருந்தது பற்றியும் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது. இதை அச்சு பத்திரமாக எழுதியவர் ஆதிநாதரையர் குமாரர் சுப்பையர் என்றும் தெரிவிக்கிறது" என அவர் தெரிவித்தார்.

alwarthirunagari temple discovered thirumalai naicker copper plate

 

மேலும், "பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் பட்டயங்களைப் பாதுகாக்கும் இத்திட்டப் பணி தடையின்றி நடந்திட நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு செயலர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, பதிப்பாசிரியர் ஜெ.சசிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக"  கூறினார்.