Skip to main content

நீட் தேர்வு குறித்து சூர்யா பேசக்கூடாது என்றால் எதைப் பற்றி அவர் பேச வேண்டும்..? - ஆளூர் ஷாநவாஸ் கேள்வி!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

hj

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு ஹேஷ்டேக் "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக இளைஞர்களால் இந்தக் கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. பிறகு, அதையே டீ - ஷர்ட்டில் ப்ரிண்ட் செய்து பிரபலங்கள் அணிந்து வந்தது அந்த வாக்கியத்துக்கு மேலும் வலுசேர்த்தது.

 

இதுஒருபுறம் இந்திய அளவில் விவாதம் ஆன நிலையில் நீட் தொடர்பான அழுத்தத்தில் தமிழக மாணவர்கள் மூவர் கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டனர். இது தமிழகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தன. இந்த விவகாரம் அனலாக எரிந்துகொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அனல் கக்கும் வார்த்தைகளைக் கொண்ட இரண்டு பக்க அறிக்கையை வெளியிட்டார். அரசியல் கட்சிகளையும் தாண்டி நடிகர் சூர்யாவின் அறிக்கை இந்திய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த பா.ஜ.க அவரை கண்டித்தது. முக்கிய பா.ஜ.க தலைவர்கள் எல்லாம், சூர்யா சினிமாவில் வசனம் பேசுவதைப்போல் பேசக்கூடாது என்று கடுமையான குரலில் பேசினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

" 'நீட்' தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்திருந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்படி 'நீட்' தேர்வு குறித்துப் பேசலாம் என்று பா.ஜ.க தரப்பில் இருந்து கடுமையான வார்த்தைகளில் அவரை விமர்சனம் செய்கிறார்கள். இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

சூர்யா அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டார் என்ற கேள்வி நம் அனைவருக்குமே இயல்பாகவே எழுகின்றது. இந்த நேரத்தில் நீட் தொடர்பாக ஒரு தீர்வை நோக்கி  நகராமல் நடிகர் சூர்யாவை நோக்கி அவதூறு பரப்பி வருகிறார்கள். அவரிடம் கேள்வி எழுப்புகிறார்கள். தனிமனித தாக்குதல் நடத்துகிறார்கள். அவரை கொச்சைப்படுத்துகிறார்கள். சூர்யாவின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறார்கள். அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் உள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். அந்தக் கட்சி அவருக்குப் பின்னால் இருக்கிறது, இவர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் கூறுகிறார்கள். 

 

நீட் தேர்வு கூடாது என்று கூறி போராட்டங்களை நடத்துகிறோம், ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். துண்டறிக்கை வெளியிடுகிறோம். இந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எவ்வளவு கேடு என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்கிறோம். நீட் தேர்வு ஆபத்து என்பதைப் பற்றி பேசுகிறோம். புதிய கல்விக் கொள்கை அனைத்து மாணவ சமூகத்துக்கு எதிரானது என்ற வாதங்களை முன்வைக்கிறோம். இந்த அறிக்கைக்காக நடிகர் சூர்யாவை நேரடி அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அது தேவையில்லாத ஒன்று, அவருடைய பார்வையை அறிக்கை வாயிலாக முன்வைக்கிறார். எனவே அதனை எதிர்க்க வேண்டிய அல்லது அவரைக் காயப்படுத்த வேண்டிய அவசியம் தேவையில்லாத ஒன்று. 

 

Ad

 

சூர்யா கருத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஏற்கிறார். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்கிறார். அப்படி என்றால் அவரின் கருத்தை அ.தி.மு.க ஏற்கிறதா என்பதை அவரே தெளிவுப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சித்தாந்தத்தை அ.தி.மு.க.வும் எதிர்க்கிறதா என்பதை பாமரனும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் அ.தி.மு.க இதனை ஏற்கிறதா என்று விளக்கம் கேட்கிறோம். சூர்யா நம்முடைய கருத்துக்கு வலு சேர்ந்துள்ளார். எனவே நாம் அவருக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் பிரச்சனை ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய எண்ணமாக இருக்க வேண்டும்." இவ்வாறு கூறினார்.