தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி எப்போதும் இல்லாத அளவிற்கு தேர்தல் பரபரப்புடன் இயங்க தொடங்கியுள்ளது. கடந்த மே 22-ம் தேதி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு மயான அமைதி கொண்டிருந்த தூத்துக்குடி தற்போது இரண்டு தனிப்பெரும் அடையாளமிக்க வேட்பாளர்கள் கனிமொழி, தமிழிசை களம் இறக்கப்பட்டதின் மூலம் விஐபி தொகுதியுடன் விறுவிறுப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, தமாக என ஒரு பட்டாளம் பாஜகவிற்கும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் கட்சி, என மற்றொரு பக்கம் திமுக அணி திரட்ட, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் தனிப்பாதையுடன் தேர்தல் சூட்டை கிளப்ப தொடங்கி விட்டனர்.
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் எதனை நோக்கி வாக்குகளை சேகரிக்கிறார் என்கிற கேள்வியும், எதன் அடிப்படையில் கனிமொழி, தமிழிசை போன்றோர் களமிறக்கப்பட்டுள்ளனர் என்கிற புதிரான கேள்வியும் எல்லோர் மனதிலும் ஆழமாக எழுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகா வாரியும் ஒவ்வொரு பிரச்சினைகள் உள்ளது. அதுமட்டுமின்றி பொது பிரச்சனைகளான குடிநீர் பிரச்சனை, விவசாய பிரச்சனை, சுகாதார சீர்கேடுகள், கிராமப்புற அடிப்படை மேம்பாடு சீரமைப்பின்மை, தொழில் வருவாய் இழப்பு குறைபாடுகள், உப்பு உற்பத்திக்கு கூடுதல் விலை, மீனவ வாழ்வாதார பாதிப்புகள், பயிர் காப்பீடு நிலுவை, என பல நூறு பிரச்சனைகள் உள்ள நிலையில் இவற்றையெல்லாம் சரி செய்வோம் என்கிற எண்ணத்திலா அல்லது சரி செய்யப்பட்டு விட்டது என்கிற எண்ணத்தில் ஆளும்கட்சி கூட்டணி பிஜேபியும், எதிர்கட்சி கூட்டணி திமுகவும் தேர்தல் களத்தில் வாக்குகளை பெற வந்துள்ளனர் என்ற ஒற்றை கேள்வி எல்லா தூத்துக்குடி மாவட்ட மக்களிடத்திலும் தோன்றுகிறது.
சில வருடங்களுக்கு முன்பே ஒவ்வொரு தொகுதி வாரியாக கள ஆய்வுகளை கணக்கிட்டு வந்த திமுக, வரும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டால் நூறு சதவீதம் ஜெயித்து விடலாம் என்கிற உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் தான் கனிமொழியை அங்கே நிறுத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. அதிமுக செல்வாக்கு அனைத்தும் ஜெயலலிதா இறப்பிற்கு பின்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு அதிமுக கோஷ்டி சண்டையும், அதன் விளைவாக பல ஆண்டுகளாக அதிமுக தொண்டர்கள் கண்டுகொள்ளப்படாமல் விட்டதே காரணம், அவ்வாறான சந்தர்ப்ப சூழலை தனக்கு சாதகமாக்கி தற்போதைய முதல்நிலை கருத்து கணிப்பில் கனிமொழியின் வெற்றி வாய்ப்பு கனிய தொடங்கி உள்ளது என்றே கூறலாம்.
அதிமுகவின் இரும்பு கோட்டையான தூத்துக்குடியை பாஜகவின் வாக்கு வங்கிக்காக துரும்பாக்கி விட்டனர் இந்த எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் என புலம்புகின்றனர் அதிமுக தொண்டர்கள். தற்போது பாஜகவிற்கு தூத்துக்குடி தொகுதி வழங்கப்பட்டுள்ளதால் இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் ஆதிக்கமாகிவிடும் இதன் மூலம் இனி ஒவ்வொரு வார்டு தேர்தலிலும் கூட நமக்கு வாய்ப்பிருக்காது என்கிற புகைச்சலுடன் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதோடு தினகரன் அணி வேட்பாளரை ஆதரித்து விட வேண்டும் என்ற சிந்தனையுடன் உள்ளனர் அதிமுக விசுவாசிகள்.
என்னதான் மதரீதியாக, ஜாதி ரீதியாக வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டாலும் அதனை நடைமுறைப்படுத்த அதிமுக தொண்டர்கள் தான் அவசியமாக செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். பாஜக பழம் பறிக்க நாம் ஏன் ஏணியாக நிற்க வேண்டும் பறித்த பின் நம்மை வீசி எறியமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என ஒவ்வொரு கிராமப்புற அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் சந்தேக கண்ணோட்டம் எழ தொடங்கியுள்ளது. கட்சியை அடகு வைத்து ஆட்சியை நடத்தும் அளவிற்கு அதிமுகவை கொண்டு சென்ற பன்னீர்செலவம், எடப்பாடி பழனிசாமியைவிட தன்மானத்தோடு மிக பெரிய ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை நம்பி தேர்தலை சந்தித்து விடலாம் என்கிற விரக்தியின் உச்சத்தில் உள்ளனர் தூத்துக்குடி அதிமுக தொண்டர்கள்.
எப்படியாவது எம்பி சீட்டை பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த சித செல்லப்பாண்டியன், சீட் கிடைக்காமல் போனது மட்டுமின்றி மாவட்ட செயலாளர் பதவியும் பறி போனதின் துக்கம் தாளாமல் இலங்கை தீவு ஓய்விற்கே சென்று விட்டார். விளாத்திகுளம் மார்க்கண்டேயனின் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான வெறுப்புணர்வு, தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி கோஷ்டி வசமிருந்த தூத்துக்குடி, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின் பன்னீர்செல்வம் கோஷ்டி வசமாகி உள்ளது என பல வழிகளில் அதிமுக ரணகோலபட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் தூத்துக்குடி தொகுதி அதிமுக வசம் வரும் இல்லையென்றால் கூட்டணி வசம் ஒப்படைக்கப்பட்டு நமக்கான பதவியை இனி வருங்காலங்களில் தக்க வைக்க முடியாது என்பதால் தேர்தல் களப்பணியாற்றினாலும் வாக்களிப்பது மட்டும் பாஜகவிற்கு எதிராக இருக்க வேண்டும் என்கிறது ரகசிய திட்டங்களுடன் அதிமுக வட்டாரங்கள்.