ஆண்டாள் பக்தர்கள் ஆவேசம்!
வறுபடும் வைரமுத்து!

‘எங்களின் அன்னை ஸ்ரீ ஆண்டாள் கோதை நாச்சியாரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை வன்மையாக கண்டிக்கிறோம்!’ என்று ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பல இடங்களிலும் பேனர்கள் வைத்திருக்கின்றனர்.

“மங்கையர் குல நாயகி – பச்சைத் தமிழச்சி – அறிவியலுக்கே முன்னோடி நம் தெய்வம் ஸ்ரீஆண்டாள் ஆவார். நம் தாயாரைப் பழித்தவர்களை எவர் தடுத்தாலும் விடக்கூடாது. ஆன்மிகப் பேச்சாளர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, ஸ்ரீஆண்டாள் குறித்துப் பேசுவதற்கு வைரமுத்துதான் கிடைத்தாரா? வைரமுத்துவை மட்டுமல்ல, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தினமணி வைத்யநாதனையும் நாம் கண்டித்தே ஆகவேண்டும்.” என்று பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக் அறைகூவல் விடுக்க, இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தேரடியில், ஸ்ரீ மணவாள மாமுனி மடத்தின் ஜீயர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப இராமானுஜ ஜீயர் (24-வது பட்டம்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ரேசன் கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படையுங்கள்!
“ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கே வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து மக்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அவரவருடைய ரேசன் கார்டுகளை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று இராமானுஜ ஜீயர் உலகளாவிய அளவில் இந்த விஷயத்தை மிகவும் சீரியஸாகக் கொண்டு சென்றார்.
கல்லால் எறிந்து பல்லை உடைத்திருக்க வேண்டும்!
பஜ்ரங்தள் சரவணகார்த்திக்கோ “ராஜபாளையத்தில் ஸ்ரீஆண்டாளை இழிவாகப் பேசியபோதே கல்லை எடுத்து வீசி வைரமுத்துவின் பல்லை உடைத்திருக்க வேண்டும். அன்று அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டு, இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றீர்களே என்று பக்தர்கள் என்னிடம் ஆத்திரம் கொள்கிறார்கள்.” என்று ஆவேசம் காட்டினார்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் ‘ஸ்ரீஆண்டாளை இழிவாகப் பேசிவிட்டு தமிழ்நாட்டில் யாரும் நடமாட முடியாது’ என்று கோஷம் எழுப்பியவாறு, கவிஞர் வைரமுத்துவின் படத்தையும், தினமணி நாளிதழ்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
நெய் உண்டு கொழுத்த பஜ்ரங்தள் அவாள்கள்!
பஜ்ரங்தள் முன்னின்று நடத்திய மதரீதியான இந்த ஆர்ப்பாட்டத்தை விருதுநகர் மாவட்ட காங்கிரஸார் அரசியல் ரீதியாகப் பார்க்கிறார்கள். இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் “விருதுநகர் மாவட்டத்தின் முதுகெலும்பே பட்டாசுத் தொழில்தான். அதனைக் காப்பதற்கு பஜ்ரங்தள் இதுவரை குரல் கொடுத்ததில்லை. நெய் நெய்யாக உண்டு, உடல் கொழுத்த பஜ்ரங்தள் அவாள்கள், வைரமுத்து சார் மேல்நாட்டுக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசியதை தவறென்கிறார்கள். கடுமையான உழைப்பினால் முன்னேறிய கவிஞர் வைரமுத்துவின் நிறம் கருப்பு என்பதால்தான், அவருடைய பேச்சு இவர்களுக்குக் கசக்கிறது போலும்.” என்கிறார் காட்டமாக.
நோக்கம் சிறுமைப்படுத்துவதல்ல!
‘ஆளுமைகளை மேம்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயின்றி, சிறுமைப்படுத்துவதல்ல. ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது நோக்கமன்று. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’ என்று சர்ச்சையான பிறகு கூறினாலும், ராஜபாளையத்தில் ‘தமிழை ஆண்டாள்’ என்னும் தலைப்பில் ஆற்றிய கட்டுரைப் பேச்சில், ஆண்டாளை மையப்புள்ளியாக வைத்து, அந்தப் பெண் தெய்வத்தைச் சுற்றி நடந்திருக்கும் நிகழ்வுகளை, அறிவுக்கண் கொண்டு அலசி ஆராய்ந்து, ’இதுவும் ஆன்மிகக் கருத்துக்களே!’ என்று மதங்கள், சாதிகள், வர்க்கபேதம் குறித்தெல்லாம் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
‘ஆண்டாளின் பெருமைகளையே எடுத்துரைத்தேன்’ எனச் சொல்லும் கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைப் பேச்சில் சில துளிகள் இதோ –
ஆண்டாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது!
வைணவத்தின் வளர்ச்சியில் திருப்பாவை செல்வாக்குற்றது.
கடவுள் இல்லாமலும் மதங்களுண்டு. ஆனால் மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற "மெய்ஞ்ஞானம்' வாய்க்கப்பெற்ற பிறகு தன் இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு மக்களை நோக்கி இறங்கி வந்தது.
எல்லாச் சாதியார்க்கும் மதம் தேவைப்பட்டதோ இல்லையோ எல்லாச் சாதியரும் மதத்திற்குத் தேவைப்பட்டார்கள்.
எந்த மதம் சாதிய அடுக்குகளைக் கெட்டிப்படுத்தியதோ அதே மதம் கொண்டு அதை உடைத்தெறியவும் சிந்தித்தார்கள்.
"இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்கள் ஆகின் தொழுமின் கொடுமின் கொண்மின்' -என்று தொண்டரடிப் பொடியாழ்வார் சாதிபேதம் ஒழிந்ததென்று சங்கூதினார்.
வர்க்கபேதம் ஒழியாமல் சாதிபேதம் ஒழியாது என்ற பிற்காலப் பேரறிவை அவர்கள் அக்காலத்தில் பெற்றிருக்கவில்லை.
இறைவன்முன் எல்லாரும் சமம் என்னும் குறுகிய பரவசம் ஒன்றே அவர்களைக் கூட்டுவித்தது;
கொண்டு செலுத்தியது.
பிறப்பு முதல் சீரங்கத்து மாயனோடு மாயமான நாள் வரையிலான ஆண்டாளின் வாழ்வில் உயிருள்ள சில கேள்விகள் ஊடாடுகின்றன.
ஆண்டாள் ஒன்றும் பெரியாழ்வார் பெற்ற பெண் அல்லள். திருவில்லிபுத்தூர் நந்தவனத்தில் திருத்துழாய்ப் பாத்தியில் கண்டெடுக்கப்பட்ட கனகம் அவள். ஆயின் அவள் பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?
பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி?
மரபுகளின் மீதான அத்துமீறல் ஆண்டாள் வாழ்வில் அடிக்கடி நேர்கிறது.
ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வார்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார்.

