தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நாளான இன்று நீட் விலக்கு கேட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜகவைத் தவிரப் பெருவாரியான கட்சிகளின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பேரவை வாயிலில் பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று அவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகப் பேசினார், அதில், " இன்று காலை அவை தொடங்கியதும் அவசர முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு பிரச்சனைகள் பற்றி அவையின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். முதலாவதாக வாணியம்பாடி அருகே வாசீம் என்ற நாற்பது வயதுடைய இளைஞர் கஞ்சா விற்பதை தட்டிக்கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டுள்ளார். தன் மகனுடன் மசூதிக்கு வந்து தொழுகை செய்துவிட்டுச் செல்லும்போது மர்ம நபர்கள் அவரை படுகொலை செய்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியாகியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினேன்.
அடுத்து இன்றைக்கு நீட் தேர்வு காரணமாக ஒரு உயிர் போய் உள்ளது. அதற்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியிருக்கிறது. ஆனால் அவர்கள் அதற்கான முயற்சிகள் ஏதும் செய்யவில்லை. இதனால் மாணவர்கள் மனம் வெதும்பி இருக்கிறார்கள். மாணவர்களின் பயத்தினை போக்கும் வகையிலான எந்த முயற்சியையும் இதுவரை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மாணவர்களின் உயிரோடு விளையாடுவது போன்று அரசின் செயல்பாடு இருந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒரு விளையாட்டு. இதைத் தமிழக அரசு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் விட்டதன் விளைவு தற்போது வரை அது எதிரொளித்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்கள் அனைத்திலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் தான் தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு வருகிறது. எனவே நாம் விலக்கு பெறுவதைக் காட்டிலும், நாம் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களை அழைத்த செல்ல வேண்டும். கடந்த காலங்களில் அதிமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக விலக்கு வேண்டி பேரவையில் மசோதா தாக்கல் செய்த நிலையில், அதனை திமுகவைத் சேர்ந்த ஆ. ராசா கடுமையாக விமர்சனம் செய்தார். தற்போது இவர்கள் மீண்டும் நாங்கள் மசோதா தாக்கல் செய்து உள்ளார்கள். நாங்களும் இதனை அதனை ஆதரிக்கிறோம். ஆனால் திமுகவினர் இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்" என்றார்.