Skip to main content

"தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறார் அண்ணாமலை; கேசவ விநாயகத்தோடு ஏற்பட்டுள்ள சண்டைக்கு..." - ராம. சுப்பிரமணியன்

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

hk

 

தமிழக பாஜகவில் கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் கேசவ விநாயகத்துக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்குக் கட்சியைப் பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிகிறது? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

நல்ல செய்திதான், எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கு செய்கின்ற வழிமுறைதான் இது. இதில் தவறில்லை, ஆனால் கட்சியில் யார் யாரையோ சேர்த்து வருகிறார்கள். இது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். அதையும் தாண்டி தவிர்க்கக் கூடிய விஷமும் கூட. எனவே அதில் கவனம் செலுத்தி குற்றவாளிகள் என அடையாளம் உள்ளவர்களைக் கட்சியில் சேர்ப்பதைத் தவிர்த்தால் கட்சி வளர்ச்சிக்கு மிக நல்லதாக இருக்கும். இதை அவர் முயற்சி செய்து நடைமுறைப்படுத்தினால் கட்சிக்கு நல்லது. 

 

அண்ணாமலை அவர்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார், ஆர்எஸ்எஸ் முடிவுக்கு மாற்றாக இவர் தனியாக முடிவு எடுத்துச் செயல்படுகிறார் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

டெல்லியில் மோடி அமித்ஷா என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைத்தான் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் முக்கியப் பிரமுகராக பி.எல்.சந்தோஷ் என்பவர் இருக்கிறார். ஆனால் அவர் இவர்கள் இருவரும் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுத் தலையாட்டிவிட்டுச் செல்வார். அவர்களை மீறி டெல்லியில் எதுவும் நடந்து விடாது என்பது மட்டும் உண்மை.  ஆனால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஜெனரல் செகரட்டரியை ஓரம் கட்டிவிடலாம் என்ற பேச்சுக்களைப் பல வழிகளில் பேசுகிறார்கள்.தொலைக்காட்சி,யூடியூப் என்று பல வழிகளில் இந்த மாதிரியான பேச்சுக்களை முன்வைக்கிறார்கள். 

 

அண்ணாமலை முன்பு சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பழைய ஆட்கள் எல்லாம் வண்டியை விட்டு இறங்கி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியதைப் போல இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு இவர்களை எந்த விதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது, நல்லதைக் கூட அவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்ற கோணத்தில் நினைக்கிறார்கள். தலைவருக்கு மட்டுமே எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கேசவ விநாயகத்துக்கும் அண்ணாமலைக்கும் இடையே உள்ள சண்டையே அதுதான். எனவே தனியாகச் செயல்பட வேண்டும் அவர்கள் நீட்டும் இடத்தில் கையெடுத்து இட வேண்டும் என்பதெல்லாம் கட்சிக்கு நல்லதல்ல.