Skip to main content

முன்பே சொன்ன நக்கீரன்... சிவசேனாவை வீழ்த்திய அமித்ஷா - தேசியவாத காங்கிரஸ் வியூகம்... பரபரப்பு பின்னணி

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

 

நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வரும் சிவசேனாவுக்கு பாடம் புகட்ட பாஜக தலைவர்கள் திட்டமிட்டனர். அதற்காக அவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச முடிவு எடுத்தனர் என்று ''சரத்பவாருடன் ஆலோசனை? சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்?'' என்ற தலைப்பில் கடந்த 20.11.2019 அன்று நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேபோல பரபரப்பு திருப்பங்களுடன் மகாராஷ்டிராவில் இன்று காலை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். 


 

amit shah - sarath bhavar


 

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்பதால் அங்கு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. 


 

105 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜக, 56 எம்எல்ஏக்கள் கொண்ட சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது சிவசேனா, தங்களுக்கு இரண்டரை வருடம் முதலமைச்சர் பதவி வேண்டும் என்றும், அதுவும் முதலில் தாங்கள்தான் இரண்டரை வருடங்கள் முதலமைச்சர் பதவியில் இருப்போம் பிடிவாதம் பிடித்தது. இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. 

 

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர். அப்போது தாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று பாஜக கூறியது. இதையடுத்து சிவசேனாவை ஆளுநர் அழைத்தார். சிவசேனா காலஅவகாசம் கேட்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதனிடையே ஆளுநர் பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் ஜனாதிபதி. 

 

இதனால் அதிர்ச்சியடைந்த சிவசேனா, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பாஜகவுக்கு 105 இடங்கள் உள்ளது, உங்களுக்கு 56 இடங்கள்தான் உள்ளது. 56 இடங்களை வைத்துள்ள நீங்கள் முதல் அமைச்சர் பதவியை இரண்டரை வருடம் கேட்கிறீர்கள். நாங்கள் 54 இடங்கள் வைத்துள்ளோம். உங்களுக்கும் எங்களுக்கும் இரண்டு இடங்கள்தான் வித்தியாசம். அப்படியிருக்கும்போது எங்களுக்கு இரண்டரை வருடம் முதல் அமைச்சர் பதவி தந்தால் என்ன என்று கேட்டுள்ளனர். 


 

இதைகேட்ட சிவசேனா, காங்கிரஸ் கட்சியையும் பேசி அழைத்து வாருங்கள். உங்கள் கோரிக்கையை அவர்களை வைத்தும் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறியது. சிவசேனாவுடன் இணைவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன், சரத்பவார் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சி இப்போது உள்ள நிலையில் சிவசேனாவுடன் இணைவது மேலும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் என்ன வேறுபாடு. நாம் அவர்களை எதிர்த்து கடந்த தேர்தல் களத்தில் பேசிவிட்டு இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்தால் மக்கள் ஏற்பார்களா என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளனர். 

 

அப்போது மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு வருவதை தடுக்க வேண்டாம். நாங்களும் அந்த செல்வாக்கான பதவிக்கு வர விரும்புகிறோம் என்றனர். சோனியா இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தலால் அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது.                                      
                                          

இதனைத் தொடர்ந்து சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின. சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல் அமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு துணை முதலமைச்சர் பதவி என்றும், சிவசேனா கட்சிக்கு 14 அமைச்சர்கள் பதவி, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 14 அமைச்சர்கள் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு 12 அமைச்சர்கள் பதவி என பிரித்துக்கொள்வதாக கூறப்பட்டது. முதலமைச்சராக உத்தவ்தாக்கரே இருக்க வேண்டும் என்று தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர் இதற்கு சிவசேனாவும் சம்மதித்தது.
 

இதனிடையே பாஜக தங்களிடம் ஆட்சி அமைக்க தேவையான 145 எம்எல்ஏக்கள் உள்ளனர். எந்த நேரத்திலும் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம் என்று சொல்லி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் குதிரை பேரத்திற்கு போய்விடுவார்களோ என்று அவர்களை பாதுகாத்து வந்தனர்.
 

தேசிவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் சிவசேனா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி இன்று காலை பதவியேற்றது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டது அனைவருக்கும் வியப்பாக இருக்கிறது. 
 

இதுகுறித்து நாம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் விசாரித்ததபோது, ''தேர்தல் முடிவுக்குப் பின்னர் நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டு வரும் சிவசேனாவுக்கு பாடம் புகட்ட பாஜக தலைவர்கள் திட்டமிட்டனர். சிவசேனா வேண்டாம் என்று முடிவு எடுத்த உடனேயே, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச முடிவு எடுத்து, அதன்படி சரத்பவாரை பாஜக மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்துப் பேசியுள்ளனர்.

 
அப்போது, நீங்கள் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அந்தக் கட்சி உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் கிடைத்தது. சிவசேனா, எங்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு பின்னர் நிபந்தனை என்ற பெயரில் ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. எங்களுக்கு செய்த துரோகத்தைப்போல, நாளை உங்களுக்கும் துரோகம் செய்யாதா? காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துவது சாத்தியமாகுமா?  