ஆனால் மொழியின் குழைவிலும், தமிழின் அழகிலும், உணர்ச்சியின் நெகிழ்விலும்,
உரிமையின் தொனியிலும் ஆணாழ்வார்களை விடவும், பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே!
திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்?
கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?
"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றக்' கனாக்காணும் கோதையாள் பாசுரத்தில் தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது.
துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படி?
ஆண்டாள் பாடல்களின் உச்சம் என்று சொல்லலாம் இந்தப் பரவசப் பாசுரத்தை.
கண்ணன் வாய்வைத்த சங்கே சொல்! அவன் இதழில் கற்பூரம் மணக்குமா? தாமரையின் வாசம் வருமா? இனிக்குமா? அதன் சுவையென்ன? மணமென்ன? என்பது பொருள்.

கனவு காணும் வேளையிலும் கலவிகண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படியென்று ஆய்வுலகம் ஆச்சரியமுறுகிறது.
கடவுள் மனித வடிவில் வந்து மனிதப் பெண்ணை மணந்து போவது உண்டு; வள்ளியும் முருகனும் போல. மனித வடிவத்திலேயே கடவுள் காதல் உண்டு; கண்ணனும் ராதையும் போல.
ஆனால் கடவுள் திருவுருவத்தோடு ஒரு மானிடச்சி கலந்தாள் என்பது பூமிதனில் யாங்கணுமே காணாதது.
ஆண்டாள்! விடை அவிழாத வினாக்கள்!
ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple. - பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.
ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது.
இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும், கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் கழித்த பிறகும் ஆண்டாள் அருளிச் செல்லும் அருஞ்செய்தி இதுதான் -
எட்டாதன எட்டுவதற்கும் கிட்டாதன கிட்டுவதற்கும்,
மனிதகுலத்தின் முதல் மூலதனம் நம்பிக்கை மீது கொள்ளும் நம்பிக்கைதான்!
இறைமைக் காதல்கொண்டு, திருப்பாவை பாசுரத்தை, அழகு தமிழில் படைத்திருக்கிறார் ஆண்டாள். உண்மையோ, ஆய்வோ, கற்பனையோ, தான் அறிந்தவற்றை, அதே அமிர்த தமிழில் கட்டுரையாக்கி தந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. கோதையாளின் கனவைப் போற்றுபவர்கள், வைரமுத்துவை ஏனோ தூற்றுகிறார்கள்!
தேவதாசி என்று இழிவுபடுத்தலாமா? என்று பெண் தெய்வம் ஆண்டாளுக்காக இப்போது கொதித்தெழுகிறார்கள். இதே கூட்டம்தான், வாழையடி வாழையாக ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை அன்று தேவதாசிகள் ஆக்கி, அடிமைப்படுத்தி வைத்திருந்தது. சராசரி வாழ்க்கையை அவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்தது. இன்று பெண் தெய்வத்துக்கு ஒரு நீதி! அன்று மனுஷிகளுக்கு ஒரு நீதி! விந்தையான உலகம் இது!
-சி.என். இராமகிருஷ்ணன்