 

amit shah sarath bhavar



எங்களிடம் 105 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 54 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். நாம் இருவரும் இணைந்து ஏன் ஆட்சி அமைக்கக்கூடாது?. நாம் ஏன் புதிய முயற்சி எடுக்கக்கூடாது?. உங்கள் கட்சிக்கு துணை முதல் அமைச்சர் பதவி உள்பட அமைச்சரவையில் கணிசமான பதவிகளும் தர தயாராக இருக்கிறோம்.  இல்லையென்றால் வேறு ஏதேனும் திட்டமிருந்தாலும் சொல்லுங்கள். சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி இணைய தயாராகும்போது, நீங்கள் எங்களுடன் இணைந்து ஆட்சி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?
 

சிவசேனாவுக்கு பாடம் புகட்ட நாங்கள் சில அரசியல்களை முன்னெடுக்க வேண்டியதாகியிருக்கிறது. அதனால் பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் முதல் அமைச்சர் பதவியை இரண்டரை ஆண்டுகாலம் பகிர்ந்து கொள்ளலாம். ஒருவேளை முதல் இரண்டரை ஆண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருக்க நீங்கள் விரும்பினால் அதனை விட்டுக்கொடுக்க பாஜக தலைமை தயாராக உள்ளது என்கிற ரீதியில் சரத்பவாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி சொல்வதாக தெரிவித்திருக்கிறார் சரத்பவார்.
 

அப்போது, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர், மகாராஷ்டிராவில் நமது கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி பெறுவது கடினம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் அமைச்சரவையில் இடம் பெறலாம். நாம் அமைச்சரவையில் இடம் பெற்று விவசாயிகள் மற்றும் தொழில் நடத்துபவர்களுக்கு சில சலுகைகள், வசதிகளை செய்து தந்தால் காங்கிரஸ் கட்சியைவிட நாம் மேலும் வளர வாய்ப்பு உள்ளது.  
 

சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதைவிட, பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் கூடுதல் இடங்களும் அமைச்சரவையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று வலியுறுத்தியுள்ளனர். அப்போது சரத்பவாரின் மருமகன் அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமருவதற்கு இதுவே சரியான தருணம். உங்களுக்கு கெட்ட பெயர் வரும் என்றால் ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்களை தன்னிடம் விடுங்கள். மற்றவர்களை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த தேர்தல் வரும்போது நமது கட்சியை இணைத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.


 

அஜித்பவாரும் அரசியலில் அனுபவம் உள்ளவர்தான். ஏனோதானோ என்று இந்த விசயத்தில் இறங்க மாட்டார். பாஜகவுடன் ஒரு தெளிவான ஒப்பந்தத்தை போட்டுவிட்டுதான் கூட்டணிக்கு சென்றிருப்பார்'' என்றனர்.
 

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, இந்த குழப்பத்தை தீர்க்கத்தான் சரத்பாவரே சிவசேனாவின் உத்தவ் தாக்ரேவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இன்று நடந்த நிகழ்வை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அஜித்பவாருடன் 12 எம்.எல்.ஏக்கள் மட்டும் தான் சென்று உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது. இந்த விவகாரத்தில் சிவசேனாவுடன் இணைந்தே செயல்படுவோம்.
 

கவர்னர்  மாளிகையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு  தெரியாது.  அஜித் பவார் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்  மீது நடவடிக்கை எடுக்கப்படும். அஜித் பவாரின் முடிவு கட்சிக்கு எதிரானது மற்றும் ஒழுக்கமற்றது. எந்த தேசியவாத காங்கிரஸ்  தலைவரும் அல்லது தொண்டரும் பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைய விரும்ப மாட்டார்கள். கவர்னர்  பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு நேரம் கொடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன், ஆனால் அவர்களால் அதை நிரூபிக்க முடியாது. அதன்பிறகு நாங்கள் முன்னர் தீர்மானித்தபடி எங்கள் மூன்று கட்சிகளும் அரசாங்கத்தை அமைக்கும் என கூறியிருப்பதாக தெரிவித்தனர்.

 

devendra fadnavis ajit pawar


 

நாம் சில அரசியல் விமர்சகர்ளிடம் பேசும்போது, ''எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லாத இடத்திலேயே நம்மால் ஆட்சியை பிடிக்கும்போது, 105 இடங்களை வைத்து நாம் ஆட்சியை பிடிக்காவிட்டால் எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜகவுக்கு எதிரானவர்கள் பாஜகவுக்கு அழிவு தொடங்கிவிட்டது, பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டது என்று விமர்சனம் செய்வார்கள். ஆகையால் இதனை பாஜக கௌரவப் பிரச்சனையாக நினைக்கிறது. அதனால்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பாஜகவினர் தொடர்ந்து பேசி இப்படியொரு திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று சரத்பவார் சொல்கிறார். ஆனால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் உத்தவ்தாக்ரே உடனிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைப்பது நடக்குமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியதில் இருந்தே பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகள் இருந்தால் கூட பேசி முடிவெடுத்துவிடலாம். ஆனால் 3 கட்சிகள் என்பதால்தான் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே சென்றது. அதனை பாஜக பயன்படுத்திக்கொண்டது. அதேபோல ஆழம் தெரியாமல் காலைவிட பாஜக தலைவர்களும் விபரமல்லாதவர்கள் அல்ல'' என்றனர்.